Friday, January 3, 2020

இருபத்தோராவது ஸர்க்கம் – வசிஷ்டரின் வார்த்தையால் (ஸ்ரீ)ராமரை அனுப்புவது



அவருடைய (புத்திர) பாசத்தால் மனக்குழப்பத்துடன் குழறிக்கொண்டு சொன்ன அந்த வார்த்தையை கேட்டு, கெளஷிகர் (அதாவது விஷ்வாமித்ரர்) கோபம் கொண்டவராய் வேந்தரைப்பார்த்து வாக்கியத்தை மறுமொழியைச் சொன்னார், ‘முதலிலே (கொடுப்பதாய்) அங்கீகரித்து, பிரதிக்ஞையை மறுத்திட இச்சை கொள்கிறீர். ராகவர்களுடைய (அதாவது ரகு வம்சத்தவர்களுடைய) இந்த குலத்திற்கு இந்த விரோதமான காரியம் பொருந்தாது. ராஜா, இது உமக்கு தகுதியானது என்றால் வந்தவாறு செல்கிறேன். காகுத்ஸ்தரே, பொய்யான பிரதிக்ஞையை (அளித்தவராய்), பந்துக்களோடு கூடினவராய் சுகமாய் இரும்.

விவேகியான அந்த கோபாவேசமடைந்த விஷ்வாமித்ருக்கு முழு பூமியும் நடுங்கிற்று. சுரர்களையும் (அதாவது தேவர்களையும்) பயம் அடைந்தது. ஜகம் எல்லாம் அஞ்சி நடுங்கியதாக அறிந்து, உடனே நல் விரதமுடையவரான, அறிஞரான, மகானான ரிஷி வசிஷ்டர் அரசரிடம் வாக்கியத்தை சொன்னார், ‘இக்ஷ்வாகுக்களுடைய குலத்தில் சாட்சாத் இரண்டாம் தர்ம(தேவரைப்) போல் உதித்த (நீர்) உறுதியுள்ளவர். நல் விரதமுடையவர். ஸ்ரீமான் (அதாவது செல்வமுடையவர்). தர்மத்தை விட்டு நழுவி நடக்ககூடாது. ராகவரான (அதாவது ரகு வம்சத்தவர்களான) நீர் மூன்று உலகங்களிலும் தர்மாத்மா என்று பெயர் பெற்றவர். சொந்த (குல) தர்மத்தை கடைபிடியும். அதர்மத்தை அனுஷ்டித்தல் கூடாது. இவ்வாறு செய்கிறேன்,’ என்று சொல்லி உறுதிசெய்து, வாக்கை நிறைவேற்றாதவனுக்கு செய்த தர்மங்களின் பலனில்லாமை உண்டாகும். ஆகையால் (ஸ்ரீ)ராமருக்கு செல்ல விடைகொடும். ஜ்வலனனால் (அதாவது அக்னியால்) அமிர்தம் எப்படியோ அப்படி குஷிகரின் புத்திரரால் (அதாவது விஷ்வாமித்ரரால்) பாதுகாக்கப்பட்ட இவனை அஸ்திரங்களில் தேர்ந்தவனானாலும், அஸ்திரங்களில் தேராதவனானாலும் ராட்சசர்கள் தோற்கடிக்கமுடியாது. இவர் (அதாவது விஷ்வாமித்ரர்) தர்மத்தின் விக்கிரகம். இவர் வீர்யமுடையவர்களில் உத்தமர். இவர் உலகில் புத்தியால் மேற்பட்டவர். தவத்திற்கும் இருப்பிடம். இவர் விதவித அஸ்திரங்களை ஆராய்ந்தறிந்திருக்கிறார். சராசரங்களடங்கிய (அதாவது அசையும் மற்றும் அசையாதவன அடங்கிய) மூவுலகத்தில் வேறு நபர் இவரை (உள்ளபடி) அறியான். எவர்களும் இனியும் உள்ளபடி அறியப்போகிறதில்லை. தேவர்கள், ரிஷிகள் (அறிய) முடியாது. அசுரர்கள் (அறிய) முடியாது. ராட்சசர்கள், கந்தர்வ-யட்சர்களில் சிறந்தவர்கள், கின்னரர்களோடு கூடிய மகோரகர்கள் எவர்களும்  (அறிய) முடியாது. அஸ்திரங்கள் எல்லாம் ப்ருஷாஷ்வருடைய புத்திரர்கள். மிக தார்மிகர்கள். முற்காலத்தில் ராஜ்யத்தை ஆண்டுகொண்டிருந்த பொழுது (அவர்கள்) கெளஷிகருக்கு (அதாவது விஷ்வாமித்ரருக்கு) கொடுக்கப்பட்டார்கள். ப்ருஷாஷ்வருடைய புத்திரர்களும், (தக்ஷ)பிரஜாபதியின் குமாரர்கள் எவர்களோ அவர்களும் பலவகை ரூபம் அமைந்தவர்கள். மகா வீர்யமுடையவர்கள். ஒளி பொருந்தியவர்கள. வெற்றியை கொடுக்கிறவர்கள். ஜயாவும், சுப்ரபாவும் தக்ஷகருடைய கன்னிகைகள். நல் இடையுடையவர்கள். அவ்விருவர்களும் மிக்க ஒளியமைந்த நூற்றுக்கணக்கான அஸ்திரசஸ்திரங்களை பெற்றார்கள். முன்பு, ஜயா (என்பவள்) வரம்பெற்றவளாய் அசுரப்படைகளின் வதையின் பொருட்டு, நினைத்தபடி உருவமெடுக்கவல்ல, பழுதாகாத ஐநூறு பிள்ளைகளை பெற்றாள். மேலும், சுப்ரபாவோவென்றால் அணுகமுடையாதவர்களான, பழுதுபடாதவர்களான, பலசாலிகளான சம்ஹாரர்கள் என்ற பெயர் கொண்ட ஐநூறு புத்திரர்களை பெற்றாள். அந்த அஸ்திரங்களையும் தர்மவித்தான குஷிகரின் புதல்வர் உள்ளபடி அறிந்திருக்கிறார். இவர் இவைகளுக்கும் மேலான புதியவைகளை உருவாக்குவதில் சக்தர். விஷ்வாமித்ரர் இப்படிப்பட்ட வீர்யவான். பெரும் புகழ்பெற்றவர். மகா தேஜஸ்வி, மகாத்மாவான, தர்மமறிந்தவரான, முனிவர்களுள் முக்கியரான இவருக்கு நடந்தது, நடக்கப்போவது, அறியப்படாதது கொஞ்சமுமில்லை. ஆதலால், ராஜா, (ஸ்ரீ)ராமரை அனுப்புதலில் சந்தேகம் அடையக்கூடாது. அவர்களை ஒடுக்குவதில் குஷிகரின் புதல்வர் தாமே சக்தர். உம்முடைய புத்திரனின் நன்மையை பொருட்டு உம்மை அடைந்து யாசிக்கிறார்.என்ற முனிவரின் சொல்லால் ரகு (குல) காளை (அதாவது தசரதர்) அமைதியான சித்தம் கொண்டவராயும், ஒளியடைந்தவராயும் சந்தோஷமடைந்தார். விரிந்த புகழுடையவர் (அதாவது தசரதர்) குஷிக புத்திரருக்காக (அதாவது விஷ்வாமித்ரருக்காக) ராகவருடைய (அதாவது ஸ்ரீராமருடைய) செல்லுதலுக்கு மனம் இசைந்தார்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் இருபத்தோராவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment