Saturday, December 7, 2019

ஆறாம் ஸர்க்கம் – தசரதரின் ராஜ்யபரிபாலனம்



அந்த அயோத்யா பட்டணத்தில் அனைத்தும் அறிந்தவரும், எல்லாவற்றையும் சேர்ப்பவரும் (செல்வமாகினும், படைபலமாகினும், ஆன்றோராகினும் என அனைத்தையும் சேர்ப்பவர்), தீர்க்கதரிசியானவரும், மகாதேஜஸ்வியும், நகர மற்றும் கிராம ஜனங்களுக்கு பிரியமானவரும், இக்ஷ்வாகு வம்சத்திலுண்டானவர்களுள் அதிரதராய் (60,000 வீரர்களை ஒரே சமயத்தில் எதிர்கொள்ளத்தக்கவரே அதிரதர் எனும் பட்டம் பெறுவர்) யாகங்களை செய்தவரும், தர்மத்தில் ஆனந்தம் கொள்பவரும், (எல்லோரையும்) வசப்படுத்துபவரும், மகரிஷிகளுக்கு ஒப்பான ராஜரிஷியும், மூவுலகங்களில் புகழ்பெற்ற பலவானும், எதிரிகளை அழிப்பவரும், நண்பர்களுடன் கூடினவரும், இந்திரியங்களை வென்றவரும், தனத்தாலும் பிற செல்வங்களாலும் ஷக்ரனுக்கும் (அதாவது தேவேந்திரனுக்கும்), வைஷ்ரவணனுக்கும் (அதாவது குபேரனுக்கும்) ஒப்பானவராய், எப்படி மகாதேஜஸ்வியான மனு உலகத்தை ரட்சிப்பவரானாரோ அவ்வாறே ராஜா தசரதர் வசித்துக்கொண்டு ஜகத்தை காத்தார்.

சத்தியசந்தரும், மூன்று வர்கங்களை (அதாவது அறம், பொருள், இன்பங்களை) அனுசரிக்கிறவருமான அவரால், ஷக்ரனால் (அதாவது தேவேந்திரனால்) அமராவதி போல், சிறந்ததான அந்த பட்டணம் பரிபாலிக்கப்பட்டது. அந்த சிறந்த பட்டணத்தில் நரர்கள் சந்தோஷமுடையவர்கள், தர்மாத்மாக்கள், வெகு சாஸ்திரமறிந்தவர்கள், தத்தமது தனத்தினில் திருப்தி அடைந்தவர்கள், பேராசையற்றவர்கள், சத்தியத்தையே பேசுபவர்கள். அந்த உத்தமமான பட்டணத்தில் அற்பமான சேமிப்புடையவனும், பசு, குதிரை, தனம் மற்றும் தான்யமற்றவனும், வளமற்ற குடும்பஸ்தன் என்று ஒருவனுமில்லை.

காமம் கொண்டவன் அல்லது அற்பகுணமுள்ளவன் அல்லது கொடூரமான புருஷன் - அயோத்தியில் ஓரிடத்திலும் காண இயலாது. வித்துவான் இல்லாதவன் இல்லை, நாத்திகனும் இல்லை. அனைத்து நரர்களும், பெண்களும் தர்மசீலர்களான, நல் சுயகட்டுப்பாடு உடையவர்களான, ஒழுக்கம் மற்றும் நன்னடத்தை கொண்டவர்களான, நிர்மலமான மகரிஷிகளை போன்றவர்கள். குண்டலமில்லாதவன் இல்லை, மகுடமில்லாதவன் இல்லை, மாலை இல்லாதவன் இல்லை, அற்பபோகம் கொண்டவன் இல்லை, பரிசுத்தமற்றவன் இல்லை, கூழ் (அதாவது ஆங்கிலத்தில் cream) பூசாத அங்கமுடையவனும் இல்லை, நல் நறுமணம் இல்லாதவனும் இல்லை.

நன்றாய் உண்ணாதவன் இல்லை, கொடுக்காதவன் இல்லை, தோள்வளைகளையும், ஹாரங்களையும் தரியாதவன் இல்லை, அன்றியும் கைகளுக்கு ஆபரணம் இல்லாதவனும் இல்லை, இந்திரியங்களை அடக்காதவனும் காணப்படவில்லை. அயோத்தியில் அக்ஞாதானம் (எனும் ஹோமம்) செய்யாதவன் ஒருவனும் இருந்ததில்லை, யாகம் பண்ணாதவன் இல்லை, ஏழ்மையானவன் இல்லை, திருடன் இல்லை, கலப்பினங்களால் தோன்றியவனும் இல்லை. பிராமணர்கள் நித்தமும் தமது கர்மத்தில் ஈடுபட்டிருந்தார்கள், இந்திரியங்களை வென்றவர்களாய் இருந்தார்கள், மேலும், தானம், அத்யயனம் இவைகளை சுபாவமாக உடையவர்கள், அன்றியும், கிரகிப்பதில் கட்டுள்ளவர்கள். அப்பொழுது நாத்திகன் ஒருவனுமில்லை, பொய் பேசுபவன் இல்லை, வெகு சாஸ்திரங்களை அறியாதவன் இல்லை, பொறாமையுடையவன் இல்லை, சக்தியற்றவன் இல்லை, வித்துவான் இல்லாதவன் இல்லை.

இங்கு ஆறு (வேத) அங்கங்களை அறியாதவன் ஒருவனும் இல்லை, விரதமில்லாதவன் இல்லை, ஆயிரக்கணக்காக கொடாதவன் இல்லை, தீனனும், தயங்கிய மனமுடையவனும், மனக்கலக்கமுடையவனும், பிணியால் வருந்துகிறவனும் இல்லை. அயோத்தியில் ஸ்ரீயில்லாத (அதாவது செல்வமில்லாத) ஒரு மனிதனாவது, பெண்ணாவது பார்க்க முடியாது, அரூபனும் இல்லை, அரசனிடத்தில் பக்தியில்லாதவனும் இல்லை. உத்தமமான பட்டணமதில் முக்கியமான நான்கு வர்ணங்களில் உள்ள அனைத்து மனிதர்களும் தேவர்களையும், அதிதியையும் (அதாவது விருந்தினர்களையும்) பூஜித்தார்கள், நன்றியறிவுள்ளவர்கள் மற்றும் கொடையாளிகள். அன்றியும், சூரர்கள், பராக்கிரமத்தோடு கூடினவர்கள். தர்மத்தையும், சத்தியத்தையும் பற்றிக்கொண்டவர்கள், நீண்ட ஆயுளை உடையவர்கள், எப்பொழுதும் மனைவிகள், புத்திர மற்றும் பேரன்கள் சகிதமாய் இருப்பவர்கள். க்ஷத்ரியர்கள் பிராமணர்களை முகமாய் உடையதாக இருந்தனர். வைஷ்யர்களும் க்ஷத்ரியர்களுக்கு விசுவாசமாய் இருந்தார்கள். சூத்திரர்கள் மூன்று வர்ணங்களையும் உபசரித்தார்கள். தங்கள் கர்மத்தில் ஈடுபாடுடன் இருந்தார்கள்.

அந்த பட்டணம் முன்பு மானுடர்க்கு இந்திரனான, தீமானான மனுவைப் போல் இக்ஷ்வாகு வம்ச நாதரான அவரால் (அதாவது தசரதரால்) நன்றாய் ரட்சிக்கப்பட்டது. குகையானுள் சிங்கங்கள் எவ்வாறோ (அவ்வாறே அந்நகரம்) அக்னிக்கு ஒப்பானவர்களும், வல்லுநர்களும், அறிவாளிகளும், படித்தவர்களுமான படை வீரர்களால் நிறைந்திருந்தது. காம்போஜதேசத்தில் (வியட்நாம் அருகே உள்ள இன்றைய கம்போடியா தேசம்) உண்டானவைகளும், பாஹ்லீகதேசத்திலுண்டானவைகளும் (பாஹ்லீகம் இன்றைய ஆப்கானிஸ்தான் அருகே உள்ள பால்க் பகுதியாக இருக்கலாம்), வனாயுதேசத்தில் உண்டானவைகளும், சிந்துதேசத்தில் உண்டானவைகளும், ஹரியின் (அதாவது தேவேந்திரனின்) உத்தமமான குதிரையைப்போன்ற உத்தம குதிரைகளால் நிறைந்திருந்தது. கொழுத்தவைகளும், விந்தியமலையினில் உண்டானவைகளும், ஹிமவத் (அதாவது இமய) மலையில் உண்டானவைகளும், மதத்தோடு கூடினவைகளும், அதிக பலமுள்ளவைகளும், பர்வதங்களுக்கு நிகரானவைகளுமான யானைகளால் நிறைந்திருந்தது.

ஐராவத குலத்தினில் உண்டானதும், மகாபத்மம் எனும் குலத்தினில் உண்டானதும், அப்படியே அஞ்ஜனத்திலிருந்தும், வாமனத்திலிருந்தும் உண்டான யானைகளாலும், பத்ரம் எனும் வகையிலுண்டானதும், மந்த்ர வகையிலுண்டானதும், ம்ருக வகையிலுண்டானதும், பத்ர-மந்த்ர-ம்ருக வகையில் கலந்து உண்டானதும், பத்ர-ம்ருக வகையில் கலந்து உண்டானதும், அப்படியே பத்ர-மந்த்ர வகையில் கலந்து உண்டானதும், மந்த்ர-ம்ருக வகையில் கலந்து உண்டானதும், எப்பொழுதும் கொழுத்திருக்கிறவைகளுமான யானைகளாலும் அந்த பட்டணம் எப்பொழுதும் நிறைந்திருந்தது. எதில் ராஜா தசரதர் வாசித்துக்கொண்டு ஜகத்தை காத்தாரோ, அது (நகரைத் தாண்டி) வெளியே இரண்டு யோஜனைகளுள்ளது. பெயருக்கேற்றவாறு பிரகாசித்தது. மகாதேஜஸ்வியான அந்த மகானான ராஜா தசரதர், சந்திரன் நட்சத்திரங்களைப்போன்று, அந்த பட்டணத்தை அடக்கப்பட்ட எதிரிகளை உடையவராக ஆண்டார். திடமான வாயிற்கதவிற்கு தாழ்ப்பாளையுடையதும், விசித்திரமான வீடுகளால் நன்கு விளங்குகிறதும், மங்கலகரமானதும், ஆயிரக்கணக்கான மனிதர்களால் நிறைந்ததும், (அயோத்தி எனும்) பெயருக்கு உண்மையானதுமான அந்த அயோத்யா பட்டணத்தை ஷக்ரனுக்கு (அதாவது தேவேந்திரனுக்கு) சமமான வேந்தர் (அதாவது தசரதர்) ஆண்டு வந்தார்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் ஆறாம் ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment