Friday, December 13, 2019

எட்டாம் ஸர்க்கம் – அஷ்வமேத யாகத்தை நிச்சயித்தல்



இப்படிப்பட்ட பிரபாவமுடையவரும், தர்மமறிந்தவரும், மகாத்மாவானவரும் புத்திரநிமித்தம் தவம் செய்கிறவருமான அவருக்கு (அதாவது தசரதருக்கு) வம்சத்தை பெருக்கிற புத்திரன் இல்லை. சிந்தித்துக்கொண்டிருக்கிற மகாத்மாவான அவருக்கு புத்திரனை அடையும் பொருட்டு நான் அஷ்வமேதத்தால் ஏன் யாகம் செய்யவில்லை?’ என்ற இந்த எண்ணம் உண்டாயிற்று.

புத்திமானும், தர்மாத்மாவுமான ராஜா யாகம் செய்யவேண்டும்என்ற நிச்சயமான எண்ணத்தை கொண்டு அதன்மேல் முக்கிய மந்திரியான சுமந்த்ரரை பார்த்து இவ்வாறு சொன்னார், ‘புரோகிதர்களோடு கூடின சுயக்ஞரையும், வாமதேவரையும், ஜாபாலியையும் மேலும் காஷ்யபரையும், புரோகிதரான வசிஷ்டரையும் பிற முக்கிய த்விஜர்கள் (த்விஜர் என்றால் இருபிறப்பாளன் என்று பொருள், முதல் பிறப்பு இயற்கையான முறையில் நிகழ்வது. இரண்டாம் பிறப்பு பரமாத்மாவை உணர்கையில் கிடைப்பது) எவர்களோ அந்த என்னுடைய குருமார்கள் எல்லோரையும் ஒழுக்கமான ஆத்மாவையுடைய அனைத்து மந்திரிமார் சகிதமாய் சீக்கிரம் அழைத்துவாரும்(என்றார்). அதனால் அந்த வேகமான நடையையுடைய சுமந்த்ரர் துரிதமாய் சென்று ஒன்றுசேர்ந்து இருக்கிறவர்களும், வேதங்களில் கரைகண்டவர்களுமான அந்த அந்தணர்களை அழைத்து வந்தார். தர்மாத்மாவான ராஜா தசரதர் அவர்களை பூஜித்து அப்பொழுது அறம், பொருள் சகிதமான, லட்சணமான இந்த வார்த்தையை சொன்னார்.

புத்திரனைப் பொருட்டு பரிதவிக்கிற எனக்கு சுகமில்லை. அதற்காக ஹயமேத (அதாவது அஷ்வமேத) யாகமதை நான் செய்ய வேண்டும் என்பது என் எண்ணம். ஆகையால், நான் சாஸ்திரங்களில் கண்ட கர்மங்களினால் யாகம் செய்ய இச்சை கொள்கிறேன். இவ்விஷயத்தில் நான் விரும்பியதை எப்படி அடைவேனோ அப்படி உபாயம் விசாரிக்கப்படட்டும்.(உடனே) வசிஷ்டரை தலைமையாகவுடைய அனைத்து பிராமணர்களும் வேந்தனுடைய முகத்திலிருந்து உதித்த அந்த வாக்கியத்தை நல்லது, நல்லதுஎன்று இதையொட்டி பூஜித்தனர். அவர்கள் எல்லோரும் மிக மகிழ்வுற்றவர்களாய் உடனே தசரதரைப்பார்த்து, ‘வேந்தே! எந்த உமக்கு புத்திரரைப் பொருட்டு தர்மசம்பந்தமாக இந்த எண்ணம் வந்ததோ (அந்த நீர்) அனைத்து வகையிலும் விரும்பிய புத்திரர்களையே அடையப்போகிறீர். (யாக) பொருட்கள் வழங்கப்படட்டும், குதிரையும் விடப்படட்டும். சரயுநதியின் வடக்கு கரையில் யாகபூமி நிர்மிக்கப்படட்டும்.(என்ற) வார்த்தையையும் சொன்னார்கள்.

அப்பொழுது த்விஜர்களால் (த்விஜர் என்றால் இருபிறப்பாளன் என்று பொருள், முதல் பிறப்பு இயற்கையான முறையில் நிகழ்வது. இரண்டாம் பிறப்பு பரமாத்மாவை உணர்கையில் கிடைப்பது) சொல்லப்பட்ட இதை கேட்டு ராஜா மகிழ்வடைந்தவராக ஆனார். ராஜா மகிழ்ச்சியால் நிறைந்த கண்களையுடையவராக மந்திரிகளைப்பார்த்து சொன்னார், என்னுடைய குருமார்களுடைய வார்த்தையால் இப்பொழுது (யாக) பொருட்கள் சேர்க்கப்படட்டும். சமர்த்தர்களால் பாதுகாக்கப்பட்ட, உபாத்யாயர்களோடு கூடின குதிரையும் விடப்படட்டும். சரயு (நதியின்) வடக்கு கரையில் யாகபூமியும் நிர்மிக்கப்படட்டும். சடங்குப்படி, விதிப்படி சாந்தி கர்மங்களும் வலுவடையட்டும். இந்த முக்கிய யாகத்தில் கடும் அபராதம் உண்டாகும், இல்லையாகில் இந்த யாகம் அனைத்து அரசனாலும் அடைய சாத்தியமாகும். வித்வான்களான பிரம்மராட்சசர்கள் இந்த விஷயத்தில் குறைப்பாட்டை தேடுகிறார்கள். அக்காரணத்தால் தடுக்கப்பட்ட யாகத்தினுடைய கர்த்தா உடனே நாசமடைகிறான். ஆகையால் என்னுடைய இந்த யாகம் விதிப்படி எவ்வண்ணம் பூர்த்தியாகுமோ, அவ்வண்ணம் ஏற்பாடு செய்யப்படட்டும். இந்த காரியங்களில் (நீங்கள்) சமர்த்தர்கள்.

அந்த அனைத்து மந்திரிகளும் வேந்தேந்திரனுடைய (அதாவது ராஜேந்திரனுடைய) அந்த வாக்கியத்தை கேட்டு, ‘எவ்வண்ணம் ஆணையிடப்பட்டதோ அவ்வண்ணமே செய்கிறோம்என்று சொன்னார்கள், கொண்டாடினார்கள். தர்மறிந்த அந்த த்விஜர்கள் (த்விஜர் என்றால் இருபிறப்பாளன் என்று பொருள், முதல் பிறப்பு இயற்கையான முறையில் நிகழ்வது. இரண்டாம் பிறப்பு பரமாத்மாவை உணர்கையில் கிடைப்பது) அனைவரும் உத்தம அரசரை அவ்வாறு புகழ்ந்தவர்களாய், விடைபெற்றவர்களாய் அதன்மேல் வந்தவாறு திரும்பிச்சென்றனர். அந்த பிராமணர்களை அனுப்பிவிட்டு மந்திரிகளைப்பார்த்து இவ்வாறு சொன்னார், ‘ரித்விஜர்களால் நியமிக்கப்பட்ட இந்த யாகம் முறைப்படி பெறப்படட்டும்,’ என்று சொல்லி மகத்தான ஒளிபொருந்திய அரசருள் புலியைப்போன்றவர் (அதாவது தசரதர்) அருகிலிருக்கிற மந்திரிகளை விடைகொடுத்தனுப்பி தனது இருப்பிடத்தை அடைந்தார். அந்த நரேந்திரர் (அதாவது தசரதர்) அவ்விடத்திற்கு சென்று இதயத்திற்கு பிரியர்களான அந்த பத்தினிகளைப்பார்த்து, ‘புத்திரநிமித்தமாக நான் யாகம் செய்யப்போகிறேன். தீட்சையை அடையுங்கள்.(என்று) சொன்னார். அதி அன்பிற்குரிய அந்த வார்த்தையால் நல் ஒளிபொருந்திய அவர்களுடைய தாமரைப்போன்ற முகங்கள் குளிர்கால முடிவில் (உள்ள) தாமரையைப்போன்று விளங்கின.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் எட்டாம் ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment