Sunday, January 5, 2020

இருபத்தியிரண்டாவது ஸர்க்கம் – விஷ்வாமித்ரரின் புறப்பாடு



வசிஷ்டர் இவ்வாறு சொல்லியபொழுது தசரத ராஜா மகிழ்ந்த முகமுடையவராய், அப்பொழுது லக்ஷ்மணரோடு கூடின (ஸ்ரீ)ராமரை அழைத்தார். தாயாராலும், தந்தையான தசரதராலும் ஸ்வஸ்தி (அதாவது ஆசீர்வாதம்) அடைந்தவரும், (வம்ச)புரோகிதரான வசிஷ்டரால் மங்கல(ஸூக்திகளால்) அபிமந்திரிக்கப்பட்டவருமான, பிரியரான புத்திரனை அந்த தசரத ராஜா உச்சியில் மோர்ந்து மிகசந்துஷ்டியடைந்த மனதோடு குஷிகரின் புத்திரருக்கு தந்தார். அவ்விடத்தில் வாயு, செந்தாமரைக்கண்ணனான (ஸ்ரீ)ராமர் விஷ்வாமித்ரருடன் செல்வதை அறிந்து, அப்பொழுது சுகமான ஸ்பரிசமுடையவராய், தூசியில்லாதவராய் வீசினார். மகாத்மா பிரயாணம் புறப்பட்டவளவில் பெரிதான பூமாரியும், தேவதுந்துபியின் சப்தமும், சங்கு, துந்துபி இவைகளின் கோஷமும் உண்டாயிற்று.

முதலில் விஷ்வாமித்ரர் சென்றார். அவருக்குப்பின், பெரும் புகழ்பெற்றவரான பக்கக்குடுமி தரித்தவரான, விற்பிடித்த கையரான (ஸ்ரீ)ராமரும், அவரை செளமித்ரரும் (அதாவது லக்ஷ்மணரும்) பின்தொடர்ந்து சென்றார். அப்பொழுது அம்புறாத்தூணிகளை உடையவர்களாய், கையில் வில்லேந்தியவர்களாய், ஐந்துதலை நாகங்கள் போல், பத்து திசைகளை ஒளிவிளங்கச் செய்கிறவர்களாய், நன்கு அலங்கரிக்கப்பட்டவர்களான, பெரும் ஒளிபொருந்தியவர்களான, குமாரர்களான, அழகிய சரீரமுடைய, சகோதரர்களான ராம-லக்ஷ்மணர் இருவர்களும் பாவகனில் (அதாவது அக்கினியில்) உண்டான குமாரர்கள் (அதாவது கந்தன் மற்றும் விசாகன்) என்று எண்ணுதற்கரிய ஸ்தாணு (அதாவது சிவன்) தேவரை போல், அழகான அஷ்வினிதேவர்கள் பிதாமகரை (அதாவது பிரம்மாவை) (பின்தொடர்வது) போல், குஷிகரின் புத்திரரான, மகாத்மாவான விஷ்வாமித்ரரை, கையில் வில்லேந்தியவர்களாய், கட்டப்பட்ட உடும்புத் தோலினால் செய்யப்பட்ட விரல் உரைகளை உடையவர்களாய், வாள் தரித்தவர்களாய் பின்தொடர்ந்து சென்றார்கள்.

விஷ்வாமித்ரர் சரயூநதியின் தென் கரையில் ஒன்றரை யோஜனை சென்று, ‘(ஸ்ரீ)ராமாஎன்றழைத்து, மதுரமான பின்வரும் வார்த்தையை சொன்னார், ‘குழந்தாய், நீரை எடு. காலவிரயம் வேண்டாம். மந்திரங்களடங்கிய பலா மற்றும் அதிபாலாவை நீ பெற்றுக்கொள் உனக்கு சிரமம் இராது. ஜுரமும், உருவத்தின் வாடுதலும் இராது. மேலும், தூங்குகிற அல்லது சோர்ந்திருக்கிற உனக்கு ராட்சசர்கள் அபாயமுண்டாக்கார்கள். புஜங்களுடைய வீர்யத்தில் (உனக்கு) சமானமானவன் பூமியில் ஒருவனும் இல்லை. (ஸ்ரீ)ராமா, அன்றியும் மூவுலகங்களில் உனக்கு ஒப்பானவன் உண்டாகான். பாவமற்றவனே, உலகில் உனக்கு ஒப்பானவன் செளபாக்கியத்தில் இல்லை; சாமர்த்தியத்தில் இல்லை; ஞானத்தில் பகுத்தறிதலில் இல்லை; பதில்சொல்லவேண்டிய உத்தரத்தில் இல்லை. அனைத்து ஞானத்திற்கும் பலாவும், அதிபலாவும் தாய்கள்; இந்த இரண்டு வித்தைகள் அடையப்பட்டவளவில் உனக்கு சமானமானவன் உண்டாகப்போகிறவன் இல்லை. நரர்களில் உத்தமா, ராகவா, (ஸ்ரீ)ராமா, பலாவும், அதிபலாவும் படிக்கும் உனக்கு பாதையில் பசி, தாகம் உண்டாகமாட்டா. ரகுநந்தனா, இரண்டு வித்தைகளையும் ஜபிக்கிறவனாய் எல்லா உலகத்தாருடைய வணங்கலை அடைவாய்; உலகில் புகழ்பெற்றவனாக ஆவாய். இவ்விரண்டு வித்தைகள் பிதாமகரின் (அதாவது பிரம்மாவின்) புத்திரிகள். பிரசித்தமாய் தேஜஸோடு கூடியவைகள். தார்மிகனே, காகுத்ஸ்தனே, இந்த எல்லா பலவகை குணங்கள் உன்னிடத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது உண்மையே. இவ்விஷயத்தில் சந்தேகமில்லை. தவத்தால் அடையப்பட்ட இவ்விரண்டும் தருவதற்கு நீ ஒருவனே ஏற்றவன். அதனால் உனக்கு ரூபங்கள் பலவிதமாய் ஆகப்போகின்றன.

(ஸ்ரீ)ராமர் மகிழ்ந்த வதனம் உடையவராய், பரிசுத்தராய், ஜலத்தை தொட்டு, சிந்திக்கப்பட்ட பரமாத்மாவையுடைய மகரிஷியிடமிருந்து அந்த வித்தைகளை அவ்விடத்தில் பெற்றுக்கொண்டார். வித்யை கிடைத்தவரான (ஸ்ரீ)ராமர் இலையுதிர் காலத்தில் ஆயிரம் கிரணங்களையுடைய திவாகர (அதாவது சூர்ய) பகவான் போல், அளவற்ற பராக்கிரமமுடையவராய் விளங்கினார். குருவிற்கு செய்யவேண்டிய அனைத்து வழிபாடுகளை விஷ்வாமித்ரரிடத்தில் செய்து, மூவர்கள் அங்கு சரயூ நதிக்கரையில் அந்த இரவை சுகமாய் கழித்தார்கள். குஷிக மைந்தரின் வார்த்தைகளில் ஆனந்தமடைந்தவர்களும், உசிதமில்லாத புல் படுக்கையில் கூட வீற்றிருந்தவர்களுமான தசரத மன்னரின் சிறந்த புதல்வர்களுக்கும் அவ்விரவு சுகமாய் கழிந்தது.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் இருபத்தியிரண்டாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment