Wednesday, January 15, 2020

இருபத்தொன்பதாவது ஸர்க்கம் – சித்தாசிரமம் செல்வது

ஸ்ரீராமரின் பிரயாண பாதை. இன்றைய (பீகாரிலுள்ள) சாப்ரா அன்றைய காமாசிரமம். இன்றைய (பீகாரிலுள்ள) பக்ஸர் அன்றைய சித்தாசிரமம்.

மகாதேஜஸ்வியான விஷ்வாமித்ரர் மனத்தால் அளவிடமுடியாத மகிமையையுடைய, வினா எழுப்பிய அவருக்கு அந்த வனத்தைப்பற்றி அப்பொழுது சொல்ல ஆரம்பித்தார், ‘பெருங்கரம் கொண்டவனே, (ஸ்ரீ)ராமா, தேவவரரான, அனைத்து உயிரினங்களுக்கும் பிரபுவான, சர்வாத்மாவான, புலப்படாதவரான, அனைத்து உலகத்திற்கும் ரட்சகரான, உலகத்திற்கும் ஜகத்திற்கும் பிரபுவான விஷ்ணுவானவர், இவ்வுலகில் நூற்றுக்கணக்கான யுகங்களுக்கும், அநேக வருடங்களுக்கும், எல்லோருக்கும் ஆச்சர்யமுண்டாக்க தவம் செய்யவும் யோகம் செய்யவும் இவ்விடத்தில் மகாதவம் புரிபவராய் வசித்தார். (ஸ்ரீ)ராமா, மகாத்மாவான வாமனருடைய பூர்வ ஆசிரமம் இது. இவ்விடத்தில் (அந்த) மகாதபஸ்வி சித்தி அடைந்தார். அதனால் சித்தாசிரமம் என்று பெயர்பெற்றது. இந்த காலத்திலேயே வைரோசனனான (அதாவது விரோசனனுடைய புதல்வனான) மஹாபலி (என்கிற) ராஜா பலி பலவனாய், அசுரேந்திரனாய் (தேவ)இந்திரனோடு கூடின, மருதகணங்களோடு கூடின தெய்வ கணங்களையே வென்று, மூன்று உலகங்களிலும் புகழ்பெற்றவனாய் அந்த ராஜ்யத்தை செய்துவந்தான். யாகத்தையும் செய்தான்.

பலி யாகம் செய்கையில் அக்னியை முன்னிட்டுக்கொண்டு தேவர்கள், தாமே இதே ஆசிரமத்தில் விஷ்ணுவை அடைந்து சொன்னார்கள், ‘விஷ்ணுவே, வைரோசனனான பலி உத்தமமான யாகத்தை செய்கிறான். அந்த யாகம் முடிவுபெறும் முன் உமது காரியமானது முழுமையாய் அடையப்படட்டும். எவர்கள், எங்கிருந்தும், எவ்விடத்தில் எதையும் யாசிக்கிறவர்கள் இவனை அடைகிறார்களோ; அவர்களுக்கு எல்லாவற்றையும் வேண்டியபடி கொடுக்கிறான். விஷ்ணுவே, அந்த நீர் சுரர்களின் (அதாவது தேவர்களின்) நன்மையின் பொருட்டு மாயாயோகத்தை அடைந்தவராய், வாமன உருவத்தை அடைந்தவராய், உத்தம நன்மையை செய்யும்.

சந்தோஷப்படுத்துகிற (ஸ்ரீ)ராமா, இந்த காலத்தில் அக்னிக்கு ஒப்பான ஒளியையுடைய, தேஜஸ்ஸால் ஜொலிப்பவர் போன்ற, பகவான் கஷ்யபர் (மனைவி) அதிதி சகிதராய், தேவியை (அதாவது பத்தினியை) உடையவராய், ஆயிரம் திவ்யவருடமாக செய்துவந்த விரதத்தை முடித்து, வரமளிக்கும் மதுசூதனனை ஸ்தோத்திரம் செய்தனர். தவத்தால் ஆராதிக்க வேண்டியவராய், தவத்தின் குவியல் போன்றவராய், தவத்தின் மூர்த்தியாய், தவத்தின் ஆத்மாவாய் விளங்குபவராய், புருஷோத்தமரான உம்மை நன்றாகப்புரிந்த தவத்தால் கண்டுகொண்டேன். பிரபுவே, உம்முடைய சரீரத்தில் இந்த அனைத்து ஜகத்தை பார்க்கிறேன். நீர் அநாதி. இவ்வண்ணமுள்ளவர் என்று குறிப்பிடக்கூடாதவர். உம்மை சரணம் அடைகிறேன்.

तपोमयं तपोराशिं तपोमूर्तिं तपात्मकम् |
तपसा त्वां सुतप्तेन पश्यामि पुरुषोत्तमम् ||

शरीरे तव पश्यामि जगत्सर्वमिदं प्रभो |
त्वमनादिरनिर्देश्यस्त्वामहं शरणं गतः ||

தபோமயம் தபோராஷிம் தபோமூர்த்திம் தபாத்மகம் |
தபஸா த்வாம் சுதப்தேன பஷ்யாமி புருஷோத்தமம் ||

ஷரீரே தவ பஷ்யாமி ஜகத்ஸர்வமிதம் ப்ரபோ |
த்வமனாதிரநிர்தேஷ்யஸ்த்வாமஹம் ஷரணம் கத: ||

களங்கத்திலிருந்து விடுபெற்ற அந்த கஷ்யபரைப் பார்த்து பிரீதியான ஹரி சொன்னார், ‘வரத்தை கேள். உனக்கு மங்கலம். எனக்கு இஷ்டனாய், வரத்திற்கு உரியவனாக இருக்கிறாய்.

அவருடைய அந்த வார்த்தையை கேட்டு, மாரீசரான (அதாவது மரீசி குமாரரான) கஷ்யபர் சொன்னார், ‘நல் விரதமுடையவரே, வரதரே (அதாவது எதைக்கேட்டாலும் இல்லையென்று சொல்லாமல் கேட்டவிதம் அளிப்பவரே), அதிதிக்கும், தேவர்களுக்கும், வேண்டிக்கொள்ளுகிற எனக்கும் அன்புடையவராய் வரத்தை கொடுக்க உரியவராகிறீர். பாவமற்றவரே, அசுரர்களை அழிப்பவரே, பகவானே, தாம் அதிதிக்கும், எனக்கும் புத்திரராய் பிறந்தலை அடையும். ஷக்ரனுக்கு (அதாவது இந்திரனுக்கு) இளைய சகோதரராய் இரும். சோகத்தால் வருந்துகிற தேவர்களுக்கு சகாயத்தை செய்ய உரியவராகிறீர். பகவானே, தேவர்களின் ஈசனே, உம்முடைய அருளால் (யாக)கர்மம் சித்திபெற்ற பொழுது இது சித்தாசிரமம் என்று பெயர்பெற போகிறது. இங்கே எழுந்திரும்.

இவ்வாறு சொல்லப்பட்ட எல்லாமறிந்தவரான, பீதாம்பரம் அணிந்திருப்பவரான, மகாதேஜஸ்வியான, ஹ்ருஷீகேஷரான (அதாவது இந்திரியங்களுக்கு தலைவரான), ஜனார்தனரான விஷ்ணு, தவம் செய்யும் அது அப்படியே ஆகட்டும்என்று சொல்லி பின்னர் அதிதியினிடத்தில் பிறந்தார். பிட்சை எடுப்பவரின் உருவத்தோடு, குடையை உடையவராய், கமண்டலம் சிகை  இவைகளோடு ஒளிருபவராய், வாமன ரூபம் அடைந்து வைரோச்சனனை (அதாவது விரோசனனுடைய புத்திரனான பலிச்சக்கிரவர்த்தியை) அடைந்தார். பகவானான ஹரி யாகம்செய்கின்ற அவனை அடைந்து சொன்னார், ‘உனக்கு ஸ்வஸ்தி (அதாவது மங்கலம்). மகாராஜாவே! யாகமும் வெகுவாய் சோபிக்கிறது. ராஜா, தானங்களை பிரார்த்திக்கிற நாங்கள் சிறந்த யாகத்தை கேட்டு, உம்மை பார்த்து, உம்முடைய யாகங்களில் கொஞ்சம் அடைய இங்கு வந்தோம்.

ராஜா வாமனரால் மேற்சொல்லியவிதம் சொல்லப்பட்டபொழுது சந்தோஷத்தோடு அவரைப்பார்த்து பின்வருமாறு சொன்னார், ‘இப்பொழுது எனது ஜன்மம் பலன் அடைந்ததாக ஆனது. இப்பொழுது என்னுடைய தவம் பலன் அடைந்ததாக ஆனது. இப்பொழுது என்னுடைய ராஜ்யம் பலன் அடைந்ததாக ஆனது. இப்பொழுது செய்கை எனக்கு நன்குசெய்யப்பட்டதாக ஆனது. இப்பொழுது எனது யாகம் பலன் அடைந்ததாக ஆனது. செய்த நான் நிறைவடைந்தேன். எனது தனநிதியும், ரத்தினக்குவியலும், ஆபரணமும், தானியசமூகமும், கிராமமும், நகரமும், நாடும், வாகனமும், யானை, குதிரை, ரதம் இவைகளின் வரிசையின் திரளும் இன்னும் இதரங்களாய் உள்ளதான அனைத்து செல்வமும் உமக்காகவே படைக்கப்பட்டிருக்கிறது. பெருங்கரம் கொண்டவரே, பாவமற்றவரே, எதை இச்சை கொள்கிறீரோ, அதை உமக்கு கொடுக்கிறேன்.



அப்பொழுது பகவானான புருஷோத்தமர், ராஜாவால் இப்படி சொல்லப்பட்டவராய் புன்னகையை செய்து, யாகம்செய்கின்ற மஹாபலியைப் பார்த்து சொன்னார், ‘ராஜேந்திரா, இவைகளால் எனக்கு என்ன? அவைகளாலும் பிரயோஜனம் இல்லை. பிரபுவே, என் பாத மூன்றடி அளவு பூமியை எனக்கு கொடும்.

வாமனரால் சொல்லப்பட்ட அதை கேட்டு அசுரோத்தமன் புன்னகையை செய்து, ‘பிராமணரே, எதனால் இஷ்டமானது பூர்த்தியடைகிறதோ, அதை செய்கிறேன்என்று அப்பொழுது சொன்னான். வாமனருக்கு பூமியை கொடுக்க அசுரோத்தமன் நிச்சயித்தவளவில் த்விஜோத்தமரான சுக்கிரன் அந்த மகாராஜாவை தடுத்து சொன்னார், ‘விரிஞ்சி (அதாவது பிரம்மா), பவன் (அதாவது சிவன்), ஷக்ரன் (அதாவது இந்திரன்) முதலான தேவர்களும், யோகிகளும், சுரர்களும் (அதாவது தேவர்களும்), அசுரர்களும் எவரை உள்ளபடி அறியார்களோ (அந்த) அழிவற்ற விஷ்ணுதேவரே இவர்.

சுக்கிரன் தானத்தை தடுத்தவளில் ராஜபுரோகிதரான சுக்கிரனை அங்கிருந்து இழுத்து, மகாபலசாலியான வைனதேயன் (அதாவது கருடன்) அடித்தார். யாகம்செய்கின்ற மஹாபலி யோசித்தார், ‘தேவேசர் மாயாரூபத்தோடு என்னுடைய யாகத்தை அடைந்தார். ஆக, இதுதான் பலனுடன் முடிந்த யாகம். இப்படியே ஆகட்டும்என்று பத்தினியோடு கூட அப்பொழுது தீர்மானித்து மகாத்மாவான வாமனருக்கு தீர்த்தம் கொடுக்கப்பட்டது, ‘பிரபுவே, உம்முடைய பாதத்தால் மூன்று அடி அளவு பூமியை இப்பொழுது பெற்றுக்கொள்ளும்என்று சொன்னான்.

தீர்த்தம் தொட்டவளவில் ஹரி மூவுலகமும் பூரணமாகுதல் எப்படியோ அப்படி விஷ்வரூபதாரியாய் அங்கிருப்பவராகவே விருத்தியடைந்தார். ஆயுதங்களோடு கூடின கைகளால் திசைகள் மத்தியபிரதேசம் எல்லாமே நிறைந்தது. அசுரராஜேந்திரன் அவரை கண்டு, வாமன உருவத்தால் ஆச்சர்யம் கொண்டவனாய் இவர் மாதவன் என்றே அறிந்துகொண்டு, தர்மப்படி பூஜித்தான். அவனாலே பூஜிக்கப்பெற்ற தர்மாத்மாவான, லோகாத்மாவான, அனைத்துலக நன்மையில் ஆர்வமுள்ளவரான, மகாதேஜஸ்வியான அவர் சர்வலோகத்தின் நன்மையின் பொருட்டே வாமனராய் மூன்று அடிகளை யாசித்து, உலகங்களை ஆக்கிரமித்து, பின்னர் கைப்பற்றி, தேஜசால் பலியையும் அடக்கி, மீண்டும் மஹேந்திரனுக்கு அளித்தார். மூவுலகத்தை மறுபடியும் ஷக்ரன் (அதாவது இந்திரன்) வசமாக செய்தார். சிரமத்தை நாசமாக்குகிற இந்த ஆசிரமம் முன்பு அவரால் வசிக்கப்பட்டது. அந்த வாமனருடைய பக்தியினாலேயே என்னாலும் ஆச்ரயிக்கப்படுகிறது. புருஷர்களுள் புலியே, இடையூறு செய்கிற, துர்நடத்தையுள்ள ராட்சசர்கள் இந்த ஆசிரமத்திற்கு வருகிறார்கள். இவ்விடத்திலேயே அவர்கள் கொல்லப்பட வேண்டும். (ஸ்ரீ)ராமா, ஆகையால் ஒப்புயர்வற்ற சித்தாசிரமத்துள் இப்பொழுது பிரவேசிப்போம். குழந்தாய், இந்த ஆசிரமபதம் என்னுடையது, அப்படி இருப்பதால் உன்னுடையதே.

இவ்விதம் சொல்லி மகாமுனி லக்ஷ்மணரோடு கூடிய (ஸ்ரீ)ராமரை கைப்பற்றி, மிகச்சந்துஷ்டராய் ஆசிரமபதத்தை புகுபவராய், பனி நீங்கின புனர்பூச நட்சத்திரத்தோடு கூடிய ஷஷீ (அதாவது சந்திரன்) போல் விளங்கினார். சித்தாசிரமத்தில் வசித்துக்கொண்டிருக்கிற முனிவர்கள் எல்லோரும் அவரை கண்டு மேலும் மேலும் விஷ்வாமித்ரரை சந்தோஷத்துடன் பூஜித்தார்கள். அறிஞரான விஷ்வாமித்ரருக்கு உரியவாறு பூஜையை செய்தார்கள். அவ்வாறே, ராஜபுத்திரர்கள் இருவருக்கும் அதிதி கிரியையை செய்தார்கள். எதிரிகளை அழிக்கிற ரகுநந்தனர்களான, ராஜபுத்திரர்கள் இருவர் முகூர்த்தநேரம் களைப்பை நீக்கிக்கொண்டவர்களாய், பின்னர் கைகூப்பினவர்களாய் முனிவர்களுள் புலியிடம் சொன்னார்கள், ‘முனிபுங்கவரே, இப்பொழுதே தீக்ஷையை அடையும். உமக்கு நலம். இது சித்தாசிரமத்தின் சித்திக்காக ஆகும். உம்முடைய சொல் சத்தியமாக ஆகட்டும்.

இவ்வாறு சொல்லப்பட்ட மகாதேஜஸ்வியான, மகாமுனியான விஷ்வாமித்ரர் கடுமையாய் இந்திரியங்களை அடக்கியவராய் அப்பொழுது தீக்ஷையை அடைந்தார். (ராஜ)குமாரர்கள் இருவரும் அந்த இரவை மனச்சஞ்சலமற்றவர்களாய் கழித்து, விடியற்காலத்தில் எழுந்திருந்து, நீரை தொட்டு (ஆசமனம் முதலியன) செய்தவர்களாயும், காலை சந்தியை (அதாவது சந்தியாவந்தனத்தை) உபாசித்தும், ஜபத்தை நியமத்தோடு நிறைவேற்றியும், பரிசுத்தர்களாய் அக்னிஹோத்திரம் (வேள்வி) செய்து வீற்றிருக்கிற விஷ்வாமித்ரரை வணங்கினார்கள்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் இருபத்தொன்பதாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment