Wednesday, January 1, 2020

பத்தொன்பதாவது ஸர்க்கம் – விஷ்வாமித்ரர் ஸ்ரீராமரை யாசிப்பது



ராஜசிம்மருடைய (அதாவது தசரதருடைய) அற்புதமான, விஸ்தாரமாயிருக்கிற அந்த வார்த்தையை கேட்டு, சிலிர்த்த மயிருடையவராய் மகா தேஜஸ்வியான விஷ்வாமித்ரர் சொன்னார்.

அரசருள் புலியே, உலகில் மகா வம்சத்தில் உதித்த வசிஷ்டரை உபதேசராய் அடைந்து விளங்குகிற உமக்கே சரியானது. வேறுவிதமாக இல்லை. அரசருள் புலியே, என்னுடைய இதயத்தில் இருக்கிறது எதுவோ அது இப்பொழுது சொல்லப்படுகிறது. அந்த காரியத்தின் நிறைவேற்றுதலை செய்யக் கடவீர். சத்திய பிரதிக்ஞையையுடையவராக ஆகும். புருஷர்களுள் காளையே, நான் சித்தியின் பொருட்டு (யாக) நியமத்தை ஆரம்பித்திருக்கிறேன். அதற்கு இப்பொழுது தடை செய்பவர்கள், வேண்டிய வடிவம் கொள்ளவல்ல இரண்டு ராட்சசர்கள். என்னுடைய விரதம் பெரும்பாலும் கடைபிடிக்கப்பட்டு முடிவுறும் சமயத்தில் மாரீசனென்றும், சுபாஹுவென்றும் வீர்யமுள்ள நன்கு பயிற்சிப்பெற்ற இந்த அந்த ராட்சசர்கள் மாமிசத்துடன் கூடின உதிர பிரவாகத்தாலே அந்த (வேள்வி)குண்டத்தில் பொழிந்தார்கள். அவ்வண்ணம் அந்த நியமத்தின் நிறைவேறுதல் இடையூறு செய்யப்பட்டவளவில் சிரமமெல்லாம் வீணானவனாக, உற்சாகம் குன்றியவனாய் அந்த தேசத்திலிருந்து வந்தேன். பாராளுபவரே, கோபத்தை பிரயோகிக்க எண்ணமே எனக்கு உண்டாகிறதில்லை. ஏனென்றால் அந்த (யாக) செயல்முறை அவ்விதமானது. அப்படி இருப்பதால் சாபம் இடலாகாது. அரசருள் சிறந்தவரே, சத்திய பராக்கிரமமுள்ள, பக்கக்குடுமி வைத்துக்கொண்டிருக்கிற, வீரரான, மூத்தவரான, உமது புத்திரரான ராமரை எனக்கு அளிக்க அனுமதியளிக்க வேண்டியவராகிறீர். என்னால் பாதுகாக்கப்பட்ட இவர், திவ்யமான தேஜஸால் இடையூறு செய்கிற ராட்சசர்கள் எவர்களோ, அவர்களுக்கு விநாசம் (ஏற்படுத்துவதில்) சக்தர். இவருக்கு அநேகவிதமான அனுகூலங்களையும் கொடுக்கிறேன், சந்தேகம் வேண்டாம். இதனால் மூன்று உலகங்களிலும் பெயர் பெற போகிறார். அவ்விருவர்களும் (மாரீசனும், சுபாஹுவும்) (ஸ்ரீ)ராமரை அடைந்து எவ்விதத்திலும் (எதிர்த்து) நிற்க சக்தர்கள் இல்லை. ராகவரைக்காட்டிலும் (அதாவது ஸ்ரீராமரைக்காட்டிலும்) வேறு ஆணும் அவ்விருவர்களை வதைசெய்ய மனோபலம் கொண்டவனில்லை. வீர்யத்தால் கர்வமடைந்தவர்களான, யமனின் பாசத்தின் (அதாவது பாசக்கயிற்றின்) வசத்தை அடைந்தவர்களான அந்த பாவிகள், அரசருள் சிறந்தவரே, மகாத்மாவான (ஸ்ரீ)ராமருக்கு எதிராகும் தரமுடையவர்கள் இல்லை. ஆதலால் பாராளுபவரே, புத்திரத்தனத்தால் உண்டாகும் பாசத்தை காட்டிடமுடியாதவராகிறீர். யாகமோ பத்து இரவு காரியம்தான். அதில் என்னுடைய யாகத்திற்கு இடையூறு செய்யும் எதிரிகளான ராட்சசர்கள், (ஸ்ரீ)ராமரால் கொல்லப்பட வேண்டியவர்கள். நான் உமக்கு நிச்சயமாய் சொல்லுகிறேன், அந்த இரண்டு ராட்சசர்களை மாண்டவர்களாக அறியும். நான் (ஸ்ரீ)ராமரை மகாத்மாவாக, சத்திய பராக்கிரமராக உண்மையாய் அறிகிறேன். மகா தேஜஸ்வியான வசிஷ்டரும், தவம் புரிவதில் நிலைகொண்டவர்கள் எவர்களோ அந்த இவர்களும் (அறிவார்கள்). உமக்கு தர்ம லாபத்தையும், புவனத்தில் இதமான, சிறந்த புகழையும் இச்சைகொள்பவராகில், ராஜேந்திரரே (அதாவது தசரதரே), (ஸ்ரீ)ராமரை என்னிடம் தர அனுமதியளிக்க வேண்டியவராகிறீர். காகுத்ஸ்தரே (அதாவது காகுத்ஸ்த வம்சத்தவரே, இங்கு தசரதரே என்று பொருள்படும்படி வரும்), வசிஷ்டர் முதலான உம்முடைய மந்திரிகள் எல்லோரும் அனுமதியை கொடுக்கிறார்கள். இப்படியாகில், அப்பொழுது (ஸ்ரீ)ராமருக்கு செல்ல அனுமதி கொடும். செந்தாமரைக்கண்ணனான, பிரியரான, புத்திரரான (ஸ்ரீ)ராமரை யாகத்திற்காக பத்து இரவுகளுக்கு பக்கத்தில் இல்லாதவராய் தந்திட நிச்சயமாய் சம்மதிக்க வேண்டியவராகிறீர். ராகவரே (அதாவது ரகு வம்சத்தவரே, இங்கு தசரதரே என்று பொருள்படும்படி வரும்), என்னுடைய யாகத்தினுடைய இந்த காலம் கடந்துவிடாதது எப்படியோ, அப்படி செய்யக்கடவீர். உமக்கு மங்கலம். சோகத்திலும் மனதை செலுத்தாதிருக்கக்கடவீர்.என்று தர்ம அர்த்தங்களோடு கூடின வார்த்தையை இவ்வண்ணம் சொல்லி, தர்மாத்மாவான, மகா தேஜஸ்வியான, மகாமுனியான விஷ்வாமித்ரர் ஓய்ந்தார்.

அந்த ராஜேந்திரர் (அதாவது தசரதர்) சுபமான அந்த விஷ்வாமித்ரருடைய வார்த்தையை கேட்டு கடுமையான சோகத்தை அடைந்தார். பயமுற்றவராய் மனங்குன்றிப் போனார். பெரிய மகாத்மாவான நரபதி, அந்த முனியின் வார்த்தையை இவ்வாறு இதயத்தையும், மனத்தையும் பிளப்பதாய், செவிகொடுத்தவராய் மிகவும் வருந்தின மனமுடையவராய் ஆனார். ஆசனத்திலிருந்தும் அசைந்துவிட்டார்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் பத்தொன்பதாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment