(சோனா நதி)
“ஏற்றுக்கொண்ட காரியத்தை செய்தவர்களான, சந்தோஷமடைந்தவர்களான, வீரர்களான
ராமலக்ஷ்மணர்கள் அந்த இரவையும் அங்கேயே களிப்புற்ற மனதோடு கழித்தார்கள். இரவு
விடிந்தவளவில் காலைக்கடன்களை முடித்தவர்களான ஒன்றுசேர்ந்திருக்கிற இருவர்கள்
விஷ்வாமித்ரருக்கும் மற்ற ரிஷிகளுக்கும் முன்வந்து சேர்ந்தார்கள். பாவகனை (அதாவது அக்னியை) போல் ஜொலிக்கின்ற முனிவர்களுள்
சிறந்தவரை அபிவாதனம் செய்து (அதாவது வணங்கி), மதுரமாய் பேசுகிறவர்கள், மதுரமாயும்
கம்பீரமாயுமுள்ள வாக்கியத்தை சொன்னார்கள், ‘முனிவர்களுள் புலியே, கிங்கரர்களான
(அதாவது கட்டளையிடும் வேலையை
செய்பவர்களான), அருகில் காத்திருக்கிற நாங்களிருவர்கள் இதோ இருக்கிறோம்.
இஷ்டம்போல் ஆணையிடும். எந்த சாசனத்தையும் செய்துமுடிக்கிறோம்.’
“அவ்விருவர்களில் இவ்வாறு சொல்லப்பட்ட மகரிஷிகள் எல்லோரும்
அப்பொழுது விஷ்வாமித்ரரை முன்னிறுத்தி,
(ஸ்ரீ)ராமருக்கு (பின்வரும்) வார்த்தையை சொன்னார்கள், ‘நரர்களுள்
சிறந்தவனே, மிதிலை நகரத்தவரான (மகாராஜா) ஜனகருடைய வெகு தர்மிஷ்டமுள்ள யாகம்
நடக்கப்போகிறது. அங்கு நாங்கள் செல்லப்போகிறோம். நரர்களுள் புலியே, நீயும்
எங்களுடன் கூட வருவாயாக. அவ்விடத்தில் ஆச்சர்யமான, ரத்தினமான
வில்லையும் நீயே பார்க்க தக்கவனாகிறாய். நரர்களுள் சிறந்தவனே, அளவற்ற
பலமுடைய, மிகவும் ஒளிபொருந்திய, போற்றத்தக்க அது முன்னர்
யாக சதஸ்ஸில் (அதாவது குழுமத்தில்) தெய்வங்களால்
கொடுக்கப்பட்டது. இதனுடைய நாணேற்றுதலை செய்ய சக்தர்கள் தேவர்கள் இல்லை; அசுரர்கள்
இல்லை; ராட்சசர்களும் இல்லை; மானுடர்கள்
எவ்விதத்திலும் இல்லை; கந்தர்வர்களும் இல்லை. அந்த வில்லினுடைய வீர்யத்தை அறிய
விரும்புகிற மகாபலவான்களான வேந்தர்கள்,
ராஜபுத்திரர்கள்
நாணேற்றக்கூட சக்தர்களாயில்லை. நரர்களுள் புலியே, காகுத்ஸ்தா, மகாத்மாவான
மைதிலருடைய (அதாவது மிதிலை
தேசத்தவருடைய என்றும் இங்கு ஜனகருடைய என்று பொருள் படும்) யாகத்தையும் அங்கு
பார்க்க அற்புதமான அந்த வில்லையும் காண்பாய். நரர்களுள் புலியே, அந்த
உத்தமமான அழகிய நடுப்பகுதியையுடைய வில்லானது அந்த மைதிலரால் அனைத்து தேவர்களோடு
யாகத்தின் பயனாய் யாசித்து அடையப்பட்டது. ராகவா, அந்த
அரசருடைய மாளிகையில் யாகத்தினால்
பெறப்பட்ட (அதனை) விதவிதமான
வாசனைப்பொருட்களாலும், அகில்கட்டையின் பரிமள தூபங்களினாலும் அர்ச்சிக்கப்படுகிறது.’
“இவ்வளவு சொல்லியபின்னர் முனிவரர் (அதாவது விஷ்வாமித்ரர்) (கூறினார்), ‘சித்தியடைந்த
நான் சித்தாசிரமத்திலிருந்து வடக்கில் ஜாஹ்னவீ கரையில் (அதாவது கங்கைக்கரையில்) ஹிமவந்தம் என்கிற பர்வதத்தை
நோக்கி சொல்லப்போகிறேன். உங்களுக்கு ஸ்வஸ்தி (அதாவது நலம்) உண்டாகட்டும்,’ (என்று ஆசீர்வதித்து) அத்தருணத்தில் வனதேவதைகளை
வேண்டிக்கொண்டு, ரிஷி சங்கத்தோடு கூடினவராய், காகுத்ஸ்தர்களோடு
கூடினவராய் பிரயாணத்தை செய்தார். அப்பொழுது ஒப்பற்ற சித்தாசிரமத்தை பிரதக்ஷிணம் (அதாவது வலம் வருவதை) செய்து, வடக்கு
திசையை உத்தேசித்து புறப்பட ஆரம்பித்தார். போகின்ற அந்த முனிவரரை அனுசரித்து
செல்வோராய் வேதம் ஓதுபவர்களுடைய நூற்றுக்கணக்கான வண்டிகளும் யாத்திரையில்
பின்சென்றது. சித்தாசிரமத்தில் வசிக்கின்ற மிருகங்கள், பறவைகள்
இவைகளின் கூட்டங்களும் மகாத்மாவான,
மகாமுனியான
விஷ்வாமித்ரரையே பின்தொடர்ந்தன. பறவைகளின் சங்கத்தையும், மிருகங்களையும்
அந்த இடத்திற்கே திருப்பி அனுப்பினார். அந்த முனிகணங்கள் தூரமான அத்வானத்தை (அதாவது வழியை) கடந்து சென்று, திவாகரன் (அதாவது சூர்யன்) அஸ்தமிக்கையில் ஷோணைநதிக்கரையை (அன்றைய
ஷோணை நதி இன்றைய சோனா நதியாகும்) சேர்ந்தவர்களாய் வாசம் செய்தார்கள். தினகரன் (அதாவது
சூர்யன்) ஆஸ்தமனத்தை அடைந்தவளவில் அவர்கள் ஸ்நானம் செய்து, அக்னிஹோத்ரம்
(வேள்வியை) செய்தவர்களாய், அளவற்ற தேஜஸ்
உடையவர்களாய், விஷ்வாமித்ரரை முன்னிட்டு அமர்ந்தார்கள். செளமித்ரரோடு (அதாவது லக்ஷ்மணரோடு) கூடின (ஸ்ரீ)ராமரும் அந்த
முனிவர்களை எல்லாம் பூஜித்து,
பிறகு அறிஞரான
விஷ்வாமித்ரருடைய முன்னிலையில் உட்கார்ந்தார். இந்த நிலையில் மகாதேஜஸ்வியான (ஸ்ரீ)ராமர் குதூகலத்தோடு கூடினவராய் முனிவர்களுள்
புலியைப்போன்றவரான, மகாமுனியான விஷ்வாமித்ரரை (பின்வருமாறு) கேட்டார், ‘பகவானே, செழிப்பான
காடுகளால் ஒளிரும் இது யாருடைய தேசம்?
கேட்க இச்சைக்கொள்கிறேன்.
உமக்கு மங்கலம். உள்ளபடி சொல்ல உரியவராகிறீர்.’ நல்விரதமுடைய
மகாதபஸ்வி (அதாவது விஷ்வாமித்ரர்)
(ஸ்ரீ)ராமரின் வாக்கியத்தால் ஏவப்பட்டவராய் ரிஷிகளின் மத்தியில் அந்த
தேசத்தைப்பற்றிய எல்லாவற்றையும் கதைத்தார்.”
|| இவ்வாறாய்
வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் முப்பத்தோராவது
ஸர்க்கம் முற்றிற்று ||
No comments:
Post a Comment