Sunday, December 15, 2019

பத்தாம் ஸர்க்கம் – ரிஷ்யஸ்ருங்கரை அழைத்துவந்ததைச் சொல்வது



சுமந்த்ரர் அவ்வாறு ராஜாவால் ஏவப்பட்டவராய் இந்த வார்த்தையை சொன்னார், ‘மந்திரிகளால் அந்த ரிஷ்யஸ்ருங்கர் அப்படி இருந்தும் எவ்விதமாய் கொண்டுவரப்பட்டாரோ (அதை) என்னிடத்திலிருந்து கேளும். புரோகிதர், மந்திரிகளோடு கூடின ரோமபாதரைப் பார்த்து இதை சொன்னார், 'இந்த அபாயமற்ற உபாயம் எங்களால் சிந்திக்கப்பட்டது. தவத்திலும், வேத அத்யயனத்திலும் நோக்கமுடையவரும், வனவாசியுமான அந்த ரிஷ்யஸ்ருங்கர் பெண்களையும், சிற்றின்ப சுகத்தையும் அறியாதவர்; மானுட சித்தத்தை இழுக்கவல்லவையும், இஷ்டமான இந்திரியங்களை மகிழ்விக்கும் பொருட்களாலே விரைவாக பட்டணத்திற்கு அழைத்துவருகின்றோம்; நிச்சயிக்கப்படட்டும்; ரூபவதிகளும் நன்றாய் அலங்கரிக்கப்பட்டவர்களுமான விலைமாதர்கள் அங்கு போகட்டும்,விதவிதமான உபாயங்களால் மயக்கி, வெகுமானிக்கப்பட்டவர்களாய் இங்கு அழைத்துவருவார்கள்.

(அதனைக்)கேட்ட ராஜா புரோகிதரைப் பார்த்து, ‘அப்படியேஎன்று பதில் சொன்னார். அப்பொழுது புரோகிதரும், அந்த மந்திரிகளும் அவ்வாறே செய்தார்கள். முக்கிய விலைமாதர்களும் அதை கேட்டு மகத்தான வனத்தினுள் பிரவேசித்தார்கள். இந்த ஆசிரமத்தினுடைய சமீபத்தில், எப்பொழுதும் ஆசிரமத்தில் வசிக்கிறவரும், தீரருமான ரிஷிபுத்திரருடைய தரிசனத்திற்கு எத்தனித்தார்கள். அவரும் (அதாவது ரிஷ்யஸ்ருங்கரும்) தந்தையிடம் நித்தம் களிப்புற்றவராய், ஆசிரமத்தினின்று வெளிப்புறப்படவில்லை.

தபஸ்வியான அவரால் பிறந்ததுமுதல் பெண்ணையோ, (மற்றோர்) ஆணையோ, வேறு நகரம், நாடு இவைகளிலுண்டான எந்த பொருளையும் முன்பு கண்டதில்லை. அப்பால் ஓர் சமயத்தில் விபண்டகருடைய புதல்வர் (அதாவது ரிஷ்யஸ்ருங்கர்) எதேச்சையாய் அப்பொழுது அந்த பிரதேசத்திற்கு வந்தார், அந்த சிறந்த மங்கைகளையும் பார்த்தார். அழகிய வேடம் பூண்டவர்களும், மதுரமான ஸ்வரங்களோடு பாடுகிறவர்களுமான அந்த இளம் பெண்கள் எல்லோரும் ரிஷிபுத்திரரை அருகே வந்து (இவ்)வார்த்தையை சொன்னார்கள், ‘பிராமணரே, தாம் யார்? தாம் தனிமையாக ஜனமற்ற கோரமான வனத்தில் நடந்துசெல்கிறீர்? ஏன் இங்கு இருக்கிறீர்? நாங்கள் அறிய இச்சை கொள்கிறோம். எங்களுக்கு சொல்லும்.

அழகிய உருவங்களையுடைய அவரால் வனத்தில் காணாத உருவங்களையுடைய அந்த பெண்களைப்பார்த்து அன்பாலே தன்னுடைய தந்தையைப்பற்றி சொல்வதற்கு அவருக்கு எண்ணம் உண்டாயிற்று. என்னுடைய தந்தை விபண்டகர். அவருக்கு நான் சொந்த மகன். ரிஷ்யஸ்ருங்கர் எனும் பெயர் (உடையோன்). என்னுடைய செயல்கள் உலகில் பிரசித்தம். இங்கு சமீபத்தில்தான் எங்கள் ஆசிரமபதம். சுபமான பார்வையுடையவர்களே, இங்கு உங்கள் அனைவருக்கும் விதிப்படி பூஜையை செய்கிறேன்.

ரிஷிபுத்திரருடைய வார்த்தையை கேட்டு எல்லோருக்கும் எண்ணம் உண்டாயிற்று. அவர்கள் எல்லோரும் அவருடைய ஆசிரமபதத்தை காண அவரோடு கூட சென்றார்கள். ரிஷிபுத்திரர் அங்கு வந்தவர்களுக்கு உடனே இது அர்க்யம்; இது பாத்யம்; இது கிழங்கு; இது பழம்(என்று) பூஜையை செய்தார். மிக உற்சாகமுடையவர்களாய் அவர்கள் எல்லோரும் அந்த பூஜையை ஏற்றுக்கொண்டனர், ஆயினும் அப்பொழுதே ரிஷிக்கு பயந்தவர்களாய் விரைவில் திரும்பிச் செல்ல எண்ணினர்.

த்விஜரே (த்விஜர் என்றால் இருபிறப்பாளன் என்று பொருள், முதல் பிறப்பு இயற்கையான முறையில் நிகழ்வது. இரண்டாம் பிறப்பு பரமாத்மாவை உணர்கையில் கிடைப்பது), எங்களுடைய முக்கியங்களான இந்த பழங்களையும் திரும்பி வாங்கிக்கொள்ளும். உமக்கு மங்கலம்; சாப்பிடுங்கள், தாமதம் வேண்டாம்.அப்பொழுது அவர்கள் அனைவரும் சந்தோஷத்தோடு கூடினவர்களாய் அவரை (அதாவது ரிஷ்யஸ்ருங்கரை) ஆலிங்கனம் செய்து விதவிதமான சுபமான கொழுக்கட்டைகளையும், பட்சணங்களையும் அவருக்கு கொடுத்தார்கள். வனத்தில் நித்தமும் வசித்துக்கொண்டிருந்த அவரால், முன்பு ஒருபோதும் ருசிபார்த்திராத அவைகளை புசித்து (அந்த) தேஜஸ்வி (அவற்றை) பழங்கள் என்றே எண்ணினார். அப்பொழுது அந்த பெண்கள் அவருடைய தந்தைக்கு பயந்தவர்களாய் (அந்த) அந்தணரைப்பார்த்து ஓர் விரத அனுசரிப்பு இருப்பதாக சொல்லி உடனே (அந்த) இடத்திலிருந்து விடைபெற்றுக்கொண்டு போனார்கள். அவர்கள் எல்லோரும் போனவளவில் காஷ்யபருடைய குமாரரான (அந்த) த்விஜர் துக்கத்தால் நிம்மதியற்ற இதயமுடையவராய் ஆனார். அப்படியே இங்குமங்கும் போனார்.

அதனால் மறுநாள் வீர்யவானான அவர் எங்கு மனதிற்கு இனியவர்களும், நன்றாய் அலங்கரிக்கப்பட்டவர்களுமான அந்த முக்கிய விலைமாதர்கள் பார்க்கப்பட்டார்களோ அந்த இடத்திற்கு வந்தார். அப்பொழுது வருகிற அந்தணரைப்பார்த்த உடனே அவர்கள் எல்லோரும் மனக்களிப்புற்றவர்களாய் அவரை எதிர்கொண்டு நெருங்கி இந்த வார்த்தைகளை சொன்னார்கள், ‘செளம்யரே (அதாவது ரிஷ்யஸ்ருங்கரே), எங்களுடைய ஆசிரமபதத்திற்கு வாரும்; அங்கு விதவிதமான அநேக கிழங்குகளும், பழங்களும் இருக்கின்றன. மேலும் ஸ்ரீமானான இந்த (உபசரிப்பு) விதி விசேஷமாய் உண்டாகும்என்றும் சொன்னார்கள். அந்த அனைவருடைய இதயப்பூர்வமான வார்த்தையை கேட்டு உடனே போக எண்ணினார். அவரை அப்பொழுதே (அப்)பெண்கள் அழைத்துக்கொண்டு போனார்கள். மகாத்மாவான அந்த அந்தணரும் அங்கே அழைத்துவரப்பட்டவளவில் அப்பொழுது (வருண)தேவர் ஜகத்தை சந்தோஷப்படுத்த உடனே (மாரி) பொழிந்தார்.

மழையோடே நகரத்தை அடைந்த முனிவரான அந்தணருக்கு அந்த நராதிபதி (ரோமபாதர்) எதிர்கொண்டு சென்று வணங்கினவராய் தலை பூமியைத்தோட (நமஸ்காரத்தையும்) செய்தார். மிகவும் கவனமாய் அவருக்கு நியாயப்படி அர்க்யத்தை கொடுத்தார். அந்தணரை கோபம் அடையாமலிருக்கும் படி அந்தண இந்திரரிடமிருந்து அனுக்கிரகத்தை வேண்டிக்கொண்டார். அந்த ராஜா அந்தப்புரத்தினுள் பிரவேசித்து கன்னிகையான சாந்தையை சாந்தமான உள்ளத்துடன் விதிப்படி இவருக்கு தத்தம் (அதாவது விவாகம்) செய்து கொடுத்து மகிழ்ச்சியை அடைந்தார். இவ்வாறு அந்த மகாதேஜஸ்வியான ரிஷ்யஸ்ருங்கர் மனைவியான சாந்தையுடன் கூட அனைத்து கோரிக்கைகளால் நன்கு பூஜிக்கப்பட்டவராய் அங்கு வசித்தார்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் பத்தாம் ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment