Thursday, January 2, 2020

இருபதாவது ஸர்க்கம் – தசரதரின் மறுப்பு



அரசருள் சிறந்தவர் (அதாவது தசரதர்), விஷ்வாமித்ரருடைய அந்த சொல்லாடலைக் கேட்டு, ஓர் முகூர்த்த நேரம் நினைவிழந்தவராய், கொஞ்சம் மூர்ச்சை தெளிந்தவராய் இதை சொன்னார்.

செந்தாமரைக்கண்ணனான என் (ஸ்ரீ)ராமன் பதினாறு வருடம் கூட ஆகாதவன். இவனுக்கு ராட்சசர்களுடனான யுத்த யோக்கியதை உள்ளதாய் காணேன். எதற்கு நான் பதியான ஈசனோ; இது அக்ஷெளஹிணீ (சேனை) பூரணமாய் உள்ளது (ஓர் அக்ஷெளஹிணீ சேனையில் 21,870 தேர்ப்படையும்; 21,870 யானைப்படையும்; 65,610 குதிரைப்படையும்; 109,350 காலாட்படையும் கொண்டது). இதனாலே சூழப்பட்டவனாய் நான் சென்று, அந்த ராட்சசர்களோடு யுத்தம் செய்வேன். சூரர்களான, வெகு பராக்கிரமசாலிகளான, அஸ்திரங்களில் தேர்ந்தவர்களான இந்த என்னுடைய வேலையாட்களே (அதாவது படைவீரர்களே) ராட்சச கணங்களோடு யுத்தத்திற்கு யோக்கியதையானவர்கள். (ஸ்ரீ)ராமனை அழைத்துப்போக வேண்டாம். நான் ஒருவனாய் கையில் வில்லேந்தியவனாய் போர்முனையில் பாதுகாப்பவனாய் எதுவரையில் உயிர் தரிப்பேனோ; அதுவரையில் ராட்சசர்களோடு போர்புரிவேன். அந்த விரத செயல்முறையை நன்கு ரட்சிக்கப்பட்டதாக ஆகப்போகிறது. அங்கு நான் போவேன். (ஸ்ரீ)ராமனை அழைத்துப்போக வேண்டாம். சிறுவன் அன்றோ, பயிற்சியில்லாதவன். அன்றியும், பலம் பலவீனத்தையும் அறியான். அஸ்திரபலம் பொருந்தியவனாய் இல்லை. போர்புரிய வல்லவனும் இல்லை. இவன் ராட்சசர்களுக்கு யோக்கியதையுள்ளவனும் இல்லை. அவர்கள் நிச்சயம் மாயப்போர் புரிபவர்கள் அன்றோ! முனிவர்களுள் சிறந்தவரே, (ஸ்ரீ)ராமனிடத்தினின்று பிரிந்து (ஓர்) முகூர்த்த நேரம் கூட உயிரை வைத்திருக்க பொறுக்கமாட்டேன். ஆகையால், (ஸ்ரீ)ராமனை அழைத்துப்போக வேண்டாம். நல் விரதமுடையவரே, பிராமணரே, ராகவனை (அதாவது ஸ்ரீராமனை) அழைத்துப்போக இச்சைகொள்கிறீர் என்றால் சதுரங்க சைன்யத்தோடு கூடினவனாய் என்னோடு கூடினவனாய் அழைத்துப்போம். கெளஷிகரே (அதாவது விஷ்வாமித்ரரே), அறுபதாயிரம் வருடங்கள் ஆன எனக்கு இவன் சிரமத்தின்பேரில் பிறவியுற்றவன். (ஸ்ரீ)ராமனை அழைத்துப்போக வேண்டாம். எனக்கு நால்வர்களான புத்திரர்களுக்குள், தர்மங்களுக்கு முக்கியனான மூத்தவனிடமே பற்று அதிகம். ஆகையால், (ஸ்ரீ)ராமனை அழைத்துப்போக வேண்டாம். அந்த ராட்சசர்கள் எப்படிப்பட்ட வீர்யமுடையவர்கள்? யாருடைய புத்திரர்கள்? அன்றியும், அவர்கள் யாவர்? எவ்வித உருவமுடையவர்கள்? முனிபுங்கவரே, மேலும் இவர்களை எவர்கள் ரட்சிக்கிறார்கள்? பிராமணரே, என்னுடையவர்களான (படை)பலத்தாலேயும், என்னாலேயும், (ஸ்ரீ)ராமனாலேயும் மாயப்போர் புரிகிறவர்களான அந்த ராட்சசர்களுக்கு எப்படி எதிர்த்தல் செய்யத்தக்கது? பகவானே, துஷ்ட சுபாவமுள்ள அவர்களுடைய யுத்தத்தில் நான் எப்படி இருக்கவேண்டும்? எனக்கு எல்லாவற்றையும் சொல்லும். ராட்சசர்கள் வீர்யத்தால் கர்வமுடையவர்கள் அன்றோ!

விஷ்வாமித்ரர் அவருடைய அந்த வார்த்தையை கேட்டு பதில் சொன்னார், ‘புலஸ்த்ய வம்சத்தில் பிறந்த ராட்சசன் ராவணன் என்று பெயர். அவன் மகாபலசாலியாய், மகாவீர்யவானாய், பிரம்மாவால் வரம் கொடுக்கப்பட்டவனாய், அநேக ராட்சசர்களால் சூழப்பட்டவனாய், மூவுலகத்தை மிகவும் தொந்தரவு செய்கிறான். சாட்சாத் வைஷ்ரவணனின் (அதாவது குபேரனின்) உடன்பிறந்தவனான, முனி விஷ்ரவஸினுடைய புத்திரனான ராட்சசாதிபதியான ராவணன் மகா வீர்யவானென்று கேள்விப்பட்டிருக்கிறேன். மகா பலவான். யாகத்திற்கு எப்பொழுதும் இடையூறு விளைவிப்பவன். ஒருக்கால் (அவன் நேரடியாக) இல்லையென்றால் அவனாலேயே ஏவப்பட்டவர்களான அந்த விரும்பியபடி உருவங்கொள்ளவல்ல ராட்சசர்களான மாரீசனும், சுபாஹுவும் யாகத்திற்கு இடையூறை செய்வார்கள்.

இவ்விதம் அந்த முனிவரால் சொல்லப்பட்ட ராஜா அப்பொழுது முனிவரைப்பார்த்து சொன்னார், ‘துராத்மாவான அவனுடன் யுத்தத்தில் எதிர்த்துநிற்க சக்தன் நானே இல்லை. தர்மமறிந்தவரே, நீரே அற்ப பாக்கியமுடையவனான எனக்கு குருவும், தெய்வமும். அந்த நீர் என்னுடைய புதல்வனிடத்தில் கருணை செய்யக்கடவீர். தேவர்கள், தானவர்கள் (அதாவது அசுரர்கள்), கந்தர்வர்கள், யட்சர்கள், பறவைகள், பாம்புகள் யுத்தத்தில் ராவணனை சகிக்க சக்தர்கள் இல்லை. மானுடர்கள் என்றால் எம்மாத்திரம்? அந்த ராட்சசன் யுத்தத்தில் வீர்யமுடையவர்களுடைய வீர்யத்தை விழுங்கிவிடுகிறான். ஆகையால் முனிவருள் சிறந்தவரே, அவனோடும் அல்லது அவனுடைய (படை)பலத்தோடும் நான் (படை)பலத்தோடு கூடினவனாகவோ,என் புத்திரர்களோடு கூடினவனாகவோ போர்செய்ய சக்தனாக இல்லை. பிராமணரே, அமரர்களுக்கு ஒப்பான யுத்தத்தின் வகையறியாதவனான, குழந்தையான என்னுடைய தனயனான அருமைப்புத்திரனை எவ்விதத்திலும் நிச்சயமாய் விடேன். மேலும், யாகத்தை கெடுக்கும் இவர்கள் சுந்தன் (மற்றும்) உபசுந்தனுடைய புதல்வர்கள். யுத்தத்தில் காலனைப் போன்றவர்கள். ஆகையால், அருமைப்புத்திரனை நிச்சயமாய் விடேன். மாரீசனும், சுபாஹுவும் தைத்யகுலத்தை (அதாவது அசுர குலத்தை) நிலைநிறுத்த ராட்சச கன்னிகையிடமிருந்து பிறந்தவர்கள். அவ்விருவர்கள் வீர்யமுடையவர்கள். மேலும், நல்ல பயிற்சி பெற்றவர்கள். அவ்விருவர்களில் ஒருவனோடு எனது கணங்களுடன் கூடினவனாய் நான் யுத்தம் புரியக்கடவேன். வேறுபடியானால் தேவரீரை பந்துக்களோடு கூடினவனாய் இறைந்து கேட்டுக்கொள்கிறேன்.என்ற நரபதியினுடைய பொருத்தமற்ற பேச்சால் த்விஜேந்திரரான (த்விஜர் என்றால் இருபிறப்பாளன் என்று பொருள், முதல் பிறப்பு இயற்கையான முறையில் நிகழ்வது. இரண்டாம் பிறப்பு பரமாத்மாவை உணர்கையில் கிடைப்பது) குஷிக புத்திரருள் (அதாவது விஷ்வாமித்ரருள்) மிகப் பெரியதான கோபமானது புகுந்தது. யாகத்தில் நெய்வார்க்கப்பட்டு நன்கு ஹோமம் செய்யப்பட்ட அக்னி போல் மகரிஷியாகிற அக்னி ஜொலித்து எரிவதாய் ஆனது.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் இருபதாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment