Tuesday, January 7, 2020

இருபத்திநான்காவது ஸர்க்கம் – தாடகாவனத்திற்குப் போவது



அவ்விடத்தில் நிர்மலமான காலையில் எதிரிகளை அழிப்பவர்களான அவ்விருவர், தினக்கடமையை செய்து, விஷ்வாமித்ரரை முன்னிட்டுக்கொண்டு நதியினுடைய கரையை சேர்ந்தார்கள். மகாத்மாக்களான, விரதத்தில் நிலை கொண்டவர்களான அந்த முனிவர்கள் எல்லோரும் நல்ல ஓடத்தை வரவழைத்து, பின்பு விஷ்வாமித்ரரிடம் சொன்னார்கள், ‘தேவரீர் ராஜபுத்திரர்களை முன்னிட்டுக்கொண்டவராய் ஓடத்தில் ஏறக்கடவீர். பாதுகாப்பான பாதையில் செல்வீராக. காலவிரயம் ஆக வேண்டாம்.

விஷ்வாமித்ரர், ‘அப்படியேஎன்று சொல்லி, அந்த ரிஷிகளை பூஜை செய்து, அவ்விருவர்களோடு கூடினவராய் கடலைநோக்கி ஓடும் நதியை தாண்டினார். இளையவரோடு கூட (ஸ்ரீ)ராமர், நீரின் மத்தியை அடைந்து, அங்கு அதிக கொந்தளிப்புடன் வளர்ந்திடும் அந்த சப்தத்தை கேட்டார். அப்பொழுது (ஸ்ரீ)ராமர் நடுநதியில் முனிவர்களில் சிறந்தவரிடம் கேட்டார், ‘பிளக்கப்பட்ட ஜலத்தினுடைய கொந்தளிப்பான சத்தமானது ஏன்?’

(ஸ்ரீ)ராமருடைய குதூகலத்தோடு கூடின வார்த்தையை கேட்டு, தர்மாத்மா அந்த சப்தத்தினுடைய விசேஷத்தை சொன்னார், ‘நரர்களுள் புலியே, (ஸ்ரீ)ராமா, பிரம்மாவின் மனதால் கைலாச பர்வதத்தில் சரஸ் (அதாவது ஏரி) உண்டாக்கப்பட்டது. அதனால் இது மானஸ் எனப்படும் சரஸ். சரஸினின்று (அதாவது ஏறியினின்று) உண்டான சரயூ (நதி), பிரம்மசரஸிலிருந்து பெருகினது. புண்ணியமானது. அது (அதாவது சரயூ நதி) அந்த ஏறியினின்று பெருகினது. அயோத்யாவை சுற்றியோடுகிறது. ஜாஹ்னவியை (அதாவது கங்கையை) அடைகிறது. இந்த ஈடற்ற சப்தம் அதனுடைய ஜலத்தின் மோதலால் உண்டானது. (ஸ்ரீ)ராமா, மனப்பூர்வமாக நமஸ்காரத்தை செய்.

அதிதார்மிகர்களான அந்த இருவர்கள் அவைகளிரண்டிற்கும் நமஸ்காரத்தை செய்து, தென் கரையை அடைந்து, லகுவான நடையுள்ளவர்களாய் இப்பொழுது நடந்தார்கள். அந்த இக்ஷ்வாகு வம்சத்தவரான நரவரரின் புத்திரர் (அதாவது ஸ்ரீராமர்) கோரரூபமான, ஆள்நடமாட்டமில்லாத வனத்தை கண்டு முனிவர்களுள் சிறந்தவரை கேட்டார், ‘, இந்த காடு புகுவதற்கரிது. சில்வண்டுகளின் நாதம் கொண்டிருக்கிறதும்; பயங்கரமான கொடியமிருகங்களால், கோரமாய் கூவுகிற பறவைகளால் நிரம்பியதும்; பற்பல பயங்கரங்களான சப்தங்களால் கோரமாய் கூவுகிற பட்சிகளாலும், சிங்கம், புலி, பன்றிகளாலும், யானைகளாலும் விளங்குகிறதும்; தவம், அஷ்வகர்ணம், கதிரம் (என்கிற மரங்களாலும்); வில்வம், திந்துகம், பாடலம் (என்கிற மரவிசேஷங்களாலும்), இலந்தை (மரங்களாலும்) அளாவிநிற்கிறதும், பயங்கரமானதுமான இது என்ன காடு?’

மகாதேஜஸ்வியான, மகாமுனி விஷ்வாமித்ரர் அவரிடம் சொன்னார், ‘குழந்தாய், காகுத்ஸ்தா, இந்த பயங்கரமான வனம் என்னவென்று கேட்கப்படட்டும். நரர்களில் உத்தமா, இவ்விரண்டும் முன்பு சுபிட்சமானதும், தேவர்களால் உண்டாக்கப்பட்டது போல் நிர்மிக்கப்பட்ட மலதம், கரூஷம் (என்ற) நாடுகளாயிருந்தன. (ஸ்ரீ)ராமா, முன்பு (ரிக் வேதத்தில் கூறப்பட்ட) வ்ருத்ர வதத்தால் மலத்தாலும், பசியாலும் பீடிக்கப்பட்ட சஹஸ்ராக்ஷனை (அதாவது இந்திரனை) பிரம்மஹத்தி (தோஷம்) பிடித்துக்கொண்டது எப்பொழுதோ, அப்பொழுது தேவர்களும், தபோதனர்களான ரிஷிகளும் அந்த இந்திரனை நீராட்டினார்கள். கலசங்களால் தீர்த்தமாட்டினார்கள். அவருடைய மலத்தை (அதாவது பாவத்தை) விடுவித்தார்கள். இந்த பூமியில்  சரீரத்திலுண்டான மலத்தை நீக்கி, பசியையும் கூட நீக்கி, அதனால் சந்தோஷத்தை அடைந்தார்கள். எப்பொழுது இந்திரன் நிர்மலமானவராய், பசியற்றவராய், பரிசுத்தராய் ஆனாரோ, அப்பொழுது பிரீதியடைந்த பிரபு (அத்)தேசத்திற்கு உத்தமமான வரத்தை கொடுத்தார். என்னுடைய அங்கத்திலிருந்த மலங்களை தரித்தவைகளான இவ்விரண்டு செழிப்பான தேசங்களும் மலதமென்றும், கரூஷமென்றும் உலகில் பெயர் அடையப்போகின்றன.

அறிஞரான இந்திரனால் (அத்)தேசத்திற்கு செய்யப்பட்ட அந்த பூஜையை பார்த்து தேவர்கள் நல்லது, நல்லதுஎன்று அந்த பாகஷாசனனிடம் (அதாவது இந்திரனிடம்) சொன்னார்கள். எதிரிகளை அழிப்போனே (அதாவது ஸ்ரீராமா), இவ்விரண்டு செழிப்பான நாடுகளும் மலதமென்றும், கரூஷமென்றும் நெடுங்காலம் தனதான்யங்களால் மகிழ்ந்திருந்தன. ஓர் காலத்திற்கு பின்பு, உருண்டு திரண்ட கைகளையுடையவனும், பெருமண்டையுள்ளவனும், பெருத்தவனும், அகன்ற முகம் மற்றும் தேகத்தையுடையவனும், பயங்கர உருவமுள்ளவனும், ஷக்ரனுக்கு (அதாவது இந்திரனுக்கு) ஒப்பான பராக்கிரமமுள்ளவனாகிய மாரீசனென்ற ராட்சசன் எவளுக்கு புத்திரனாய், ராட்சச (சுபாவமுடையவனாய்), எப்பொழுதும் பிரஜைகளை பயமுறுத்துகின்றானோ; (அவனின் தாயான) நினைத்த உருவங்கொள்ளவல்லவளும், ஆயிரம் யானைகளுடைய பலத்தை தரிக்கிறவளும், தீமானான சுந்தனுக்கு மனைவியான தாடகை என்பவள் அப்பொழுது இருந்தாள். பத்திரமாய் இரு. ராகவா, மலதம், கரூஷம் இவ்விரண்டு நாடுகளையும் துர்நடத்தையுள்ள தாடகை நித்தம் நாசம் செய்துகொண்டிருக்கிறாள். அந்த இவள், வழியை மறைத்துக்கொண்டு, ஒன்றரை யோஜனையில் வசிக்கிறாள். இனிமேல் தாடகையினுடைய வனம் எங்கோ அங்கு போகவேண்டும். என்னுடைய கட்டளையால் உன் புஜபலத்தை கொண்டு, இந்த துர்நடத்தையுள்ளவளை வெல்லக்கடவாய். இந்த தேசத்தை மீண்டும் முள்ளற்றதாக செய். (ஸ்ரீ)ராமா, கோரமான, வெல்லமுடியாதவளான யட்சிணியால் (அதாவது தாடகையால்) இப்படி அழிக்கப்பட்ட இந்த தேசத்துள் செல்வதற்கு வேறு யாரும் சக்தனாயில்லை. இந்த காடு முழுவதும் யட்சிணியால் இவ்வாறாய் கொடுமையாய் அழிக்கப்பட்டது. அப்பொழுது கூட (திருந்தி) திரும்புகிறாள் இல்லை. இது எல்லாம் உனக்கு சொல்லப்பட்டது.’”

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் இருபத்திநான்காவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment