Sunday, January 26, 2020

முப்பத்திமூன்றாவது ஸர்க்கம் – பிரம்மதத்தன்-குஷநாபகன்னிகைகளின் விவாகம்



அறிஞரான அந்த குஷநாபருடைய அந்த வார்த்தையை கேட்டு, நூறு கன்னிகைகளும் தலையால் பாதங்களை வணங்கி மொழிந்தனர். ராஜா, சர்வாத்மகரான வாயு தர்மத்தை அனுசரிக்கவில்லை. அசுப மார்கத்தை அடைந்து அவமதிக்க இச்சிக்கிறான். எங்கள் எல்லோராலும் (சரியான வழி) சொல்லப்பட்ட அந்த வாயு காமவசத்தை அடைந்தான். தந்தையுடையவர்களாக இருக்கிறோம். சுதந்திரமாய் இருப்பவர்கள் நாங்கள் இல்லை. தாங்கள் எங்கள் பிதாவை கேளும். எங்களை உமக்கு கொடுப்பாராகில் உமக்கு பாக்கியம். மேற்கூறியவிதம் பேசிய எல்லோரின் வார்த்தையை ஏற்றுக்கொள்ளாத பாவ வழியை அனுசரித்த அந்த வாயுவினால் மிகவும் தாக்குண்டவர்களாக ஆகின்றோம்.

அவர்களுடைய வார்த்தையை கேட்டு, பரமதார்மிகரும், மகா தேஜஸ்வியுமான ராஜா, ஒப்பற்ற நூறு கன்னிகைகளைப் பார்த்து மறுமொழியுரைத்தார், ‘புத்திரிகளே, பொறுமையுடையோர்களுக்குள் செய்யத்தக்கதான பொறுமை நன்றாய் செய்யப்பட்டிருக்கிறது. ஒற்றுமையை அடைந்து என்னுடைய குலமும் கௌரவிக்கப்பட்டது. பொறுமையே பெண்களுக்கும், புருஷர்களுக்கும் அலங்காரமாகும். உங்களுக்கு விசேஷமாய் த்ரிதஷர்கள் (அதாவது தேவர்கள்) விஷயத்தில் அந்த பொறுமையுண்டானது அரிதே. புத்திரிகளே! உங்கள் எல்லாருடைய சமமான பொறுமையை எதோடு ஒப்பிட்டு சொல்லக்கூடும்? புத்திரிகளே, பொறுமையே தானம். பொறுமையே சத்தியம். பொறுமையே யாகம். இன்னும், பொறுமையே புகழ். பொறுமையே தர்மம். பொறுமையினாலேயே உலகம் நிலைநிற்கிறது.

காகுத்ஸ்தா (அதாவது ஸ்ரீராமா), கன்னிகைகளை அனுப்பிவிட்டு, த்ரிதஷர்கள் (அதாவது தேவர்கள்) போன்ற பராக்கிரமமுடைய, மந்திராலோசனையறிந்த ராஜா, மந்திரிமார்களோடு கூட (கன்னிகைகளைக் கல்யாணம் செய்து) கொடுப்பதையும், (கல்யாணம் செய்து) கொடுப்பதின் தேசம் (அதாவது இடம்), காலம், தகுந்த (மாப்பிள்ளை) இடம் இவைகளை செய்து முடித்தல் குறித்தும் ஆலோசித்தார்.

இதன்றி, இதே காலத்தில், விந்தணுவை மேலெழுப்பிய (அதாவது நழுவாத இந்திரியமுடைய), சுப ஆச்சாரமுடைய, சூலீ (என்ற) பெயர்கொண்ட மாமுனி பிரம்ம தியான தவத்தை புரிந்தார். இந்நிலையில், தவம் புரிகிற அந்த ரிஷியை ஊர்மிளையின் மகளான ஸோமதை என்று பெயருள்ள கந்தர்வப்பெண் அக்காலத்தில் பணிவிடை பண்ணிக்கொண்டிருந்தாள். உமக்கு நன்மையுண்டாகட்டும். தர்மிஷ்டையான அவள், அவரை (சரியாய்) வணங்கியவளாய் ஆகி, பணிவிடை செய்வதில் அர்பணிப்புள்ளவளாய் வசித்தாள்.ஓர் காலத்தில் குரு அவளிடம் சந்தோஷமடைந்தவராய் ஆனார். ரகுநந்தனா, காலம் உசிதமாய் இருந்ததாலேயே அவர் அவளைப் (பார்த்து) பின்வருமாறு சொன்னார், ‘மிகுந்த சந்தோஷமடைந்தவனாக இருக்கிறேன். உனக்கு நலம் உண்டாகட்டும். உனக்கு பிரியமானது என்ன? செய்கிறேன்.

பேச்சில் சமர்த்தரான முனிவரைப் பார்த்து மிகுந்த சந்தோஷமடைந்தவராக தெரிந்துகொண்டு, அதிக பிரீதியடைந்த பேசத்தெரிந்த மதுரமான ஸ்வரமுள்ள கந்தர்வப்பெண் சொன்னாள். பிரம்ம சம்பந்தமான தேஜஸ்ஸால் உயர்ந்தவர். பிரம்மாவிற்கு நிகரானவர். மகாதபஸ்வி. பிரம்மசம்பந்தமான, தவத்தோடு கூடின தார்மிகனான புத்திரனை இச்சிக்கிறேன். உமது திருவருள் வேண்டும், பதியில்லாதவளாக இருக்கிறேன். ஒருவனுக்காகிலும் மனைவியாக நான் இல்லை. பிராமணரை சரணமடைந்த எனக்கு புத்திரனை மாத்திரம் அளிக்க உரியவராகிறீர்.

காகுத்ஸ்தா, அக்காலத்தில் நல் தார்மிகரான குஷநாபரென்ற அந்த ராஜா பிரம்மதத்தருக்கு நூறு கன்னிகைகளையும் விவாகம் செய்து நிச்சயம் செய்தார். மகாதேஜஸ்வியான ராஜா, அந்த மகீபதியான (அதாவது வேந்தரான) பிரம்மதத்தனை அழைத்து மிகசந்தோஷமடைந்த மனதோடு நூறு கன்னிகைகளையும் (விவாகம் செய்து) கொடுத்தார். ரகுநந்தனா, தேவபதியை (அதாவது தேவேந்திரனை) போல் மகீபதியான பிரம்மதத்தன், அவர்களுடைய கைகளை அப்பொழுது கிரமப்படி பிடித்துக்கொடுத்தார். கை பற்றப்பட்டவளவில் அக்காரணத்தால் அப்போதிலிருந்து குரூபம் நீங்கினவர்களாய், மனக்கவலை நீங்கினவர்களாய் ஆனார்கள். நூறு கன்னிகைகளும் அதிக வைபவத்தோடு கூடி விளங்கினர். அந்த மகீபதியான குஷநாபன் வாயுவினால் விடப்பட்டவர்களாக பார்த்து, வெகு சந்தோஷமடைந்தவராய் ஆனார். இன்னும் மேல்மேல் ஆனந்தத்தை அடைந்தார். மேலும், மகீபதியான கல்யாணமான பிரம்மதத்தன் என்கிற ராஜாவை அக்காலத்தில் மனைவிமார்களோடு கூடியவராய் உபாத்யாயர்களோடு கூடினவராக அனுப்பினார். கந்தர்வ பெண்ணான ஸோமதை மிகக்களிப்புற்றவளாய் அந்த கன்னிகைகளை கண்டு, தழுவி, இன்னும் அந்த மருமகள்களையும் புத்திரனுடைய உத்தமமான (பாவநிவர்த்தி நிமித்தம் செய்துகொண்ட வைதீக) கர்மத்தையும், குஷநாபரையும் தக்கவாறு புகழ்ந்து மகிழ்ந்தாள்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் முப்பத்திமூன்றாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment