(ஓவியத்தில் அயோத்யா)
“முழுமையான இந்த பூமி, வெற்றியால் விளங்குகிற எந்த அரசர்களுக்கு
பிரஜாபதியை தொடங்கி, எல்லோருக்கும் அபூர்வமாய் இருக்கும்படி இருந்ததோ, எவர்களுக்குள்
அந்த ஸகரரோ (அதாவது ஸகர மகாராஜா) - எவரால்
சமுத்திரம் தோண்டப்பட்டது பிரசித்தமோ! வெளியில் புறப்பட்ட எவரை (அதாவது ஸகரர்) அறுபதாயிரம் புத்திரர்கள் சூழ்ந்து
கொண்டனரோ, மகாத்மாக்களான இக்ஷ்வாகு வம்சத்திலுண்டானவர்களான அந்த
ராஜாக்களுடைய வம்சத்தில் ராமாயணமென்று பிரசித்தமான, மகத்தான இந்த
கதை உண்டாயிற்று. அந்த இதனை
வெளியிடுகிறேன்.
“அறம், இன்பம், பொருள் சகிதமான எல்லாம் ஆதிமுதல் முழுமையும் பொறாமையின்றி
கேட்கத்தக்கது. மகிழ்ச்சி பொருந்திய, செழித்தோங்கிய, அதிக தனதான்யங்களுடைய கோசலம் என்று பெயர்பெற்ற மகா ஜனபதம் (அதாவது தேசம்) சரயு ஆற்றங்கரையில் நிறுவப்பட்டது.
அயோத்யா என்று பெயர்கொண்ட உலகப்புகழ் கொண்ட நகரம் அங்கு இருந்தது. அந்த பட்டணமானது
மானுடர்க்கு இந்திரரான மனுவினால் சுயமாகவே நிர்மாணிக்கப்பட்டது. பன்னிரண்டு யோஜனை
நீளமும், மூன்று யோஜனை அகலமும் கொண்டது (ஒரு யோஜனை 13 கி.மீ.
என்று ஸ்வாமி பிரபுபாதர் கூறியுள்ளார்). மகத்தான பட்டணம். ஸ்ரீயை (அதாவது
செல்வத்தை) உடையது. நன்றாய் பிரிக்கப்பட்ட மகத்தான பாதைகளை உடையது. உதிர்ந்த
பூக்களால் நிறைந்த, நித்தமும் நீரால்
நனைக்கப்பட்ட, நன்றாய் பிரிக்கப்பட்ட
மகத்தான ராஜமார்க்கத்தால் அலங்கரிக்கப்பட்டது.
“மகா ராஜ்யத்தை வளரச்செய்கிறவரான ராஜா தசரதர், தேவலோகத்தை தேவபதி (அதாவது இந்திரன்) போன்று அந்த பட்டணத்தை ஆண்டு வந்தார்.
“அலங்கரிக்கப்பட்ட வெளிவாயிற் கதவையுடையதும், நன்றாய் பிரிக்கப்பட்ட நடுப்பகுதியில் கடைகளையுடையதும், அனைத்து எந்திரங்களையும் ஆயுதங்களையுமுடையதும், அனைத்து சிற்பிகளோடு கூடினதும், (அரசரைத் துதித்து பாடுபவர்களான) சூதர்களாலும் (குலமுறை
கூறி புகழ்ந்து அரசரை துயிலெழுப்புபவர்களான) மாகதர்களாலும் நிறைந்துள்ளதும், ஸ்ரீயை (அதாவது செல்வத்தை) உடையதும், உச்சமான காவல் கோபுரங்கள் மீது கொடிகளை உடையதும், நூற்றுக்கணக்கான ஷதக்னியால் (ஷதக்னி எனும் பீரங்கிகளால்) நிறைந்ததும், அவ்வாறாய் மகிமை பொருந்திய பட்டணமெங்கும் பெண்களுக்கான
நடனம் மற்றும் நாடக சங்கங்களோடு கூடினதும், அரசினர் தோட்டங்கள் மற்றும் மாஞ்சோலைகளோடு கூடினதும், ஒட்டியாணம் போன்ற மதில்களையுடையதும், பெரும் ஆழமுடைய அகழியையுடைய கோட்டையையுடையதும், பிறரால் முயன்றும் புகுவதற்கு அரிதானதும், குதிரைகளாலும் வாரணங்களாலும் நிறைந்ததும், பசுக்களாலும், ஒட்டகங்களாலும், கழுதைகளாலும் அப்படியே கப்பங்களை கட்டுகிற சிற்றரசர்களின்
கூட்டங்களாலும் நிறைந்துள்ளதும், பல்வேறு
தேசங்களில் வசிக்கும் வணிகர்களால் விளங்குகிறதும், மலையைப்போன்று ரத்தினங்களால் இழைக்கப்பட்ட மாளிகைகளால்
விளங்குகிறதும், மேல் வீடுகளால்
நிறைந்ததும், இந்திரனுடைய
அமராவதியைப்போல் ஆச்சர்யமான எண்கோணம் (அதாவது ஆங்கிலத்தில் Octagon) போன்ற வடிவமைந்ததும், சிறந்த பெண் சமூகங்களோடு கூடினதும், அனைத்து வகை ரத்தினங்களால் நிறைந்ததும், விமானங்களுக்கொப்பான வீடுகளால் விளங்குகிறதும், நெருக்கமான வீடுகளைக் கொண்டதும், குற்றமில்லாமல் இருக்கிறதும், சமமான பூமியில் நிர்மாணிக்கப்பட்டதும், செந்நெல் அரிசி வளமுள்ளதும், கரும்புக்கண்டத்தின் ரசம்போன்ற நீரையுடையதும், துந்துபிகளாலும், மிருதங்கங்களாலும், வீணைகளாலும், மத்தளங்களாலும்
உண்டாகும் மிக்க நாதங்களால் (நிறைந்ததும்), அப்படியே பூமியில் மிகவும் உத்தமமானதும், தவத்தால் அடையப்பட்ட சித்தர்களுடைய விமானம் போன்றதாய், தேவலோகத்தில் குபேரனுக்கோ, இந்திரனுக்கோ, யமனுக்கோ, வருணனுக்கோ இல்லாததும், சுயம்புவான பிரம்மாவினுடைய ரம்மியமான பட்டணம் கூட
இப்பேற்பட்டதாக இல்லையோ (என்று)
பிரசித்திப்பெற்ற நன்றாய் இயற்றப்பட்ட வீடுகளின் உட்புறங்களை உடையதும், உத்தமமான மானுடற்கு இந்திரர்களால் (அதாவது மானுடத் தலைவர்களால்) நிறையப்பெற்றதும், அஸ்திரவித்தையில் தேர்ச்சியடைந்து கொண்டாடப்படுபவர்களான
எவர் தனிமையிலிருப்பவனையும், சந்ததியில்லாதவனையும், ஒலியால் அறியத்தக்கவனையும் (அதாவது கண்ணெதிரில் இல்லாதவனையும்), புறங்காட்டி பயந்தோடுபவனையும் பாணங்களால் அடிக்கிறார்
இல்லையோ; வனத்தில் கொழுத்த உரும்பிக்கொண்டிருக்கிற சிங்கங்களையும், புலிகளையும், காட்டுபன்றிகளையும்
பலத்தாலும், தோள் வலிமையாலும், கூரான ஆயுதங்களாலும் கொல்கிறார்களோ; மகாரதர்களான (7,20,000 வீரர்களை ஒரே
சமயத்தில் எதிர்கொள்ளத்தக்கவரே மகாரதர் எனும் பட்டம் பெறுவர்) அப்படி ஒளிபெற்ற ஆயிரக்கணக்கானோரால் நிரம்பிச்சூழ்ந்ததும், யாகம் செய்கிற, நல் குணமுடைய, வேதங்களையும், (வேதத்தின்) ஆறு அங்கங்களையும்
கற்றுக் கரைக்கண்ட, வெகுவாய் தானம் செய்கிற, சத்தியம் தவறாத, மகாத்மாக்களான
ஒப்பற்ற ரிஷிகளாலும், மகரிஷிகளுக்கு ஒப்பான
உத்தம த்விஜர்களாலும் (த்விஜர்
என்றால் இருபிறப்பாளன் என்று பொருள்,
முதல் பிறப்பு இயற்கையான முறையில் நிகழ்வது. இரண்டாம்
பிறப்பு பரமாத்மாவை உணர்கையில் கிடைப்பது) சூழப்பட்ட அந்த நகரத்தை அப்பொழுது
ராஜா தசரதர் ஆண்டு வந்தார்.”
|| இவ்வாறாய்
வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் ஐந்தாம் ஸர்க்கம்
முற்றிற்று ||
No comments:
Post a Comment