Friday, December 13, 2019

ஏழாம் ஸர்க்கம் – மந்திரிகளுடைய வர்ணனை



மகாத்மாவானவரும், இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்தவருமான அவருக்கு (அதாவது தசரதருக்கு) மந்திராலோசனை விஷயங்களை அறிந்தவர்களாகவும், இங்கிதமறிந்தவர்களாகவும் (அதாவது பிறர் அபிப்ராயத்தை உணர்ந்தவர்களாகவும்), எப்பொழுதும் பிரியரின் நன்மையில் நோக்கமுடையவர்களுமான மந்திரிகள் குணங்களோடு கூடினவர்களாக இருந்தார்கள். புகழ்பெற்ற வீரரான அவருக்கு (அதாவது தசரதருக்கு) பரிசுத்தர்களாகவும், எப்பொழுதும் ராஜகார்யங்களில் ஈடுபாடுள்ளவர்களாகவும் எட்டு மந்திரிகள் இருந்தார்கள்.

திருஷ்டி, ஜயந்தர், விஜயன், சித்தார்த்தன், அர்த்தசாதகன், அசோகன், மந்த்ரபாலர் மற்றும் சுமந்த்ரன் என்ற பிரசித்தமான எட்டு (பேர்) இருந்தார். அப்படியே அவருக்கு இதர மந்திரிகளும், இரு உத்தம ரிஷிகளான வசிஷ்டரும், வாமதேவரும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ரித்விஜர்களாய் இருந்தார்கள். கல்வியில் தேர்ச்சியடைந்தவர்கள், அடக்கமுள்ளவர்கள், சாமர்த்தியசாலிகள், இந்திரியங்களை அடக்கினவர்கள், ஸ்ரீயை (அதாவது செல்வத்தை) உடையவர்கள் மேலும் மகாத்மாக்கள், சாஸ்திரமறிந்தவர்கள், திடமான பராக்கிரமமுடையவர்கள். பெருஞ்சிறப்பு பெற்றவர்கள், (ராஜ்ய காரியங்கள்) ஒப்படைக்கப் பெற்றவர்கள், சொன்னபடி நடப்பவர்கள், தேஜஸ், பொறுமை, புகழ் இவைகளை அடைந்தவர்கள், புன்னகையுடன் பேசுபவர்கள். குரோதத்தாலோ, காமம், அர்த்தம் இவைகளின் நிமித்தத்தாலோ நிஜமற்ற வார்த்தையை சொல்லார்கள்.

அவர்களுக்கு தங்கள் (ராஜ்யத்திலோ), பிற (ராஜ்யங்களிலோ) நடப்பவையும், நடந்தவையும், நடக்கவிருப்பவையும் ஒற்றரால் அறியப்படாதது ஒன்றுமில்லை. விவகாரங்களில் சாமர்த்தியசாலிகள், நட்பு விஷயங்களில் பரீட்சிக்கப்பட்டவர்கள், தகுந்த காலத்தில் குற்றத்துக்கான தண்டனையை புத்தளர்வைகளாயினும் தருபவர்கள். பொக்கிஷங்களை சம்பாதிப்பதிலும், (படை)பலங்களை இராணுவமயமாக்குவதிலும் தேர்ந்தவர்கள். குற்றமற்ற நபர் எதிரியாய் இருந்தபோதிலும் பீடியார்கள். (அவர்கள்) வீரர்கள் மேலும் எப்பொழும் உற்சாகமுடையவர்கள், ராஜசாஸ்திரத்தை அனுசரிப்பவர்கள், தேசத்தில் வசிக்கும் தூய்மையானவர்களுக்கு எப்பொழுதும் ரட்சகர்கள். பிராமணர்கள், க்ஷத்ரியர்கள் இம்சித்து பொக்கிஷத்தை நிரப்பாதவர்கள், ஓர் நபரின் பலம் மற்றும் பலவீனத்தை நன்றாய் பார்த்தே கூரான தண்டனையை வழங்குவார்கள்.

ஒரே புத்தியுள்ளவர்களும், பரிசுத்தர்களும், நிர்வாகிகளும் ஆன இந்த அனைவரினால் பட்டணத்திலோ, தேசத்திலோ ஓரிடத்திலும் பொய் பேசுகிற நரன் இல்லை. அங்கு ஓர் மனிதனும் துஷ்டனாய், பிறர் தாரத்தின் மீது ஆசை வைப்பவனாய் இல்லை. அந்த தேசமும், சிறந்த பட்டணமும் அனைத்தும் மங்கலமாய் இருந்தது. அவர்கள் (அதாவது மந்திரிகள்) எல்லோரும் நல்லாடை அணிந்தவர்கள், நல் ஆபரணங்களை அணிந்தவர்கள் மேலும் நல்லொழுக்கமுடையவர்கள். நரேந்திரனுடைய (அதாவது அரசருடைய) நன்மையின் பொருட்டு நீதிக்கண்ணாலே விழித்துக் கொண்டிருப்பவர்கள். குருவிடத்திலே குணத்தை கிரகிப்பவர்கள் மேலும் பராக்கிரமத்தில் பிரசித்தர்கள், அனைத்து விதேசங்களிலும் புத்தி நிச்சயத்தால் அறியப்பட்டவர்கள், திறமையாளர்களாயும், குணவான்களையும் இருந்தார்கள். குணத்தால் கர்வமடைந்தவர்களாக இல்லை. ஸந்தி, விக்ரஹம் இவைகளுடைய தத்துவத்தை அறிந்தவர்கள், மந்திராலோசனையை வெளிவிடாமலிருப்பதில் தேர்ந்தவர்கள், நுட்பமான புத்தியினில் சமர்த்தர்கள், அனைத்து சாஸ்திரங்களில் நிபுணர்கள்.

நீதி சாஸ்திரங்களுடைய விசேஷங்களை அறிந்தவர்கள், எப்பொழுதும் பிரியமாய் பேசுகிறவர்கள், இப்படிப்பட்ட நற்குணங்களோடு கூடின அந்த மந்திரிகளோடு ராஜா தசரதர் பூமியை ஆண்டார். ஒற்றரால் பார்க்கிறவராய், தர்மத்தோடு பிரஜைகளை மகிழ்விப்பவராய், பிரஜைகளுடைய பரிபாலனத்தை செய்கிறவராய், அதர்மத்தை நீக்குகிறவராய், மூவுலகத்திலும் புகழ்பெற்றவராய், கொடையாளியாய்சத்தியமான ப்ரதிக்ஞையுடையவராய்  அந்த நரர்களுள் புலி (அதாவது தசரதர்) அப்போது இந்த பூமியை ஆண்டார். தனக்கான எதிரியை அதிகனாயோ, சமானனாயோ சந்தித்ததில்லை. நண்பர்களையுடையவரும், வணங்கிய சிற்றசர்களை உடையவரும், பிரதாபத்தால் (எதிரிகள் எனும்) முட்களிடம் இருந்து விடுபெற்றவரான அந்த ராஜா தேவலோகத்தை தேவபதி (அதாவது தேவேந்திரன்) போல் ஜகத்தை ஆண்டார். மந்திராலோசனை, நன்மை இவைகளில் சிரத்தையுள்ளவர்களும், அன்பிற்குரியவர்களும், புத்திமான்களும், சமர்த்தர்களுமான அந்த மந்திரிகளால் சூழப்பட்ட அந்த வேந்தர் தேஜோமயமான கிரணங்களால் அமையப்பெற்றவராய் உதித்த அர்கன் (அதாவது சூர்யன்) போல் ஒளியை அடைந்தார்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் ஏழாம் ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment