Tuesday, December 31, 2019

பதினெட்டாவது ஸர்க்கம் – ஸ்ரீராமாவதாரம்



மகாத்மாவினுடைய (அதாவது தசரதருடைய) ஹயமேதமென்கிற (அதாவது அஷ்வமேதம் என்கிற) அந்த யாகம் முடிவுபெற்றவுடன் சுரர்கள் (அதாவது தேவர்கள்) ஹவிர்பாகங்களை (ஹவிர்பாகம் என்றால் யாகத்திலிடும் பொருளாகும்) பெற்றுக்கொண்டு வந்தவாறு திரும்பிப் போனார்கள். ராஜா தீக்ஷையின் நியமங்களை முடித்தவராய், பத்தினி கணங்களோடு கூடினவராய், நன்றாய் பராமரிக்கப்பட்ட (சேனை)பலத்தோடும், வாகனங்களோடும் கூடினவராய் நகரத்துள் பிரவேசித்தார்.

அந்த ராஜாவால் உசிதப்பிரகாரம் பூஜிக்கப்பட்ட பூமிக்கு ஈசர்கள் (அதாவது அரசர்கள்) சந்தோஷமடைந்தவர்களாய், முனிவர்களில் சிறந்தவரை (அதாவது ரிஷ்யஸ்ருங்கரை) நமஸ்கரித்து தேசங்களுக்கு சென்றார்கள். அப்பொழுது பட்டணத்திலிருந்து தங்கள் நகரங்களுக்கு போகிற செல்வத்தையுடைய அந்த ராஜாக்களின் சேனைகள் பொலிவுடையவைகளாய், சந்தோஷமடைந்தவைகளாய் விளங்கின. பூபதிகள் சென்றவளவில் ஸ்ரீமானான, ராஜாவான தசரதர் திரும்பி உத்தம த்விஜரை (த்விஜர் என்றால் இருபிறப்பாளன் என்று பொருள், முதல் பிறப்பு இயற்கையான முறையில் நிகழ்வது. இரண்டாம் பிறப்பு பரமாத்மாவை உணர்கையில் கிடைப்பது) முன்னிட்டுக்கொண்டு  நகருள் பிரவேசித்தார். அப்படியே ரிஷ்யஸ்ருங்கர் (தன் மனைவி) சாந்தையோடு கூட, பரிவாரங்களோடு கூடிய தீமானான ராஜாவால் நன்றாக பூஜிக்கப்பட்டவராய், பின்தொடரப்பட்டவராய் சென்றார். இவ்வாறு அந்த எல்லோரையும் அனுப்பிவிட்டு, மனோரதங்கள் நிறைவேற்றியவராய் ராஜா புத்திரப்பேற்றை ஆலோசிப்பவராய் அங்கு சுகமாய் வாசம் செய்தார்.

யாகம் நிறைவடைந்ததிலிருந்து ஆறு பருவ காலநிலைகள் முடிந்தன. அப்பொழுது பன்னிரண்டாவது மாதமான சித்திரை மாதத்து (வளர்பிறையில்) நவமி திதியில், புனர்பூசம் நட்சத்திரத்தில், ஐந்து கிரகங்கள் தாங்கள் உச்சமாய் நிற்க, கடக லக்கினத்தில் வாக்கின் அதிபதி (அதாவது குரு) இந்துவோடு (அதாவது சந்திரனோடு) கூட உதயம் ஆகுகையில் ஜகந்நாதரான, அனைத்து உலகங்களும் வணங்குபவரான, திவ்ய லட்சணங்கள் பொருந்திய, விஷ்ணுவின் பாதி (அம்சமான), மகா பாக்கியசாலியான, இக்ஷ்வாகு (வம்சத்தை) களிப்பிக்கின்ற (ஸ்ரீ)ராமர் எனும் புத்திரனை கெளசல்யா பெற்றாள். அளவில்லாத தேஜஸுள்ள அந்த புத்திரனாலே கெளசல்யா, தேவர்களுள் உத்தமரான வஜ்ராயுதத்தை கையில் தரித்தவராலே (அதாவது தேவேந்திரராலே) அதிதி போல் ஒளிர்ந்தாள். சாட்சாத் விஷ்ணுவினுடைய நாலில் ஓர் அம்சமான அனைத்து குணங்களோடு கூடின பரதர் எனும் பெயருள்ள சத்திய பராக்கிரமமுடையவர் கைகேயினிடத்தில் பிறந்தார்.

பிறகு, விஷ்ணுவினுடைய பாதி அம்சத்தோடு கூடின, எல்லா அஸ்திரவித்தைகளிலும் வல்லவர்களான, வீரர்களான லக்ஷ்மணர், சத்ருக்னர் என்ற இரண்டு பிள்ளைகளை சுமித்ரா பெற்றாள். சம மனதுடைய பரதரோவெனில் பூச (நட்சத்திரத்தில்) மீன லக்கினத்தில் பிறந்தார். செளமித்ரர்கள் (அதாவது சுமித்ராவின் மைந்தர்களான லக்ஷ்மணர், சத்ருக்னர்) ஆயில்ய (நட்சத்திரத்தில்) சூர்யன் உச்சனாயிருக்க கடக லக்கினத்தில் பிறந்தார்கள். ஒளியால் பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரங்களுக்கு ஒப்பான, மகாத்மாகளான, நற்குணமுள்ள நான்கு புதல்வர்கள் தனியாய் ஒருவருக்கொருவர் சமமானவர்களாய் ராஜாவிற்கு பிறந்தார்கள். கந்தர்வர்கள் மதுரமாய் பாடினார்கள். அப்சரஸ் கணங்களும் நடனம் செய்தார்கள். தேவ துந்துபிகள் முழங்கின. பூமாரியும் ஆகாயத்திலிருந்து பொழிந்தது. அயோத்யாவில் ஜனக்கூட்டமும், மகா உற்சவமும் உண்டாயிற்று.

வீதிகள் ஜனங்களால் நெருக்கப்பட்டவையாகவும், நடர்களாலும், நர்த்தகர்களாலும் நிறைந்தவையாகவும், பாடகர்களாலும், வாத்தியம் வாசிப்போராலும் அப்படியே மற்றவர்களாலும் சப்தம் நிறைந்திருந்தன. ராஜா (அரசரைத் துதித்து பாடுபவர்களான) சூதர்களுக்கும், (குலமுறை கூறி புகழ்ந்து அரசரை துயிலெழுப்புபவர்களான) மாகதர்களுக்கும், (ஸ்தோத்திராவளி கூறும்) வந்திகளுக்கும் வெகுமதிகளை கொடுத்தார். பிராமணர்களுக்கு செல்வத்தை, கோ (அதாவது பசு) தனங்களை, ஆயிரக்கணக்காக கொடுத்தார். பதினோருநாள் சென்றபின், பெயரிடும் கர்மத்தை பின் கூறியவாறு செய்தார். மகாத்மாவான மூத்தவரை (ஸ்ரீ)ராமரென்றும், கைகேயியின் மைந்தனை பரதரென்றும், சுமித்ரையின் புத்திரனை லக்ஷ்மணரென்றும் மற்றொருவனை சத்ருக்னர் என்றும், அப்படி வசிஷ்டர் மிக சந்துஷ்டராக அப்பொழுது பெயர்களை இட்டார். பட்டணத்திலும், கிராமத்திலுமுள்ள பிராமணர்களுக்கு விருந்திட்டார். இன்னும் பிராமணர்களுக்கு அளவில்லாத அநேக ரத்தின குவியலையும் கொடுத்தார். அவர்களுக்கு (அதாவது குழந்தைகளுக்கு) ஜன்ம கிரியை முதலிய எல்லா காரியங்களையும் நடத்தினார்.


அவர்களுள் மூத்தவரான (ஸ்ரீ)ராமர் கொடிமரம் போன்று பிதாவிற்கு சந்தோஷத்தை பெருகச்செய்பவராய், உயிரினங்களுக்கு சுயம்பு (அதாவது பிரம்மா) போல் மிகவும் வேண்டியவராக இருந்தார். அனைவரும் (அதாவது அனைத்து சகோதரர்களும்) வேதமறிந்தவர்கள், சூரர்கள், எல்லோரும் உலகத்திற்கு நன்மை செய்வதில் விருப்பமுள்ளவர்கள், எல்லோரும் ஞானம் நிரம்பியவர்கள், மேலும் எல்லோரும் (நற்)குணங்களோடு கூடினவர்கள். அன்றியும் அவர்களுள் மகாதேஜஸ்வியான, சத்திய பராக்கிரமமுடைய (ஸ்ரீ)ராமர் நிர்மலமான ஷஷாங்கன் (அதாவது சந்திரன்) போல் அனைத்து உலகத்திற்கும் இஷ்டமானவர். யானையேற்றத்திலும், குதிரையேற்றத்திலும், தேரேற்றங்களிலும் தேர்ச்சியடைந்தவர். அன்றியும், தனுர்வேதத்தில் (அதாவது ஆயுத அறிவியலில்) களிப்படைபவர். தந்தைக்கான பணிவிடையில் ஈடுபாடு கொண்டவர்.

லக்ஷ்மியை பெருக்குகிறவரான லக்ஷ்மணர், உலகத்தை மகிழ்விக்கிற மூத்த சகோதரரான (ஸ்ரீ)ராமருக்கு இளமை முதல் எப்பொழுதும் நல் அன்புடையவர். லக்ஷ்மி ஆட்கொண்டிருந்த லக்ஷ்மணர், சரீரத்தைக்காட்டிலும் அந்த ராமருக்கு வேறான வெளிப்பிராணன் (பிராணனே வெளியில் உருவெடுத்து வந்தது) போல் அனைத்து வகையிலும் பிரியத்தைச் செய்பவர். அவர் (அதாவது லக்ஷ்மணர்) இல்லாமல் புருஷோத்தமர் (அதாவது ஸ்ரீராமர்) உறக்கத்தையும் அடைகிறார் இல்லை. அவர் இல்லாமல் கொண்டுவரப்பட்ட சுத்தமான அன்னத்தை உண்ணுவதில்லை. ராகவர் (அதாவது ஸ்ரீராமர்) எப்பொழுது குதிரை ஏறினவராய் வேட்டைக்கு போகிறாரோ; அப்பொழுது இவர் (அதாவது லக்ஷ்மணர்) வில்லோடு கூடினவராய், பாதுகாப்பவராய் பின் செல்லுவார். லக்ஷ்மணருக்கு இளையவரான சத்துருக்கினரும் பரதருக்கு எப்பொழுதும் பிராணனுக்கு மேலாகவே பிரியத்தை வைத்தவர். அவருக்கு அப்படியே நன்மை செய்வதில் பிரியராகவும் இருந்தார்.

அந்த தசரதர், மகா பாக்கியசாலிகளான, பிரியமான நான்கு புத்திரர்களால், தேவர்களால் பிதாமகரைப்போன்று (அதாவது பிரம்மாவைப்போன்று) மிக சந்தோஷமடைந்தவராய் ஆனார். அவர்கள் எல்லோரும் ஞானத்தால் நிறைந்தவர்கள், (நற்)குணங்களோடு கூடினவர்கள், அறியாமல் ஏதாவது செய்யக்கூடாத காரியம் செய்துவிட்டால் அதை நினைத்து அருவெறுப்புறும் இயல்புள்ளவர்கள், கீர்த்திபெற்றவர்கள், அன்றியும் எல்லாமறிந்தவர்கள், தீர்கதரிசனமுள்ளவர்கள் (அதாவது பின்வரப்போகிற பலனை முன்னமே அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்பவர்கள்), இவ்வித பிரபாவமுள்ள, ஜொலிக்கும் தேஜஸுடைய அந்த எல்லோருக்கும் தசரதர் எப்பொழுது பிதாவாக (ஆனாரோ அப்பொழுது அவர்) லோகாதிபதியான பிரம்மாவை போல் மகிழ்ச்சியாய் இருந்தார். அன்றியும் அந்த மானுடப்புலிகள், வைதிகங்களை (அதாவது வேதத்தின் அங்கங்களான சாஸ்திரங்களை) அத்தியயனம் செய்வதில் (அதாவது படிப்பதில்) ஊக்கமுடையவர்கள். குருமார்களுக்கு பணிவிடை செய்வதில் பிரியமுடையவர்கள். மேலும், தனுர்வேதத்தில் தேர்ச்சியடைந்தவர்கள்.

இப்படியிருக்கையில் தர்மாத்மாவான உபாத்யாயர்களோடு கூடின, பந்துக்களோடு கூடின ராஜா தசரதர் அவர்களுக்கு விவாகம் செய்வதை குறித்து ஆலோசித்தார். மகாத்மாவான அவர் மந்திரிகளின் மத்தியில் சிந்தித்துக்கொண்டிருக்கையில் மகா தேஜஸ்வியான, மகா முனிவரான விஷ்வாமித்ரர் வந்தார். அவர் ராஜாவை பார்க்க விரும்பியவராய் வாயில் காப்பாளர்களைப் பார்த்து சொன்னார், ‘கெளஷிகரான (அதாவது குஷிக குலத்தவரான), காதியின் நந்தனரான நான் வந்திருப்பதாக சீக்கிரம் சொல்லுங்கள்.அவருடைய அந்த வார்த்தையை கேட்டு, எல்லோரும் அந்த வாக்கியத்தால் ஏவப்பட்டவர்களாய் பரபரப்புள்ள மனமுடையவர்களாய் ராஜாவினுடைய வசிப்பிடத்தை நோக்கி விரைந்தோடினார்கள். அவர்கள் அப்பொழுது ராஜபவனத்தை அடைந்து, இக்ஷ்வாகு வம்சகரான அரசருக்கு ரிஷி விஷ்வாமித்ரர் அப்பொழுது வந்திருக்கிறதாக அறிவித்தார்கள்.

அவர்களுடைய அந்த வார்த்தையை கேட்டு, மகிழ்ந்தவராய் பிரம்மதேவரை வாசவன் (அதாவது தேவேந்திரன்) போல், அவரை (அதாவது விஷ்வாமித்ரரை) புரோகிதரோடு கூடினவராய், பணிவுடன் கூடினவராய் எதிர்கொண்டு சென்றார். ஒளியால் ஜொலிக்கிற, கடும் விரதமுடைய தபஸ்வியை பார்த்து, அந்த ராஜா மகிழ்ந்த முகமுடையவராய் அதன்பின் அர்க்கியத்தை கொடுத்தார். அந்த ராஜாவினுடைய அர்க்கியத்தை சாஸ்திரங்களில் காணப்படும் முறையினால் பெற்றுக்கொண்டு, உடனே நராதிபதியின் நலத்தையும், அபாயமில்லாததையும் விசாரித்தார். நல்தர்மங்களையுடைய கெளஷிகர் (அதாவது விஷ்வாமித்ரர்) பட்டணத்திலும், கருவூலத்திலும், தேசத்திலும், பந்துக்களிடத்திலும், நண்பர்களிடத்திலும் ராஜாவினுடைய நலத்தை விசாரித்தார். உம்முடைய சிற்றரசர்கள் எல்லோரும் கீழ்பணிந்திருக்கிறார்களா? எதிரிகள் ஜெயிக்கப்பட்டார்களா? உம்முடைய தெய்வ மற்றும் மானுட கர்மங்களும் நன்றாக கடைபிடிக்கப்படுகிறதா?’

முனிபுங்கவர் (அதாவது விஷ்வாமித்ரர்) வசிஷ்டரிடமும், பிற ரிஷிகளிடமும் அருகே பொய் மகா பாக்கியமுடைய நியாயப்படி நலம் விசாரித்தார். பூஜிக்கப்பட்டவர்களாய், மனக்களிப்புடையவர்களாய் அவர்கள் எல்லோரும் அப்பொழுது அரசவைக்குள் பிரவேசித்தார்கள். அங்கு உடனே முறைப்படி அமர்ந்தார்கள். பிறகு, வேண்டினவைகளையெல்லாம் அளிக்கத்தக்கவரான ராஜா மனக்களிப்புடையவராய், சந்தோஷமடைந்தவராய் மகாமுனி விஷ்வாமித்ரரைப் பார்த்து, நன்றாக பூஜித்தவராய் சொன்னார். மகாமுனியே, அமிர்தம் கிடைக்கப்பெறுதல் எவ்வண்ணமோ, நீரற்றவிடத்தில் மழை எவ்வண்ணமோ, தனக்குச்சரியான தாரத்திடம் புத்திர ஜன்மம் கொண்டாடப்படுவது எவ்வண்ணமோ, பெருநஷ்டமடைந்தவனுக்கு லாபம் எவ்வண்ணமோ, பெரும் நிகழ்வில் சந்தோஷம் எவ்வண்ணமோ, அவ்வண்ணமே உம்முடைய வரவை நல்வரவாக கருதுகிறேன். உமக்கு மகிழ்ச்சியோடு கூடிய (நான்) எந்த மகத்தான விருப்பத்தை எந்தவிதமாயும் செய்கிறேன். அந்தணரே! என் தானங்களை பெறுவதற்கு உத்தம பாத்திரமானவராய் இருக்கிறீர். தார்மிகரே, (என்) அதிர்ஷ்டத்தால் இங்கு வந்தவர் ஆகிறீர். என்னுடைய ஜன்மம் இப்பொழுது பயனுள்ளதானது. ஜீவிதமும் நல் ஜீவிதமானது. முதலில் ராஜரிஷி பட்டத்தோடு தவத்தால் பிரகாசிக்கும் ஒளியுடையவராய் பிரம்மரிஷி பட்டத்தை பிராப்தம் பெற்றீர். என்னால் பலவிதமாய் பூஜிக்கப்படவேண்டியவர் ஆகிறீர். பிரபுவே, உம்முடைய தரிசனத்தால் நான் சுப க்ஷேத்திரங்களை அடைந்தவனே. அந்தணரே! அந்த இது (அதாவது தரிசனம்) எனக்கு மிகவும் பவித்திரம். வரவை குறித்து உமக்கு எந்த காரியம் உத்தேசிக்கப்பட்டதோ (அதை) சொல்லும். நான் அனுக்கிரகிக்கப்பட்டவனாய் உமக்கு ஊழியம் செய்ய இச்சை கொள்கிறேன். கெளஷிகரே (அதாவது விஷ்வாமித்ரரே), காரியத்தில் சந்தேகமடைய உரியவராகிறீர் இல்லை. நான் எல்லாவற்றையும் மீதமில்லாமல் செய்கிறவன் இல்லை. தாம் எனக்கு தெய்வம் அன்றோ! த்விஜரே (த்விஜர் என்றால் இருபிறப்பாளன் என்று பொருள், முதல் பிறப்பு இயற்கையான முறையில் நிகழ்வது. இரண்டாம் பிறப்பு பரமாத்மாவை உணர்கையில் கிடைப்பது), எனக்கு இந்த மகத்தான (செல்வ)சம்பத்தும் வந்துவிட்டது. உம்முடைய வரவினாலுண்டான தர்மம் எல்லாம் எனக்கு சிறந்தது.

இவ்விதம் இதயத்திற்கு சுகமான, கேட்பதற்கு சுகமான புத்திமானாலே வினயத்தோடு சொல்லப்பட்ட வாக்கியத்தை கேட்டு, பெரும் புகழ்பெற்ற, (நற்)குணங்களோடு கூடின பரமரிஷி (விஷ்வாமித்ரர்) அதிக சந்தோஷத்தை அடைந்தார்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் பதினெட்டாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment