Thursday, December 5, 2019

நான்காம் ஸர்க்கம் – ஸ்ரீராமசபைக்கு குஷலவர்களின் வரவு

(வால்மீகியுடன் ஸ்ரீராம மைந்தர்களான குஷன் மற்றும் லவன்)

அடையப்பெற்ற ராஜ்யத்தை உடையவரான (ஸ்ரீ)ராமருடைய விசித்திரமான பதங்களுள்ள முழுமையான சரித்திரத்தை பகவானான, முயற்சியையுடைய ரிஷி வால்மீகி இயற்றினார். ரிஷி (அதாவது வால்மீகி) இருபத்தி நான்காயிர ஸ்லோகங்களை அப்படியே ஐநூறு ஸர்கங்களை ஆறு காண்டங்களுடன் அப்படியே உத்தர(காண்டத்தை) சொன்னார். மகா அறிவாளியான அவர் நடக்கப்போகிறதோடு கூடின உத்தர(காண்ட)த்தோடு கூடின அதை செய்து ஆனபோனதிலும் எந்த பிரபு தான் இதை பிரசங்கம் செய்யப்போகிறான்?’ என்ற எண்ணம் கொண்டார். அங்கு முனிவேடத்திலிருந்த குஷன் மற்றும் லவன் இவர்களை சிந்தித்துக்கொண்டிருக்கிற, பரமாத்மாவை தியானம் செய்யும் அந்த மகரிஷியின் பாதம் பற்றினர்.

தர்மமறிந்த ராஜபுத்திரர்களான, புகழ்பெற்றவர்களான, சகோதரர்களான, நல்ல ஸ்வரமுடைய, ஆசிரமவாசிகளான குஷன் மற்றும் லவனை (வால்மீகி) இப்பொழுது கண்டார். வேதங்களில் மேதாவிகளான, நன்றாய் தேர்ந்தவர்களான அவ்விருவர்களையும் அந்த பிரபு கண்டு வேதங்களுடைய விளக்குதலின் பிரயோஜனத்தின் பொருட்டு (ராமாயணத்தை அவர்கள் பிரசங்கம் செய்ய) அங்கீகரித்தார். விரதங்களை மேற்கொள்பவரான அவர் மகத்தான ராமாயணத்தை, சீதையின் சரித்திரத்தை, பெளலஸ்த்யனின் (அதாவது ராவணனின்) வதத்தை, இவை அனைத்தையும் ஓர் காவியமாக செய்தார்.

படிப்பதிலும், பாடுவதிலும் மதுரமான மூன்று பிரமாணங்களோடு (மூன்று பிரமாணங்கள் - பிரத்யக்ஷம் [கருத்து], அனுமானம், சப்தம் [நிபுணரின் சாட்சியம்]) கூடினதான ஏழு ஜாதிகளால் கட்டப்பட்டதான (வீணை)தந்தியில் தாளவொத்தோடு கூடினதான ஹாஸ்யம், ஸ்ருங்காரம், கருணம், வீரம், ரெளத்ரம், பயானகம், பீபத்ஸம் முதலிய ரஸங்களோடு இந்த காவ்யத்தை பாடினார்கள். அவ்விருவர்கள் சகோதரர்கள். இதனன்றி காந்தர்வ தத்துவத்தை (அதாவது கான சாஸ்திரத்தை) அறிந்தவர்கள். மந்த்ரம், மத்தியமம், தாரம் என்று சொல்லப்படும் இசை வகைகளை ஆராய்ந்தவர்கள். நல்ல ஸ்வரமுடையவர்கள். கந்தர்வர்கள் போன்ற ரூபம் கொண்டவர்கள். ரூபம், லட்சணம் இவைகளுடன் கூடினவர்கள். மதுரமான ஸ்வரத்தில் பேசுபவர்கள். பிம்பத்திலிருந்து வேறான பிம்பங்கள் போல (ஸ்ரீ)ராமதேகத்திலிருந்து அதுபோலவே எடுக்கப்பட்டவர்கள் (அதாவது அவர்கள் ஸ்ரீராமருடைய பிள்ளைகள்).

நிந்திக்கத்தகாதவர்களான அவ்விரு ராஜகுமாரர்கள் முழுமையும் தர்மத்தோடுகூடின சிறந்த கதையான அந்த அனைத்துமான காவியத்தை வாக்கினால் பழக்கம் செய்து (அதாவது வார்த்தையால் மனப்பாடம் செய்து), தத்துவங்களை அறிந்தவர்களான, மகாத்மாக்களான, மகாபாக்கியசாலிகளான, சர்வ லட்சணங்களோடு கூடியவர்களான குஷன் மற்றும் லவன் (ஆகிய) அவ்விருவர்கள் ரிஷிகள், சாதுக்கள் மற்றும் த்விஜர்களின் அருகே உபதேசம் பெற்றவாறு பாடினார்கள்.

ஓர் சமயம் ஒன்று சேர்ந்து அமர்ந்திருந்த பரமாத்மாவை தியானம் புரிபவர்களான ரிஷிகளின் சமீபத்தில் இருக்கிறவர்களாய் அவ்விருவர்கள் இந்த காவியத்தை பாடினார்கள். அதை கேட்டு முனிவர்கள் எல்லோரும் கண்ணீரால் நனைந்த கண்களையுடையவர்களாக, அதிக ஆச்சர்யத்தை அடைந்தவர்களாய் அவ்விருவர்களைப் பார்த்து நல்லது, நல்லதுஎன்று சொன்னார்கள். தர்மத்தில் பிரியமுடையவர்களான அந்த முனிவர்கள் எல்லோரும் ப்ரீதியுள்ள மனமுடையவர்களாய் பாடுகிறவர்களான போற்றத்தக்க குஷன் மற்றும் லவன் இவர்களை புகழ்ந்தார்கள். கீதத்தினுடையவும், விசேஷ ஸ்லோகங்களுடையதும் இனிமையானது. இது வெகுகாலத்திற்கு முந்தி உண்டானது, ஆயினும் நேரடியாய் நடப்பது போன்று காட்டப்பட்டது. ஒன்றாயிருக்கிற அந்த இருவர்கள் (கதையின்) உணர்வினுள் நன்றாய் புகுந்து, ஸ்வர செல்வத்துடன் கூடினதாய், மதுரமாய் ராகத்தோடு கூடியதாய் அப்பொழுது பாடினார்கள். மிகவும் உயர்ந்த ராகத்தோடு கூடியதாய் மிகவும் மதுரமாக அவ்விருவர்கள் பாடினார்கள். அவ்விருவர்கள் தவத்தால் சிறந்தவர்களான மகாத்மாக்களால் பின் சொல்லியவாறு போற்றப்பட்டார்கள்.

சந்தோஷமடைந்த ஓர் முனிவர் எழுந்திருந்தவராய் அவர்களுக்கு கலசத்தை கொடுத்தார். மகாபுகழுடைய ஒருவர் பிரசன்னமானவராய் அவர்களுக்கு மரவுரிகளிரண்டை கொடுத்தார். மற்றொருவர் கிருஷ்ணாஜினத்தையும் (அதாவது கருநிற மான்தோலையும்), அவ்விதமாகவே வேறொருவர் யஜ்ஞோபவீதத்தை (அதாவது பூணூலை) கொடுத்தார். ஒருவர் கமண்டலத்தையும் வேறொருவரான மகாமுனி மெளஞ்ஜியையும் (அதாவது மெளஞ்ஜி புற்கள்; இதன் விஞ்ஞான பெயர் Saccharum munja ஆகும்) கொடுத்தார். அப்பொழுதே ஒருவர் ஆசனபீடத்தையும், மற்றொரு முனிவர் கோடாரியையும் கொடுத்தார். மற்றொருவர் காஷாய வஸ்திரத்தையும், மற்றொரு முனிவர் மரவுரியையும், மற்றொருவர் சந்தோஷத்தோடு கூடினவராய் ஜடைமுடியும் நூலையும், அதோடுகூட விறகு கட்டும் கயிறையும், ஒரு ரிஷி யாகபாண்டத்தையும், மற்றொருவர் விறகுகட்டையையும், அத்துடன் அத்தி (மரத்தாலான) ஆசனபீடத்தையும் கொடுத்தார். வேறுசிலர் அப்பொழுது ஸ்வஸ்தியை (ஓர் ஆசீர்வாத வார்த்தையை) கூறினார்கள். அங்கு வேறுசில மகரிஷிகள் சந்தோஷத்தினால் ஆயுஷ்யத்தை (அதாவது நீண்ட ஆயுள் எனும் ஆசீர்வாதத்தை) உச்சரித்தார்கள். சாம(வேத) சொல்பவர்களான முனிவர்கள் எல்லோருமே வரங்களை அளித்தார்கள்.

முனிவரால் நன்கியற்றப்பட்ட கவிகளுக்கு சிறந்த ஆதாரமாக முறைப்படி முடிக்கப்பட்ட, அன்றியும் ஆச்சர்யகரமான ஆயுளைக்கொடுக்கவல்ல புஷ்டியை உண்டுபண்ணுகிற, அனைவரின் செவிக்கும் மனோகரமான, நன்றாகப் பாடப்பட்ட கீதமான இந்த சரித்திரத்தை, அனைத்து கீதங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களான, பாடகர்களான அங்கு வீதிகளிலும், ராஜமார்கங்களிலும் எங்கும் போற்றப்பட்ட அவர்களை ஓர் சமயம் பரதருக்கு முன்பிறந்தவர் (அதாவது ஸ்ரீராமர்) கண்டார். எதிரிகளை அழிப்பவரான அந்த (ஸ்ரீ)ராமரும், பூஜிக்கத்தக்க சகோதரர்களான குஷன் மற்றும் லவனை அவ்விடத்திலிருந்து தன் மாளிகைக்கு அழைத்து வந்து பூஜித்தார். தங்கமயமான, திவ்யமான சிம்மாசனத்தில் அமர்ந்தவராய், மந்திரிகளாலும், சகோதரர்களாலும் சூழப்பட்டவராய் எதிரிகளை தவிக்கச்செய்கிறவரும், சுயகட்டுப்பாடு கொண்டிருப்பவரும், பிரபுவுமான அந்த (ஸ்ரீ )ராமரும், நல்ல ரூபத்தோடுகூடி இருக்கிற அந்த இருவர்களையும் பார்த்து, அப்பொழுது லக்ஷ்மணரையும், சத்ருக்னரையும், பரதரையும் பார்த்து பின் கூறியவாறு சொன்னார்.

தேவஒளி பொருந்திய இவ்விருவர்களிடம் இந்த விசித்திரமான அர்த்தமும், சொல்லும் அமைந்த கதை நன்றாக கேட்கப்படட்டும்’, என்று சொல்லிவிட்டு ஒருவருக்கொருவர் இணையான அவ்விரு பாடகர்களையும் பார்த்து பேசினார். அந்த பாடகர்களை உற்சாகப்படுத்தினார். இதனால் அவ்விருவர்களும் மதுரமாய் ராகத்தோடு கூடியதாய், பூஜ்யமாயும் தீர்க்கமான ஆலாபத்தை உடையதாக இருக்கும்படி (வீணை)தந்தியில் தாளவொத்தோடுகூடினதாய், மிக தெளிவான அர்த்தமுடையதாய் பாடினார்கள். அந்த கானமானது ஜனசபையில் செவிக்கு சுகமாய் விளங்கினது; எல்லாருடைய தேகங்களையும், இதயங்களையும், மனங்களையும் சந்தோஷப்படுத்தியது. இந்த குஷன் மற்றும் லவன் மகாதவமுடைய முனிவர்களாய் இருந்தும், ராஜலட்சணங்கள் பொருந்தினவர்கள். மேலும் என்னுடைய ச்ரேயஸ்கரமான, உன்னதமான சரித்திரமானது சொல்லப்படுகிறது. அதை கேளுங்கள்.அப்பால் இப்பொழுது (ஸ்ரீ)ராமருடைய வார்த்தையால் உற்சாகம் கொண்டவர்களாய் அவ்விருவர்கள் மார்க்கமென்கிற கான விதியின் அதிசயத்தோடு பாடினார்கள். அதனால் அந்த (ஸ்ரீ)ராமரும் மெள்ள சபையை அடைந்தவராய் அனுபவிக்க வேண்டுமென்கிற இச்சையால் ஈர்ப்புடைய மனமுடையவராய் ஆனார்.

(ராமாயணப்படி ஸ்ரீராமர் பேசும் முதல் வாக்கியம்)

श्रूयतामिदमाख्यानमनयोर्देववर्चसो: |

ஸ்ரூயதாமிதமாக்யானமனயோர்தேவவர்ச்சசோ: |


(ராமாயணப்படி ஸ்ரீராமர் பேசும் இரண்டாம் வாக்கியம்)

इमौ मुनी पार्थिवलक्षणान्वितौ कुशीलवौ चैव महातपस्विनौ |
ममापि तद्भूतिकरं प्रचक्ष्यते महानुभावं चरितं निबोधत ||

இமெள முனீ பார்திவலக்ஷணான்விதெள குஷீலவெள சைவ மஹாதபஸ்விநெள |
மமாபி தத்பூதிகரம் ப்ரசக்ஷ்யதே மஹாநுபாவம் சரிதம் நிபோதத ||



|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் நான்காம் ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment