Wednesday, December 18, 2019

பதிமூன்றாவது ஸர்க்கம் – யாகசாலையில் பிரவேசிப்பது


மறுபடியும் வசந்தகாலம் வந்தபொழுது (ஓர்) வருடம் நிறைந்ததாக ஆயிற்று. அப்பொழுது வீர்யவான் (அதாவது தசரதர்) சந்ததியின் பொருட்டு ஹயமேதத்தால் (அதாவது அஷ்வமேதத்தால்) யாகம் செய்ய உத்தம த்விஜரான (த்விஜர் என்றால் இருபிறப்பாளன் என்று பொருள், முதல் பிறப்பு இயற்கையான முறையில் நிகழ்வது. இரண்டாம் பிறப்பு பரமாத்மாவை உணர்கையில் கிடைப்பது) வசிஷ்டரைப்பார்த்து வணங்கியும், நியாயப்படி பூஜித்தும், மரியாதையோடு கூடின வாக்கியத்தை கூறினார், ‘முனிபுங்கவரே, இப்பொழுது சந்ததியின் பொருட்டு எனது யாகம் முன்பு சொன்னபடி செய்யப்படட்டும். எவ்வாறு யாக அங்கங்களில் தடை பண்ணப்படாதோ (அப்படியே) செய்யப்படட்டும். தாம் எனக்கு நெருங்கிய நண்பர். அன்றியும் பரம மகானான குரு; யத்தனித்த யாகத்தினுடைய பாரமும் உம்மாலேயே வகிக்கத்தக்கது.

அந்த முக்கிய த்விஜரும், ‘அப்படியே ஆகட்டும், எது உம்மால் தீர்மானிக்கப்பட்டதோ (அந்த) இதை எல்லாம் மெய்யாக செய்கிறேன்என்று ராஜாவைப்பார்த்து சொன்னார். அதன்பேரில் யாககாரியங்களில் தேர்ச்சியடைந்தவர்களான, முதிர்ந்தவர்களான த்விஜர்களையும், சிற்பவேலையில் தேர்ச்சியடைந்தவர்களான பரம தார்மிகர்களான முதிர்ந்தவர்களையும், கணிகர்களையும், நடர்கள், நர்த்தகர்கள் இவர்களையும், சித்திரக்காரர்களையும், சிற்பிகளை, தச்சர்களை, சுரங்கத் தொழிலாளர்களையும், பிற வேலையாட்களையும் பார்த்து அநேக ஆயிரக்கணக்கான செங்கற்கள் சீக்கிரம் கொண்டுவரப்படட்டும்என்று சொன்னார். அப்பொழுது சாஸ்திரங்களை அறிந்தவர்களான, வெகு ஸ்ருதிகளை (அதாவது வேதங்களை) உணர்ந்த புருஷர்களைப்பார்த்து நீங்கள் ராஜாவினுடைய சாசனத்தால் யாககாரியத்தை நடத்த முயலுங்கள்(என்று) சொன்னார்.

ராஜாக்களுக்கு அநேக குணங்கள் கொண்ட ராஜவிடுதிகள் சரியாய் செய்யப்படட்டும். சுபமான பிராமண வசிப்பிடங்கள் நூற்றுக்கணக்கில் செய்யப்பட வேண்டும். அதுபோலவே, பட்டணத்து ஜனத்திற்கும் வெகு விரிவாய், அநேகமானதாய் பட்சணம், அன்னம், பானம் இவைகளோடு கூடின நன்மைக்கமைக்கப்பட்டவைகளாக செய்யத்தக்கவைகள். வசிப்பிடங்கள் வெகு பட்சணங்களை உடையதாக, அனைத்து விருப்பங்களும் கூடினவைகளாக இருத்தல் வேண்டும். கிராமத்திலுள்ள ஜனத்திற்கும் வெகு மங்கலகரமான அன்னம் விதிப்படி மரியாதைபண்ணி கொடுக்கத்தக்கது. அனாதரவோடு செய்யத்தகுந்ததில்லை. அனைத்து வர்ணத்தினரும் நன்கு மரியாதை செய்யப்பட்டவர்களாக முறைப்படி பூஜையை பெறவேண்டும். காம குரோத வசத்தால் எப்படியாகிலும் அவமானம் செய்யப்பட்டதாக இருக்கக்கூடாது. யாககாரியங்களில் கவனக்குறைவாக வேலைசெய்கிற சித்திரக்காரர்கள் மற்றும் பிற புருஷர்கள் எவர்களோ அவர்களுக்கும் முறைப்படி விசேஷமாக பூஜை செய்யத்தகுந்தது. அவர்கள் எல்லோரும் செல்வத்தாலும், போஜனத்தாலும் மரியாதை செய்யப்பட்டவர்களாக ஆக வேண்டும். எல்லாம் எப்படி நன்றாகச் செய்யப்பட்டதாக (வேண்டும்), கொஞ்சமும் குறைபாடு ஆகாது. அப்படி நீங்கள் பிரீதி நிறைந்த மனதுடன் செய்யுங்கள்.

அப்பொழுது எல்லோரும் வந்து வசிஷ்டரைப்பார்த்து இதை சொன்னார்கள், ‘சொல்லப்பட்ட அது கெளரவிக்க வேண்டிய ஆணை. ஆகையால் கொஞ்சமும் குறைசெய்யக்கூடியது இல்லை, கொஞ்சமும் குறைசெய்யக்கூடியது இல்லை. சொல்லிய விதமே அதை செய்கிறோம்.

அப்பொழுது வசிஷ்டர் சுமந்த்ரரை அழைத்து (இந்த) வாக்கியத்தை சொன்னார், ‘உலகில் தார்மிகர்கள் எவர்களோ அந்த வேந்தர்களை அழைப்பியும். பிராமணர்களையும், க்ஷத்ரியர்களையும், வைசியர்களையும், சூத்திரர்களையும், எல்லா தேசங்களிலிருக்கிற ஆயிரக்கணக்கான மனிதர்களையும் மரியாதைசெய்து அழையும். மிதிலை தேசத்து அதிபதியான, வீரரான, சத்தியமான பராக்கிரமமுடைய, அனைத்து சாஸ்திரங்களில் தேர்ச்சியடைந்த அப்படியே வேதங்களில் தேர்ச்சியடைந்த, மகா பாக்கியசாலியான அந்த ஜனகரை நீரே நன்றாக மரியாதை செய்யப்பட்டவராக அழைத்துவாரும்; முதற் உறவினராக அறிந்து அதனால் முதலில் உமக்கு சொல்லுகிறேன். அப்படியே, நண்பராகிய, எப்பொழுதும் பிரியமாக பேசுபவரான, நல்லொழுக்கமுடைய, தேவர்களுக்கு ஒப்பான காசி தேசத்து அதிபதியை நீரே அழைத்து வாரும். அப்படியே, நீர் முதிர்ந்தவரான, பரம தார்மிகரான ராஜசிம்மத்திற்கு (அதாவது தசரதருக்கு) மாமனாரான கேகயராஜரை புத்திரனோடு கூட இங்கு அழைத்து வாரும். ராஜசிம்மத்திற்கு (அதாவது தசரதருக்கு) தோழரான, மகா பாக்கியமுடைய, புகழுடைய, அங்க நாட்டின் ஈசனான அந்த ரோமபாதரை நன்கு மரியாதை செய்யப்பட்டவராக அழைத்துவாரும். கிழக்கு திசையிலுள்ள சிந்து, செளவீர தேசங்களிலுள்ள, செளராஷ்ட்ர தேசத்திலுள்ள அரசர்களையும், தென் திசையிலுள்ள நரேந்திரர்கள் (அதாவது அரசர்கள்) அனைவரையும் அழைத்துவாரும். பூவுலகில் இதரர்களான நண்பர்களாகிய ராஜாக்கள் எவர்கள் இருக்கிறார்களோ, அவர்களையும் உதவியாளர்களோடு கூடினவர்களாய், சொந்தங்களுடன் கூடினவர்களாய் சீக்கிரமாகவே அழைத்துவாரும்.

சுமந்த்ரர் அந்த வசிஷ்டருடைய வாக்கியத்தை கேட்டு, துரிதமாக அப்பொழுது ராஜாக்களை அழைத்துவருவதில் சுபமான புருஷர்களை அங்கு ஏவினார். தர்மாத்மாவான சுமந்த்ரர் முனிவரின் சாசனத்தால் மாவேந்தர்களை தாமே சென்று, அழைப்பதற்கு துரிதமாக பிரயாணமானார். அந்த வேலையாட்கள் அனைவரும் யாகத்தில் எது செய்யப்பட்டதோ (அது) அனைத்தையும் அறிஞரான வசிஷ்டருக்கு தெரிவித்தார்கள். பிறகு (அந்த) த்விஜர்களில் சிறந்தவர் (அதாவது வசிஷ்டர்) மகிழ்வடைந்தவராய் அந்த எல்லோரையும் பார்த்து இதை சொன்னார், ‘அவமரியாதையோடும், அலட்சியத்தோடும் ஒருவருக்கும் கொடுக்கத்தக்கது இல்லை. அவமானத்தோடு செய்யப்பட்டது கொடுப்பவனை கொல்லும். இதில் ஐயமில்லை.

அதன்பிறகு சில இரவும், பகலும் மாவேந்தர்கள் ராஜாவான தசரதருக்கு அநேக ரத்தினங்களை எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது வசிஷ்டர் மிக மகிழ்வுற்றவராய் ராஜாவைப்பார்த்து இதை சொன்னார், ‘நரர்களுள் புலியே (அதாவது தசரதரே), உம்முடைய சாசனத்தால் ராஜாக்கள் வந்து சேர்ந்தார்கள். என்னால் முக்கிய ராஜாக்கள் எல்லோரும் தகுதிப்படி மரியாதை செய்யப்பட்டார்கள். ராஜா, விதிகளை நன்றாயறிந்த புருஷர்களால் யாகத்திற்குரியதும் செய்யப்பட்டது. தாமும் அருகில் சேர்க்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளாலே, எல்லாப்பக்கத்திலும் கிட்டக்கூடிய யாகசாலையைக் குறித்து யாகம் செய்ய வெளிப்புறப்படும். ராஜேந்திரா (அதாவது தசரதா), (தமது) மனதால் செய்யப்பட்டது போல் (இருக்கும் அதனை) பார்க்க யோக்கியராகிறீர்.

அப்படியான வசிஷ்டருடைய வார்த்தையாலும், ரிஷ்யஸ்ருங்கருடையதுமான இருவரின் வார்த்தையின் பேரால் சுபமான தினம், நட்சத்திரம் இவைகளில் ஜகத்திற்கு அதிபதியானவர் வெளிபுறப்பட்டார். அங்கே யாகசாலையை அடைந்தவர்கள் எல்லோரும் வசிஷ்டரை முக்கியமாகவுடைய த்விஜோத்தமர்கள். எல்லோரும் அப்பொழுதே சாஸ்திரப்படி, விதிப்படி ரிஷ்யஸ்ருங்கரை முன்னிட்டு யாககாரியத்தை ஆரம்பித்தார்கள்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் பதிமூன்றாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment