“இவ்வாறு தேவர்களில் சிறந்தோரால் வேண்டப்பட்ட நாராயண விஷ்ணு (அனைத்தும்) அறிந்தவராய் இருந்தபோதிலும், மேற்கொண்டு
சுரர்களிடம் (அதாவது தேவர்களிடம்)
லட்சணமான வார்த்தையை சொன்னார்,
‘சுரர்களே (அதாவது தேவர்களே),
அந்த ராட்சசாதியினுடைய
வதத்தில் உபாயம் யாது? எதை பின்பற்றி,
ரிஷிகளுக்கு முள்ளான அவனை
நான் கொல்வேன்?’
“இவ்வண்ணம் சொல்லப்பட்ட சுரர்கள் எல்லோரும் மாறுதலற்ற
விஷ்ணுவிடம் பதிலுரைத்தனர்,
‘மானுட ரூபம் பூண்டு, யுத்தத்தில்
ராவணனை கொல்லும். எதிரிகளை அழிப்பவரே (அதாவது விஷ்ணுவே), அவனோ நெடுங்காலம் தீவிரமான தவத்தை புரிந்தான். அதனால்
உலகங்களைப் படைத்த, உலகங்களுக்கு முன் தோன்றியவரான பிரம்மா களிப்படைந்தவராய்
ஆனார். சந்தோஷமடைந்த (அந்த)
பிரபு அந்த ராட்சசனுக்கு மனிதனைத்தவிர பிற பலவகை உயிரினங்களிடமிருந்து பயமில்லை
(என்பதான) வரத்தை கொடுத்தார். (ஏனெனில்),முன்பு வரதானத்தின் பொழுது
மானுடர்கள் அவனால் இழிவாய் கருதப்பட்டனர். அந்த பிதாமகரிடமிருந்து இப்படிப்பட்ட
வரத்தை பெற்று, கர்வங்கொண்ட அவன் மூன்று உலகங்களையும் வருந்தச்செய்கிறான்.
பெண்களையும் அபகரிக்கின்றான். ஆகையால் எதிரிகளை தகிப்பவரே (அதாவது விஷ்ணுவே),
அவனுக்கு
மனிதர்களிடத்திலிருந்து வதை காணப்படுகிறது.’
“தேவர்களுடைய இந்த வார்த்தையை இவ்விதம் கேட்டு, சாந்தமூர்த்தியான
விஷ்ணு அப்பொழுது அரசரான தசரதரை பிதாவாக நிச்சயித்தார். மேலும், அந்த
காலத்தில் மிகவும் ஒளிபொருந்திய,
புத்திரனில்லாத, புத்திரனைக்கோருகிற
எதிரிகளை அழிப்பவரான அந்த வேந்தர் புத்திரசம்பந்தமான யாகத்தை (அதாவது புத்திரகாமேஷ்டி யாகத்தை) செய்தார். அந்த விஷ்ணு
நிச்சயத்தை செய்து, பிதாமகரிடம் (அதாவது பிரம்மாவிடம்) விடைசொல்லி விட்டும், தேவர்களால் (மற்றும்) மகாத்மாக்களால் பூஜிக்கப்பட்டவராய் மறைந்தார்.
“அதற்குமேல் (யாகத்தின்) யஜமானருடைய அக்னியிலிருந்து வெளிப்பட்ட ஒப்பில்லாத ஒளியையுடைய, மகாவீர்யமுடைய, மகா பலமுடைய, கறுத்த, ரத்த(நிற) வஸ்திரத்தை உடுத்தியிருந்த, ரத்த(நிற) வாயையுடைய, துந்துபி (வாத்தியத்தின்) ஒலி போன்ற குரலுள்ள, மழமழப்பான
சிங்கம் போன்ற மயிர்கள், மீசை,
சிறந்த தலைமயிர்
இவைகளையுடைய, சுபலட்சணங்களோடு கூடின, திவ்ய
ஆபரணங்களினால் அலங்கரிக்கப்பட்ட,
மலைச்சிகரம் போல் உயரமான, கர்வங்கொண்ட
புலியைப்போல் பராக்கிரமமுடைய,
திவாகரனுக்கு (அதாவது சூர்யனுக்கு) சமமான சரீரமுடைய, எரிகிற
அனலின் கொழுந்திற்கு ஒப்பான (அந்த)
மகத்தான உயிரினம் சிங்கத்தின் தோள் போன்ற தோளுடைய, பெருங்கரமுடைய, இரண்டு
தோள்வளைகளால் ஒளிரூட்டப்பட்ட,
தாரையின் அதிபதியை (அதாவது சந்திரனை) போன்ற ஆரத்தால் மார்பில் அணி
செய்யப்பட்ட, தாரையின் அதிபதியை (அதாவது சந்திரனை) போன்ற பற்களால் மிகவும் ஒளிர்ந்த, செழிப்பினால்
ஜொலிப்பவர் போலவும், தேஜஸால் பிரகாசிப்பவர் போலவும்; உருக்கிய
தங்கமயமான, வெள்ளி மூடியையுடைய மாயையே உருக்கொண்டது போல் திவ்ய
பாயசத்தால் நிரம்பின பெரும் பாத்திரத்தை பிரியமான பத்தினியை போன்று தானே தோள்களால்
எடுத்துக்கொண்டு, அரசரான தசரதரை நன்றாய் பார்த்து இந்த வாக்கியத்தை சொன்னார், ‘வேந்தே, இங்கு வந்த
எம்மை பிரஜாபதியை (அதாவது பிரம்மாவை)
சார்ந்த நரனாக அறிந்துகொள்ளும்.’
“அதன்பிறகு அப்பொழுது ராஜா கைகளை கூப்பினவராய்
மறுமொழியுரைத்தார், ‘பகவானே,
நல்வரவு உமக்கு
இருக்கட்டும். நான் உமக்கு என்ன செய்யக்கடவேன்?’ இந்நிலையில்
பிரஜாபதியை (அதாவது பிரம்மாவை)
சார்ந்த நரன் மீண்டும் இந்த வாக்கியத்தை சொன்னார், ‘ராஜா, தேவர்களை
அர்ச்சிக்கிற உம்மால் இப்பொழுது இது அடையப்பட்டது. நரர்களுள் புலியே (அதாவது தசரதரே),
தேவராலே உண்டு பண்ணப்பட்ட, புத்திரபேறுள்ளதான, பாக்கியமுள்ளதான, ஆரோக்கியத்தை
பெருக்குகிறதான இந்த பாயசத்தை இப்பொழுது நீர் வாங்கிக்கொள்ளும். பொருத்தமான
மனைவிகளுக்கு, ‘உண்ணுங்கள்’
என்று கொடும்; அரசரே!
எதற்காக யாகம் செய்கிறீரோ, (அந்த) புத்திரர்களை
அவர்களிடத்தில் நீர் அடையப்போகிறீர்.’
“அரசர் களிப்புற்றவராய், ‘அப்படியே’ என்று தேவ
அன்னத்தால் நிரம்பிய, தேவரால் கொடுக்கப்பட்ட பொன்மயமான அந்த பாத்திரத்தை தலையால்
பெற்றுக்கொண்டு, அற்புதமான,
பிரியமான பார்வையையுடைய
அந்த உயிரினத்தை அபிவாதனம் செய்து (அதாவது வணங்கி) அதிகமான சந்தோஷத்தோடு கூடினவராய் நாற்புறத்திலும்
பிரதட்சிணத்தையும் செய்தார். தசரதர் தேவரால் உண்டு பண்ணப்பட்ட பாயசத்தை அடைந்து, அதனால்
வறுமையுடையவன் புதையலை அடைந்தது போல் மிக சந்துஷ்டராக ஆனார். அற்புதமாய்த் தோன்றிய, அதிக
ஒளியையுடைய அந்த உயிரினமானது அந்த காரியத்தை செய்துவிட்டு, அதற்குமேல்
அங்கேயே மறைந்துபோனது. அவருடைய அந்தப்புரம் அனைவரின் மனதையும் கவருகின்றவரான
இலையுதிர் காலத்து சந்திரனுடைய உதய நாழிகை கிரணங்கள் போன்று, சந்தோஷத்தால்
உண்டான ஒளியால் பிரகாசமாக விளங்கிற்று. அவர் அந்தப்புரம் புகுந்து, அக்கணமே
கெளசல்யாவைப் பார்த்து இதை சொன்னார்,
‘உன்னுடைய புத்திரனை
உண்டுபண்ணத்தக்க இந்த பாயசத்தை நீ பெற்றுக்கொள்.’
“மனிதர்கோன் அப்பொழுது கெளசல்யாவிற்கு பாயசத்தின் பாதியை
கொடுத்தார். மேலும், சுமித்ராவிற்கு நராதிபதிக்கு பாதியிலிருந்து பாதியை
கொடுத்தார். கைகேயிக்கு புத்திர காரணமாய் இன்னும் மிகுந்து நின்றதில் பாதியை
கொடுத்தார். அமிர்தத்திற்கு ஒப்பான பாயசத்தினுடைய இன்னமும் மிகுந்துநின்ற பாதியை
மன்னர் சிறிதுநேரம் சிந்தித்து மீண்டும் சுமித்ராவிற்கு மாத்திரம் கொடுத்தார்.
இவ்வாறு ராஜா அந்த மனைவிகளுக்கு வெவ்வேறாக பாயசத்தை கொடுத்தார். நரேந்திரருடைய
அந்த உத்தம பெண்கள் எல்லோரும் இந்த பாயசத்தை அடைந்து, சந்தோஷத்தால்
உண்டான மனமுடையவர்களாய் சன்மானமாய் எண்ணினார்கள். அதனால் அரசருடைய அந்த உத்தம
பெண்டிர்கள் அந்த உத்தம பாயசத்தை வெவ்வேறாக உடனே உண்டு, ஹுதாஷணன் (அதாவது அக்னி),
ஆதித்யன் (அதாவது சூர்யன்) இவர்களுக்கு சமமான தேஜஸ் உடையவர்களாய்
அப்பொழுது சிலகாலத்திற்குள் கர்பங்களை அடைந்தார்கள். அப்பொழுது ராஜாவும் அந்த
ஸ்திரிகளை கருவுற்றவர்களாய் பார்த்து,
கவலை ஒழிந்தவராய், த்ரிதிவத்தில்
(அதாவது ஸ்வர்கத்தில்) சுரேந்திரர்கள் (அதாவது தேவேந்திரர்கள்), சித்தர்கள்,
ரிஷிகணங்களால்
பூஜிக்கப்பட்ட ஹரியைப்போல் களிப்புற்றவராய் ஆனார்.”
|| இவ்வாறாய்
வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் பதினாறாவது
ஸர்க்கம் முற்றிற்று ||
No comments:
Post a Comment