Sunday, January 12, 2020

இருபத்தாறாவது ஸர்க்கம் – தாடகையின் வதம்



நரவரரின் புத்திரரான (அதாவது அரசரின் புத்திரரான), திடமான விரதமுடைய ராகவர் முனியினுடைய களங்கமற்ற சொல்லைக் கேட்டு கைகூப்பினவராய் ஆகி மறுமொழியுரைத்தார், ‘அயோத்யாவில் குருமார்களின் மத்தியில் மகாத்மாவான தந்தை தசரதரால் நான் கெளஷிகருடைய (அதாவது விஷ்வாமித்ரருடைய) வார்த்தையை சந்தேகமில்லாதபடி செய்யத்தக்கது, என்று கட்டளையிடப்பட்டவனாக இருக்கிறேன். பிதாவினுடைய வார்த்தையின் வழிகாட்டுதலாலும், பிதாவினுடைய வார்த்தையின் கெளரவத்தாலும் அந்த வார்த்தை அலட்சியம் செய்யத்தக்கதில்லை. அந்த நான் பிதாவினுடைய வார்த்தையை கேட்டு, பிரம்மத்தைச் சொல்லுகிறவருடைய (அதாவது ரிஷி விஷ்வாமித்ரருடைய) சாசனத்தால் உத்தமமான தாடகையின் வதத்தை செய்வேன், சந்தேகமில்லை. பசுக்களுக்கும், பிராமணர்களுக்கும் நன்மையுண்டாகும் பொருட்டும், இந்த தேசத்தினுடைய நன்மையின் பொருட்டும், அளவற்ற சக்தியையுடைய உம்முடைய வார்த்தையை இப்பொழுதே செய்ய சித்தன்.

எதிரிகளையழிப்பவர் இப்படி சொல்லி, வில்லின் மத்தியில் முஷ்டியை உறுதியாகப்பற்றி, சப்தத்தால் திசைகளை நிறைப்பவராய் தீவிரமான நாணேற்றலின் கோஷத்தை செய்தார். அந்த சப்தத்தால் தாடகாவனத்தில் வசிக்கின்றவர்கள் பயந்தார்கள். தாடகையும் அந்த சப்தத்தால் அதிகக் கோபமூண்டவளாய் மோகித்தாள். ராட்சசி அந்த சப்தத்தை கேட்டும், கோபித்தவளாய் ஆலோசித்து, குரோதத்தால் மெய்மறந்தவளாய் சப்தம் கிளம்பியது எங்கிருந்தோ (அங்கு) எதிர் ஓடினாள். அந்த ராகவர் கோபங்கொண்ட, கோரமான, கோரமுகமுடைய, உயரத்தால் வெகுவளர்ந்த அவளைப் பார்த்து, உடனே லக்ஷ்மணருக்கு பின்வருமாறு சொன்னார், ‘லக்ஷ்மணா, யட்சிணியின் பயங்கரமான, கோரமான உடலைப்பார். இவளுடைய பார்வையினாலேயே பயந்தவர்களுடைய இதயங்கள் பிளந்துவிடும். வெல்லமுடியாதவளான, மாயாபலமுள்ள இவளை இப்பொழுது திரும்பிப்போனவளாய் மூக்கு, காது இவைகளின் நுணிகளை இழந்தவளாய் செய்கிறேன் பார். பெண்பால் ஆனதால் ரட்சிக்கவேண்டிய இவளை கொல்ல மனமில்லை. ஆதலால் இவளுடைய வீர்யத்தையும், அசையும் திறனையும் வாங்கிவிட வேண்டும் என்பது என் அபிப்பிராயம்.

(ஸ்ரீ)ராமர் இவ்வாறு சொல்லியவளவில் தாடகை குரோதத்தால் மூர்ச்சியுற்றவளாய் (அதாவது கோபாவேசங்கொண்டவளாய்) கைகளை உயரே தூக்கிக்கொண்டு கர்ஜிப்பவளாய் (ஸ்ரீ)ராமரையே எதிர்த்து ஓடிவந்தாள். பிரம்மரிஷியான விஷ்வாமித்ரர் அவளை உடனே ஹுங்காரத்தாலே அதட்டி, ராகவர்களுக்கு ஸ்வஸ்தி (அதாவது நன்மை) உண்டாகட்டும், அப்படியே ஜயத்தையும் ஆசீர்வாதம் பண்ணினார். அந்த தாடகை ஏராளமாக வாரி இறைப்பவளாய், இரண்டு ராகவர்களை அதிகமான புழுதியின் மேகத்தாலே முகூர்த்தகாலம் புலப்படாமல் செய்தாள். அதன்பிறகு மாயையை அடைந்து, மிகப்பெரிய கல்மழையால் ராகவர்களை வாரியெறிந்தாள். அதனால் ராகவர் (அதாவது ஸ்ரீராமர்) கோபங்கொண்டார். விரைவாய் ஓடிவருகிற அவளுடைய மகத்தான கல்மழையை ராகவர் (அதாவது ஸ்ரீராமர்) கணைமழையால் பொடிப்பொடியாக்கி பாணங்களால் (அவளின்) கரங்களை துண்டித்தார். அப்பொழுது புஜங்கள் துண்டிக்கப்பட்டு, களைத்து அருகில் கர்ஜித்துக்கொண்டிருக்கிறவளை செளமித்ரர் (அதாவது லக்ஷ்மணர்) கோபத்தால் காதுகளையும், நுணி மூக்கையும் இழந்தவளாய் செய்தார்.

விரும்பிய உருவங்கொள்ளவல்ல அந்த யட்சி உடனே அநேகவித உருவங்களை செய்து, மறைவை அடைந்தவளாய், மாயையால் மயக்குபவளாய் பயங்கரமான கல்மழையை பொழிபவளாய் ஒலி எழுப்பினாள். அப்பொழுது வீரர்கள் (அதாவது ஸ்ரீராமர் மற்றும் லக்ஷ்மணர்) வஜ்ரம், இடி இவைகளுக்கு ஒப்பான நாணொலியை செய்தார்கள். அந்த ஒலியால் அப்பொழுது மயங்கியவளாய், நெடுநேரம் கழித்து நினைவை அடைந்தவளாக ஆனாள். முற்காலத்தில், நமுசியின் பெண் - விஷ்ணு மற்றும் புரந்தரனை (அதாவது இந்திரனை) எவ்வண்ணமோ, அவ்வண்ணமே அப்பொழுது கோபங்கொண்டவளாய் கல்மாரியை அவ்விருவர்கள் மீது பொழிந்தாள். அனைத்து பக்கித்திலிருந்தும் கல்மாரியால் மூடப்பட்டிருக்கிற அவ்விருவர்களை பார்த்து, ஸ்ரீமானான காதியின் மைந்தர் (அதாவது விஷ்வாமித்ரர்) அப்பொழுது இனி வரப்போகிற வார்த்தையை சொன்னார், ‘(ஸ்ரீ)ராமா, உன்னுடைய தயை போதும். இந்த யட்சி பாவி. துர்நடத்தையுள்ளவள். யாகத்திற்கு இடையூறு செய்பவள். மாயையால் விரைவில் விருத்தி அடைவாள். சீக்கிரத்தில் சந்தியாகாலம் நெருங்குகிறது. அதற்குள்ளேயே இவள் வதைக்கப்படட்டும். சந்தியாகாலங்களில் ராட்சசர்கள் கொல்லமுடியாதவர்களாக ஆகிறார்கள்.

இவ்வாறு சொல்லப்பட்ட அவர் அப்பொழுதே ஒலியைக்கொண்டு பாணம் பிரயோகிக்கும் தன்மையை காண்பிப்பவராய் கல்மாரியை பொழிகின்ற அந்த யட்சியை பாணங்களால் தடுத்தார். மாயாபலமுள்ள அவள் சரங்களின் ஜாலத்தால் தடுக்கப்பட்டவளாய், கர்ஜிப்பவளாய், காகுத்ஸ்தருக்கும் (அதாவது ஸ்ரீராமருக்கும்) லக்ஷ்மணருக்கும் எதிராக ஓடிவந்தாள். வேகத்தோடு மேல்விழுகிற இடிபோல எல்லைமீறி நுழைகிற அவளின் மார்பில் ஓர் பாணம் விடுத்தார். அவள் உடனே பூமியில் வீழ்ந்து மாண்டாள். பயங்கரமான உருவமுள்ள அவளை அழிந்தவளாக பார்த்து, அப்பொழுது சுரபதியும் (அதாவது தேவேந்திரனும்), சுரர்களும் (அதாவது தேவர்களும்) நன்று, நன்றுஎன்று காகுத்ஸ்தரை (அதாவது ஸ்ரீராமரை) நன்றாய்ப் பூஜித்தனர். ஆயிரங்கண்கொண்டவனான புரந்திரன் (அதாவது தேவேந்திரன்) மிகவும் பிரீதி அடைந்தவராய் (பின்வருமாறு) சொன்னார். அவ்விதமாகவே சுரர்கள் எல்லோரும் சந்தோஷித்தவர்களாய் விஷ்வாமித்ரரிடம் (பின்வருமாறு) சொன்னார்கள், ‘முனிவரே, கெளஷிகரே, உனக்கு மங்கலம். இந்த காரியத்தால் இந்திரனோடு கூடிய மருத கணங்கள் எல்லோரும் சந்தோஷமடைந்தார்கள். ராகவரிடத்தில் (அதாவது ஸ்ரீராமரிடத்தில்) ஸ்நேகத்தை காண்பியும். பிராமணரே, சத்தியபராக்கிரமமுள்ள தவத்தின் பலத்தால் வளர்க்கப்பட்ட பிரஜாபதியான ப்ருஷாஷ்வருடைய புத்திரர்களை ராகவருக்கு அறிவிப்பியும். பிராமணரே, (ஸ்ரீராமர்) உம்மை பின்பற்றுவதில் திடமானவர். உமக்கு தகுந்த பாத்திரம், மேலும் சுரர்களுடைய (அதாவது தேவர்களுடைய) மகத்தான காரியமும் ராஜகுமாரர்களால் (தான்) செய்தாகவேண்டியது.

சுரர்கள் எல்லோரும் இவ்விதம் சொல்லி, விஷ்வாமித்ரரை பூஜித்துவிட்டு, மகிழ்ச்சியடைந்தவர்களாய் வந்தவாறு சென்றனர். அதன்மேல் சந்தியாகாலமும் நெருங்கியது. அப்பொழுது தாடகையின் வதத்தால் சந்தோஷமடைந்த முனிவரர் பிரீதியுள்ளவராய் (ஸ்ரீ)ராமரை உச்சியில் முகர்ந்து, இனிவரும் வார்த்தையை சொன்னார், ‘சுபமான பார்வையுடையவனே, (ஸ்ரீ)ராமா, இன்று இரவை இங்கு வசிப்போம். நாளை காலையில் என்னுடைய அந்த ஆசிரமபதத்திற்கு செல்வோம்.

தசரதகுமாரர் விஷ்வாமித்ரரின் வார்த்தையை கேட்டு, களித்தவராய் தாடகையினுடைய அந்த வனத்தில் இரவை சுகமாக வசித்தார். அந்த வனமும், அந்நாளில் அப்பொழுதே சாபம் நீங்கினதாய் சம்பக, அசோக, புன்னாக, மல்லிகை இவைகளால் விளங்குகிறதாய், மாமரங்களாலும், பலாமரங்களாலும், பாக்கு மரங்களாலும், தென்னை மரங்களாலும் அலங்கரிக்கப்பட்டதாய், குளம், கிணறு, தடாகங்களாலும், நீண்ட ஏரிகளாலும் அலங்கரிக்கப்பட்டதாய், மல்லிகைகள் நிறைந்த பொன்மயக்குன்றுகளாலும், மண்டபங்களாலும், சிங்காரிக்கப்பட்டதாய் வனம் (குபேரனுடைய) சைத்ரரதம் (என்ற உத்யானவனம்) போல் ரமணீயமாய் விளங்கிற்று. அந்த (ஸ்ரீ)ராமர் அந்த யட்ச புதல்வியை கொன்று, சுரர்கள் (மற்றும்) சித்தர்களின் சங்கத்தால் புகழப்பட்டவராய் முனிவரோடு கூட காலைப்பொழுதில் எழுப்பப்பட்டவராய் அவ்விடத்திலேயே வசித்தார்.’”

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் இருபத்தாறாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment