Tuesday, December 24, 2019

பதினைந்தாவது ஸர்க்கம் – புத்திரகாமேஷ்டியும், ராவண வத பிரதிக்ஞையும்



மேலும் மேதாவியான, வேதங்களை அறிந்த அவர் (அதாவது ரிஷ்யஸ்ருங்கர்) இப்பொழுது சற்று தியானித்து, அதற்குமேல் நினைவை அடைந்தவராய், உடனே அந்த அரசரைப்பார்த்து இந்த பதிலை சொன்னார். அதர்வவேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற மந்திரங்களால் விதிப்படி சித்தமாயிருக்கிற புத்திரசம்பந்தமான யாகத்தை (அதாவது புத்திரகாமேஷ்டி யாகத்தை) உமக்கு புத்திரநிமித்தமாக நான் செய்யப்போகிறேன்.அதற்குமேல் தேஜஸ்வீ (அதாவது ரிஷ்யஸ்ருங்கர்) புத்திரகாரணமாக புத்திரசம்பந்தமான அந்த யாகத்தை ஆரம்பித்தார். மந்திரத்தில் கண்டிருக்கிற கர்மங்களால் அக்னியில் சரியாய் ஹோமம் செய்தார்.

மேலும், கந்தர்வர்களோடு கூடின தேவர்கள், சித்தர்கள், மகரிஷிகள் அப்பொழுது விதிப்படி ஹவிர்பாகங்களைப் (ஹவிர்பாகம் என்றால் யாகத்திலிடும் பொருளாகும்) பெற்றுக்கொள்ளும் பொருட்டு ஒன்றுகூடினார்கள். அந்த தேவதாக்கள் அந்த சபையில் நியாயப்படி வந்துசேர்ந்து, லோககர்த்தாவான பிரம்மாவை பார்த்து மகத்தான வார்த்தையை சொன்னார்கள். பகவானே, ராவணன் என்ற ராட்சசன் உம்முடைய அனுக்கிரகத்தாலே எங்கள் எல்லோரையும் வீர்யத்தாலே வருந்துகிறான். அவனை அடக்க இயலாதவர்களாய் இருக்கிறோம். பகவானே, ஓர் சமயத்தில் சந்தோஷமடைந்த உம்மால் அவனுக்கு வரம் கொடுக்கப்பட்டது. அதை மதிக்கின்றவர்களாய் அவனுடைய அனைத்தையும் நித்தமும் பொறுத்துவருகிறோம். (அவன்) துர்மதியுடையோன், மூவுலகத்தையும் பயமுறுத்துகிறான். பெரியோர்களை வெறுக்கிறான். தேவராஜரான ஷக்ரனை (அதாவது தேவேந்திரனை) அழிக்க விரும்புகிறான். வரம் பெற்றதனாலே வெல்வோர் எவருமின்றி, மோகித்தவனாய் ரிஷிகளையும், கந்தர்வர்களோடு கூடின யட்சர்களையும், அசுரர்களையும் அப்படியே பிராமணர்களை சித்திரவதை செய்கிறான். இவனை சூர்யன் தகிப்பது இல்லை. மாருதர் (அதாவது வாயு) சமீபத்தில் வீசுவதில்லை. கொந்தளிக்கும் கிளர்ச்சியான அலைகளைக் கொண்ட சமுத்திரமும் அவனைக்கண்டு நகர்வதுமில்லை. ஆகையால், கோரமான பார்வையுடைய அந்த ராட்சசனிடத்திலிருந்து எங்களுக்கு பெரும் பயம். பகவானே, அவனுடைய வதத்தின் பொருட்டு உபாயத்தை செய்ய உரியவராகிறீர்.

அனைத்து சுரர்களாலும் (அதாவது தேவர்களாலும்) இவ்வாறு சொல்லப்பட்ட அவர் சிந்தித்து அதற்குமேல் சொன்னார், ‘சந்தோஷம்! துராத்மாவான அவனுடைய வதத்திற்கு உபாயமாக இது பின்பற்றத்தக்கது. அவனால், கந்தர்வர்களுக்கும், யட்சர்களுக்கும், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும், ராட்சசர்களுக்கும் கொல்லத் தகாதவனாக இருக்கவேண்டும்(என்ற) வார்த்தை சொல்லப்பட்டது. என்னால் அது அப்படியே ஆகட்டும்என்று சொல்லப்பட்டது. அந்த ராட்சசன் அவமானத்தால் மனிதர்களை குறித்து சொல்லவில்லை. ஆகையாலே, அவன் மானுடரால் கொல்லத்தகுந்தவன். இவனுக்கு வேறு மரணம் இல்லை.

பிரம்மாவினாலே கூறப்பட்ட பிரியமான இந்த வாக்கியத்தை கேட்டு, அந்த மகரிஷிகள், தேவர்கள் எல்லோரும் அப்பொழுது மிக சந்தோஷமடைந்தவர்களாய் ஆனார்கள். இந்த தருணத்தில் ஜகத்பதியான விஷ்ணு மகா ஒளியுடையவராய், சங்கு, சக்கிரம், கதை இவைகளை கையில் ஏந்தியவராய்பீதாம்பரம் தரித்தவராய் வந்து சேர்ந்தார். பாஸ்கரன் (அதாவது சூர்யன்) மழைமேகத்தின் மேல் எவ்வாறோ அவ்வாறே வைனதேயன் (அதாவது கருடன்) மீது ஏறி, தகிக்கும் தங்கத் தோள்வளைகளையுடையவராய் உத்தம சுரர்களால் (அதாவது தேவர்களால்) பூஜிக்கப்பட்டவராய் அங்கு பிரம்மனோடு சேர்ந்து, காரியத்தை முடிக்கிற கருத்துடையவராய் இருந்தார். சுரர்கள் அனைவரும் அவரைப்பார்த்து நன்றாய் துதித்து பணிந்து வணங்கினவர்களாய் சொன்னார்கள், ‘விஷ்ணுவே, உலகங்களுடைய நன்மையை பொருட்டு உம்மை பிரார்த்திக்கிறோம். விஷ்ணுவே, பிரபுவே, அயோத்திக்கு அதிபதியான, தர்மமறிந்த, கொடையாளியான, மகரிஷிகளுக்கு ஒப்பான தேஜஸ்கொண்டவரான, ராஜாவான அந்த தசரதருடைய நாணம், செல்வம் மற்றும் புகழ் என்பவைகளே உருக்கொண்ட மூன்று மனைவிகளிடத்தில் தாமே தம்மை நான்கு பாகமாக செய்துகொண்டு, புத்திரத்தன்மையை அடையும். விஷ்ணுவே, அங்கு தாம் மானுடரூபமாக ஆகி, செழித்த உலகத்தின் முள்ளான, தேவர்களால் வதைக்கமுடியாத ராவணனை சமரில் கொல்லும். அந்த மூர்கனான, ராட்சசனான ராவணன் வீர்யத்தால் உண்டான இறுமாப்பாலே கந்தர்வர்களோடு கூடின தேவர்களை, சித்தர்களை, முக்கிய ரிஷிகளையும் வருந்துகிறான். மேலும், (தேவர்களின் தோட்டமான) நந்தவனத்தில் விளையாடிக்கொண்டிருக்கிற அனைத்து ரிஷிகளும் அப்படியே கந்தர்வர்களும், அப்சரஸ்களும் அந்த ரெளத்திரனாலே இம்சிக்கப்பட்டனர் அன்றோ! ஆதலால், அவனுடைய வதத்தின் பொருட்டு முனிகளோடு கூட நாங்கள், சித்தர்கள், கந்தர்வர்கள் மற்றும் யட்சர்களுடன் வந்தவர்களாய் உம்மை சரணடைந்தோம். எதிரிகளை தகிப்பவரே (அதாவது விஷ்ணுவே), தேவரே, தாமே எங்கள் அனைவருக்கும் பரமகதி. தேவர்களின் எதிரிகளுடைய வதத்தின் பொருட்டு மானுட உலகத்தில் திருவுள்ளத்தை செய்யும்.

இவ்வாறு சொல்லப்பட்ட அனைத்துலகும் வணங்குபவரான, தேவபுங்கவரான, தேவர்களுக்கு ஈசனான விஷ்ணு, பிதாமகரை (அதாவது பிரம்மாவை) முன்னிட்டவர்களான, ஒன்றுசேர்ந்த தர்மத்தோடுகூடின அந்த அனைத்து தேவர்களையும் பார்த்து சொன்னார், ‘பயத்தை விடுங்கள்; உங்களுக்கு மங்கலம். யுத்தத்தில் குரூரமானவனான, துராத்மாவான, தேவர்கள் (மற்றும்) ரிஷிகளுக்கு பயத்தை உண்டுசெய்கிறவனான ராவணனை, பிள்ளை பேரன்களோடு கூடினவனாய், மந்திரிகளோடு கூடினவனாய், நண்பர்கள், சொந்தங்கள் மற்றும் பந்துக்களுடன் கூடினவர்களாய் நன்மைக்காக கொன்று, மானுட உலகில் இந்த பூமியை பரிபாலித்துக்கொண்டு பதினோறாயிர வருடங்கள் வாசம் செய்யப்போகிறேன்.

தைரியமுடைய தேவரான விஷ்ணு தேவர்களுக்கு இவ்வாறு வரத்தை கொடுத்து, ஆகவே மானுடரிடையில் தன்னுடைய ஜன்மபூமியை (குறித்து) சிந்தித்தார். அப்பால் தாமரை இதழ்போன்ற விழிகளையுடையவர் (அதாவது விஷ்ணு) தன்னை நான்கு பாகமாக செய்துகொண்டு அப்பொழுது வேந்தரான தசரதரை பிதாவாக இச்சித்தார். அப்பொழுது ருத்திரர்களோடு கூடின, அப்சரஸ் கணங்களோடு கூடின, தேவர்கள், ரிஷிகள் (மற்றும்) கந்தர்வர்கள் திவ்யரூபமான துதிகளால் மதுஸூதனனை (அதாவது விஷ்ணுவை) கொண்டாடினார்கள். தாம் கர்வங்கொண்ட, உக்கிர தேஜஸ் பொருந்திய, அகங்காரமுடைய, தேவர்களுக்கு ஈசனை (அதாவது தேவேந்திரனை) வெறுப்பவனான, (அனைவரையும்) கண்ணீர்விட்டழ வைப்பவனான, தபஸ்விகளுக்கு முள்போன்றவனான, தபஸ்விகளுக்கு பயத்தை உண்டு செய்கிற அந்த ராவணனை நன்றாய் அகற்றிடும். சுரேந்திரரே (அதாவது விஷ்ணுவே), (அனைவரையும்) கண்ணீர்விட்டழ  வைக்கிற, உக்கிரமான ஆண்மையுடைய அந்த ராவணனை (படை)பலத்தோடு கூடினவனாய், பந்துக்களோடு கூடினவனாய் கொன்று, பிரச்சனையிலிருந்து விடுபட்டவராய், பழைய ரகசியமான தோஷம் மற்றும் களங்கம் அற்ற ஸ்வர்கலோகத்தை அடையும்.’”

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் பதினைந்தாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment