Friday, January 24, 2020

முப்பத்தியிரண்டாவது ஸர்க்கம் – கௌஷிக வம்ச வர்ணனை



பிரம்மாவின் குமாரரான, மகானான, மகாதபஸ்வியான, விரதங்களையும் தர்மங்களையும் தவறாது நடத்துபவரான, நல்ஜனங்களை உபசரித்து பூஜிப்பவரான குஷர் என்பவர் இருந்தார். ரகுநந்தனா, அந்த மகாத்மா தனக்குத்தகுந்த நற்குலத்தில் பிறந்த வைதேஹியினிடத்தில் குஷாம்பன், குஷநாபன், அதூர்ரஜஸ் மற்றும் வஸு (என்று) தம்மைப்போன்ற நான்கு பிள்ளைகளை உண்டாக்கினார். குஷர் க்ஷத்ரிய தர்மத்தின் மீது கொண்ட ஆவலால், ஒளியையுடைய, மகா உற்சாகமுடைய, தர்மிஷ்டர்களான, சத்தியவாதிகளான அந்த புத்திரர்களிடம் சொன்னார், ‘புத்திரர்களே, பரிபாலனம் (அதாவது ரட்சித்தல்) செய்யப்படட்டும். ஏராளமான தர்மத்தை அடையுங்கள்.

குஷருடைய வார்த்தையை கேட்டு உலகத்திற்கு இஷ்டர்களான நான்கு நரவரர்கள் எல்லோரும் அப்பொழுது புரங்களை (அதாவது பட்டணங்களை) நிர்மாணித்தார்கள். மகாதேஜஸ்வியான குஷாம்பன் கௌஷாம்பி எனும் பட்டணத்தை நிர்மித்தார். தர்மாத்மாவான குஷநாபன் மஹோதயம் என்கிற பட்டணத்தை நிர்மித்தார். (ஸ்ரீ)ராமா, வேந்தரான அதூர்ரஜஸ் தர்மாரண்யம் என்கிற சிறந்த பட்டணத்தை நிர்மித்தார். ராஜாவான வஸு கிரிவ்ரஜத்தை நிர்மாணம் செய்தார். (ஸ்ரீ)ராமா, இந்த வஸுமதி (என்கிற தேசம்) மகாத்மாவான அந்த வஸுவினுடையது. இந்த சிறந்த ஐந்து பர்வதங்கள் அதைச்சுற்றி அழகாக அமைந்திருக்கின்றன. (ஸ்ரீ)ராமா, அழகான மகத தேசத்திலுண்டான (இந்த) பிரசித்திபெற்ற நதி மகததேசங்களை சுற்றி ஓடுகிறது. ஐந்து முக்கிய மலைகளின் மத்தியில் மாலையைப்போன்று விளங்குகிறது. (ஸ்ரீ)ராமா, அந்த இது மகததேசத்திலுண்டானது. அந்த மகாத்மா வஸுவினுடையது. (ஸ்ரீ)ராமா, கிழக்கு நோக்கிவருகிறது, நல் வயல்களமைந்தது, செழிப்புற்ற பயிர்களால் விளங்குகிறது.

ரகுநந்தனா, தர்மாத்மாவான ராஜரிஷி குஷநாபன் க்ருதாசியிடம் ஒப்பற்ற நூறு கன்னிகைகளை உண்டாக்கினார். ராகவா, இளமைபருவமடைந்த அழகான, நலரூபமுள்ள, நன்கு அலங்கரிக்கப்பட்ட, சிறந்த ஆபரணங்களால் சிங்காரிக்கப்பட்ட அவர்கள் மழைக்காலத்து மின்னற்கொடிகள் போல் சிங்காரத்தோட்டத்தை அடைந்து, பாடுபவர்களாயும், நடனம் ஆடுபவர்களாயும், வாத்தியங்களை வாசிப்பவர்களாயும் அதிக மகிழ்வை அடைந்திருந்தார்கள். இனிமையான சர்வ அங்கங்களையுடைய, புவியில் ரூபத்தில் ஒப்பற்றவர்களான அவர்கள் சிங்காரத்தோட்டத்தை அடைந்து, அவர்கள் மேகத்தினிடையில் நட்சத்திரங்கள் போல இருந்தார்கள். அனைத்து (உயிரினங்களுக்கும்) ஆத்மகனான வாயு, இளமைரூபத்தோடு விளங்குகிற எல்லா குணங்களோடு அமைந்த அவர்களைப் பார்த்து இவ்வாறான வார்த்தையை சொன்னார், ‘நான் உங்கள் எல்லோரையும் விரும்புகிறேன். எனக்கு மனைவிகளாய் ஆகுங்கள். மானிட வடிவத்தை தியாகம் செய்யுங்கள். தீர்க்கமான ஆயுளை அடையுங்கள். எப்பொழுதும் விசேஷமாய் மானுடத்தில் இளமை பருவம் நீடித்து நில்லாதது.ஆதலால் அட்சயமான இளமை பருவத்தை அடைந்தவர்களாய் அமரப்பெண்களாய் ஆகுங்கள்.

நூறு கன்னிகைகளும் அந்த தடுப்பதற்கரிய தொழிலையுடைய வாயுவின் அந்த வார்த்தையை கேட்டு, அதனால் சிரித்து, அவர்கள் (பின்வரும்) வாக்கியத்தை சொன்னார்கள், ‘உத்தம சுரரே (அதாவது தேவரே), தாம் அனைத்து உயிரினங்களுடைய உடம்பினுள் புகுந்துசஞ்சரிக்கிறீர். எல்லோருமே உமது மகிமையை அறிந்தவர்கள். ஏன் எங்களை அவமானம் செய்கிறீர்? உத்தம சுரரே, குஷநாபரின் பெண்களான நாங்கள் எல்லோரும் தேவனானாலும் உம்மை ஸ்தானத்திலிருந்து (அதாவது பதவியிலிருந்து) தள்ளிட சமர்த்தர்கள். ஆனபோதிலும் தவத்தை ரட்சிக்கின்றோம். துர்மதியுள்ளவரே, சத்தியவாதியான தந்தையை அவமதியோம். அவர் காலனாய் ஆகவேண்டாம். தர்மத்தோடு சுயமாய் பதியை அடைந்துகொள்ளுகிறோம். தந்தையல்லவோ எங்களுக்கு பிரபு? அவர் சிறந்த தெய்வம். ஆதலால் எங்களுடைய பிதா எவருக்கு கொடுக்கிறாரோ, அவரே எங்களுக்கு கணவன் ஆவார்.

பிரபுவான வாயு பகவான் அந்த வார்த்தையை கேட்டு, கடும் கோபங்கொண்டவராய் அவர்களுடைய எல்லா அவயவங்களுள் புகுந்து முடமாக்கினார். வாயுவினால் முடக்கப்பட்டவர்களாய் அந்த கன்னிகைகள் மனம் கலங்கியவர்களாய், வெட்கமுடையவர்களாய், கண்ணீரோடுகூடின விழிகளையுடையவர்களாய் அரசனுடைய வீட்டினுள் புகுந்தார்கள். புவியில் விழுந்தார்கள். அந்த ராஜா அந்த அன்பிற்குரிய, அதிக அழகுள்ள கன்னிகைகளை துக்கித்தவர்களாயும், முடக்கப்பட்டவர்களாயும் பார்த்து திடுக்கிட்டவராய் அப்பொழுது இவ்விதம் சொன்னார், ‘புத்திரிகளே, இதென்ன? சொல்லப்படட்டும். எவன் தர்மத்தை அவமதித்தான்? எவனால் கூனிகளாக, சுழன்றவர்களாக பண்ணப்பட்டவர்களானீர்கள்? (ஏன்) எல்லோரும் பதில் சொல்லாமலிருக்கிறீர்கள்? புத்திரிகளே, இந்த நிந்திக்கத்தக்க காரியம் எவனுடையது? அதை கேட்க இச்சைகொள்கிறேன்.ராஜா இவ்வாறு பெருமூச்செறிந்து அப்பால் அமைதியை அடைந்தார்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் முப்பத்தியிரண்டாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment