Monday, January 6, 2020

இருபத்திமூன்றாவது ஸர்க்கம் – காமாசிரமத்திற்கு செல்வது

(அன்றைய காமாசிரமம் என்பது இன்றைய பிகார் மாநிலத்தில் உள்ள சாப்ரா என்று அறியப்படுகிறது)


இரவு விடிந்தவளவில் மகாமுனிவரான விஷ்வாமித்ரர் புல் படுக்கையில் படுத்திருக்கிற காகுத்ஸ்தரைப் (அதாவது ஸ்ரீராமரை) பார்த்து, பின்வருமாறு சொன்னார், ‘கெளசல்யா மைந்தனே, (ஸ்ரீ)ராமா, நரர்களுள் புலியே, காலை சந்தியாகாலம் நெருங்குகிறது. தெய்வ (சம்மந்தமான) தினக்கடமை செய்யத்தக்கது. எழுந்திராய்.

மகரிஷியினுடைய வெகு கருணையுள்ள வார்த்தையை கேட்டு, நர உத்தமர்களான (அந்த) வீரர்கள், ஸ்நானம் செய்து, அர்க்யம் முதலியவைகளைக் கொடுத்தவர்களாய், உயர்ந்த ஜபத்தை ஜபித்தனர். நித்யகர்மங்களைச் செய்து முடித்தவர்களாய், மகா வீர்யர்கள் தபோநிதியான விஷ்வாமித்ரரை அபிவாதனம் (அதாவது வணக்கம்) செய்து அதி சந்துஷ்டர்களாய் புறப்பட்டவர்களாய் எதிராகயிருந்தார்கள்.

அப்பொழுது புறப்பட்டவர்களாய் மகா வீர்யர்களான அவ்விருவர்கள் சரயூநதியினுடைய சுபமான அந்த சங்கமமிடத்தில் த்ரிபதகா (அதாவது கங்கை) என்கிற புண்ணிய நதியையும், அங்கு அனேகாயிர வருடகாலம் பரமமான தவத்தை புரிகிற, உக்கிர தேஜஸ்ஸையுடைய ரிஷிகளின் புண்ணியமான ஆசிரமபதத்தையும் பார்த்தார்கள். அந்த புண்ணியமான ஆசிரமத்தை பார்த்து,மிகவும் மகிழ்ந்த ராகவர்கள் (அதாவது ஸ்ரீராமர் மற்றும் லக்ஷ்மணர்) மகாத்மாவான அந்த விஷ்வாமித்ரரிடம் பின்வரும் வார்த்தையை சொன்னார்கள், ‘பகவானே! இந்த புண்ணியமான ஆசிரமம் யாருடையது? எந்த நபர் இதில் வசிக்கிறார்? கேட்க விரும்புகிறோம். எங்களிருவர்களுக்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆவல் அதிகமல்லவா!

முனிவர்களில் சிறந்தவர் (அதாவது விஷ்வாமித்ரர்) அவ்விருவர்களுடைய அவ்வார்த்தையை கேட்டு புன்னகித்து சொன்னார், ‘(ஸ்ரீ)ராமா, இது யாருடைய பூர்வ ஆசிரமம் (என்பது) கேட்கப்படட்டும். புத்திமான்களால் காமன் என்று சொல்லப்படுகிறவன் (எவனோ) அந்த கந்தர்பன் (அதாவது மன்மதன்) மூர்த்திமானாய் (அதாவது வடிவமுடையவனாய்) இருந்தான். இவ்விடத்தில் நியமத்துடன் தவம்புரிகிறவராய், (சிந்தனையை) ஓர்முகப்படுத்தியவராய், விவாகமானவராய், மருத (அதாவது வாயு) கணங்களோடு கூடினவராய், காலங்கழிப்பவராய், தேவர்களுக்கு ஈசனான ஸ்தாணுவையும் (அதாவது சிவபெருமானையும்) துர்மதி கொண்டவன் (அதாவது காமன்) கெடுக்கமுயன்றான். மகாத்மாவாலே ஹூம்காரமும் செய்யப்பட்டான். ரகுநந்தனா (அதாவது ஸ்ரீராமா), ரெளத்திரரின் கண்ணாலே எரிக்கப்பட்டான். அந்த துர்மதி கொண்டவனுடைய சொந்த சரீரத்திலிருந்து அனைத்து அங்கங்களும் வீழ்ந்தன. மகாத்மாவால் எரிக்கப்பட்ட அவனுடைய அங்கம் அவ்விடத்தில் அழிந்தது. காமன் தேவர்களுக்கு ஈசனால், குரோதத்தால் சரீரமற்றவனாக செய்யப்பட்டான். ராகவா, அன்று முதல் அனங்கன் (அதாவது உருவமற்றவன்) என்று பெயர் பெற்றான். எங்கு அவன் அங்கத்தை இழந்தானோ, அதுதான் ஸ்ரீயுள்ள (அதாவது செல்வமுள்ள) அங்கநாடு ஆகும். இந்த புண்ணிய ஆசிரமம் அவருடையது. இந்த முனிவர்கள் முன்பு அவருடைய சிஷ்யர்கள். வீரா, (அவர்கள்) தர்மாத்மாக்கள். அவர்களுக்கு பாவம் இல்லை. சுபமான பார்வையுடையவனே, (ஸ்ரீ)ராமா, நாம் இவ்விடத்தில் புண்ணியமான இவ்விரண்டு நதிகளுடைய மத்தியில் இன்று இரவு வசிப்போம். நாளை (கங்கை நதியை) தாண்டுவோம். நரர்களுள் உத்தமா, (ஸ்ரீ)ராமா, இங்கு வசிப்பது நல்லது. நாம் சுகமாய் வசிப்போம். எல்லோரும் ஸ்நானம் செய்தவர்களாய், பரிசுத்தர்களாய், ஜபம் செய்தவர்களாய், அக்னியில் ஆஹுதி அளிப்பதை (அதாவது ஹோமம்) செய்தவர்களாய் புண்ணியமான ஆசிரமம் புகுவோம்.

அங்குள்ள அவர்கள் பேசிக்கொண்டிருக்குமளவில், முனிவர்கள் தவத்தினால் தீர்க்கமான கண்ணால் அறிந்து, மிக மகிழ்ந்தவர்களாய் சந்தோஷத்தை அடைந்தார்கள். குஷிகரின் புதல்வரிடத்தில் (அதாவது விஷ்வாமித்ரரிடத்தில்) அர்க்யத்தையும், பாத்யத்தையும், அப்படியே அதிதி உபசரிப்பையும் (அதாவது விருந்தோம்பலையும்) செய்து, பின்பு (ஸ்ரீ)ராமர் மற்றும் லக்ஷ்மணருக்கு அதிதி கிரியையை (அதாவது விருந்தினர் பூஜையை) செய்தார்கள். அந்த ரிஷிகள் விருந்தோம்பலை செய்துமுடித்து, கதைகளினால் மகிழச்செய்தார்கள். ஓர்முக சிந்தை கொண்டவர்களாய் சந்தியை (அதாவது சந்தியாவந்தனம் எனும் வழிபாட்டை) முறைப்படி ஜபித்தார்கள். அங்கு வசிக்கிற, நல் விரதமுடைய, முனிவர்களோடு கூட, அழைத்துப்போகப்பட்டவர்களாய் அந்த காமாசிரமபதத்தில் அப்பொழுது மிகச்சுகமாக வசித்தார்கள். தர்மாத்மாவான, முனிவர்களில் சிறந்தவரான விஷ்வாமித்ரர் அதிக அழகான கதைகளினால், அதிக அழகான ராஜகுமாரர்கள் இருவரை களிக்கச்செய்தார்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் இருபத்திமூன்றாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment