Tuesday, January 14, 2020

இருபத்தெட்டாவது ஸர்க்கம் – அஸ்திரங்களின் சம்ஹார உபதேசம்



காகுத்ஸ்தர் (அதாவது ஸ்ரீராமர்) அஸ்திரங்களை அடைந்து, அதனால் களிப்புற்ற முகமுடையவராய் பரிசுத்தராயும், நடந்துகொண்டிருப்பவராயும் இப்பொழுது விஷ்வாமித்ரரைப் பார்த்து சொன்னார், ‘பகவானே, முனிபுங்கவரே, அஸ்திரங்களை அடைந்தவனாய் சுரர்களாலும் (அதாவது தேவர்களாலும்) வெல்லமுடியாதவனாக இருக்கிறேன். நான் அஸ்திரங்களுடைய சம்ஹாரத்தை (அதாவது விடுத்த அஸ்திரங்களை திரும்பவும் இழுத்துக்கொள்ளும் சம்ஹாரவித்தையையும்) அடைய விரும்புகிறேன்.

இவ்விதம் காகுத்ஸ்தர் சொல்லுகையில் மகாதபஸ்வியான, திடமான, நல் விரதசீலரான, பரிசுத்தரான விஷ்வாமித்ரர் இப்பொழுது சம்ஹார (வித்தையை) கற்றுக்கொடுத்தார்.

சத்யவந்தம் (என்கிற வித்தையையும்), சத்யகீர்த்தி (என்கிற வித்தையையும்), த்ருஷ்டம் (என்கிற வித்தையையும்), ரபசம் (என்கிற வித்தையையும்), ப்ரதிஹாரதரம் (என்கிற வித்தையையும்), பெயர்பெற்ற பராங்முகம் (என்கிற வித்தையையும்), அவாங்கமுகம் (என்கிற வித்தையையும்), லக்ஷாக்ஷம் (மற்றும்) விக்ரமம் (என்கிற வித்தைகளையும்), த்ருடநாபம் (மற்றும்) ஸுநாபம் (என்கிற வித்தைகளையும்), தஷாக்ஷம் (மற்றும்) ஷதவக்த்ரம் (என்கிற வித்தைகளையும்), தஷஷீர்ஷம் (மற்றும்) ஷதோதரம் (என்கிற வித்தைகளையும்), பத்மநாபம் (மற்றும்) மஹாநாபம் (என்கிற வித்தைகளையும்), துந்துநாபம் (மற்றும்) சுனாபகம் (என்கிற வித்தைகளையும்), ஜ்யோதிஷம் (என்கிற வித்தையையும்), க்ருதனம் (என்கிற வித்தையையும்), நைராஷ்யம் (மற்றும்) விமலம் (என்கிற) இரண்டு (வித்யைகளையும்), அப்படியே தைத்ய (அதாவது அசுர) அஸ்திரங்களை சம்ஹாரம் செய்கிற யோகந்தரம் (மற்றும்) விநித்ரம் (என்கிற வித்தைகளையும்), ஷுசி (என்கிற வித்தையையும்), பாஹு (என்கிற வித்தையையும்), மஹாபாஹு (என்கிற வித்தையையும்), நிஷ்குலி (என்கிற வித்தையையும்), விருசி (என்கிற வித்தையையும்), அப்படியே ஸார்ச்சிமாலீ (என்கிற வித்தையையும்), த்ருதிர்மாலீ (என்கிற வித்தையையும்), வ்ருத்திமான் (என்கிற வித்தையையும்), ருசிரம் (என்கிற வித்தையையும்), மேலும் விதூதம் (மற்றும்) மகரம் (என்கிற) இரண்டு (வித்தைகளையும்), பித்ருஸெளமனஸம் (என்கிற வித்தையையும்), கரவீரகரம் (என்கிற வித்தையையும்), தனதான்யம் (என்கிற வித்தையையும்), ராகவா, காமரூபம் (என்கிற வித்தையையும்), காமருசி (என்கிற வித்தையையும்), மோஹனம் (என்கிற வித்தையையும்), மாரணம் (என்கிற வித்தையையும்), அப்படியே ஜ்ரும்பகம் (என்கிற வித்தையையும்), சர்வநாபம் (என்கிற வித்தையையும்), சந்தானம் (மற்றும்) வருணம்  (என்கிற) இரண்டு (வித்தைகளையும்), அப்படியே, (ஸ்ரீ)ராமா, ராகவா, ஒளிருகிற, விரும்பிய வடிவங்கொள்ளவல்ல ப்ருஷாஷ்வருடைய தனையர்களையும் என்னிடமிருந்து ஏற்றுக்கொள். தகுந்த பாத்திரமாய் இருக்கிறாய். உனக்கு மங்கலம்.

காகுத்ஸ்தர் (அதாவது ஸ்ரீராமர்) களிப்புற்ற அந்தராத்மாவுடன் அப்படியே ஆகட்டும்என்றார். திவ்யமாய் பிரகாசிக்கிற தேகங்களையுடையவர்களும், சரீர வடிவம் உடையவர்களும், சுகத்தை அளிக்கிறவர்களுமான சிலர் புகைக்கு ஒப்பானவர்கள். சிலர் அப்படியே அக்னிக்கு நிகரானவர்கள். சிலர் சந்திரன் (மற்றும்) அர்கனுக்கு (அதாவது சூர்யனுக்கு) ஒப்பானவர்கள். அப்படியே கைகூப்பி வணங்குகிறார்கள். கைகூப்பினவர்களாய் ஆகி, மதுரமாய் பேசுகிறவர்களாய் (ஸ்ரீ)ராமரிடம் சொன்னார்கள், ‘நரர்களுள் புலியே, இந்த (நாங்கள்) இதோ இருக்கிறோம். உமக்கு நாங்கள் எதைச் செய்யவேண்டும்? கட்டளையிடும்.

மனதை அடைந்தவர்களாக எனக்கு வேண்டிய சமயங்களில் சகாயம் செய்யுங்கள். இஷ்டப்படி போகலாம்.என்று அவர்களைப் பார்த்து ரகுநந்தனர் சொன்னார். அப்பால் அவர்கள், ‘அப்படியே இருக்கட்டும்என்று காகுத்ஸ்தரைப் பார்த்து சொல்லி, (ஸ்ரீ)ராமரை பிரதக்ஷிணம் செய்து, ஒப்புக்கொள்ளப்பட்ட பராக்கிரமமுடைய எல்லோரும் (ஸ்ரீ)ராமரை தலையால் நமஸ்கரித்து, விடைபெற்றுக் கொண்டும் வந்தவாறு சொன்னார்கள். பிறகு அந்த காகுத்ஸ்தரான, ரகுநந்தனரான, ஸ்ரீமானான (ஸ்ரீ)ராமர், பிரம்மத்தை சொல்லுகிறவருடைய (அதாவது விஷ்வாமித்ரருடைய) சாசனத்தால் அந்த அனைத்து மேலான அஸ்திரங்களையும், சம்ஹாரங்களையும் அந்த லக்ஷ்மணருக்கும் களிப்புற்றவராய் தெரிவித்தார்.

அந்த ராகவர் அவைகளை முழுவதும் கற்றுக்கொண்டு நடந்துசெல்லும்போது இப்பொழுது மகாமுனியான விஷ்வாமித்ரரை மதுரமான, லட்சமான வார்த்தையை சொன்னார், ‘மலையின் அருகிலிருக்கிற இந்த பிரதேசத்தில் மேகத்திற்கு ஒப்பான, பார்க்கத்தக்க, மான்களால் நிறைந்த அதிமனோகரமான, இனிய குரலுள்ள அநேகவிதமான பறவைகளாலும் அலங்கரிக்கப்பட்ட மரச்சோலை விளங்குகிறது. இது என்ன? எனக்கு தெரிந்துகொள்ள வேண்டுமென்ற அவா அதிகமாக இருக்கிறது. முனிவர்களுள் சிறந்தவரே, மயிர் கூச்செறியம் கானகத்திலிருந்து வெளிவந்தவர்களாக இருக்கிறோம். தேசத்தினுடைய இந்த சுகத்தன்மையாலேயே எல்லாவற்றையும் அறிகிறேன். பகவானே, இது எவருடைய ஆசிரமபதம்? எனக்கு சொல்லும். மகாமுனியான பகவானே, பிராமணரே, பாவிகளான, பிராமணர்களை கொல்பவர்களான, துஷ்ட நடத்தையுள்ளவர்களான, துராத்மாக்களான அவர்கள் உம்முடைய யாகத்தின் இடையூறை பொருட்டு எங்கு இருக்கிறார்கள். உம்முடைய அந்த யாகக்கிரியை எங்கு என்னால் ரட்சிக்கப்பட வேண்டும்; என்னால் ராட்சசர்களும் வதைக்கப்பட வேண்டும்; அந்த (பிர)தேசம் எது? முனிவர்களுள் சிறந்தவரே, பிரபுவே, இந்த எல்லாவற்றையும் கேட்க நான் விரும்புகிறேன்.’”

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் இருபத்தெட்டாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment