Tuesday, December 3, 2019

இரண்டாம் ஸர்க்கம் – பிரம்மாவின் வரவு

(தமஸா நதி)

நாரதருடைய அந்த வாக்கியத்தை கேட்டு, வாக்குவன்மையரான, தர்மாத்மாவான மகாமுனி (அதாவது வால்மீகி) சிஷ்ய சகிதமாய் (நாரதரை) பூஜித்தார். அவரால் முறைப்படி பூஜிக்கப்பட்டவரான அந்த தேவரிஷி நாரதர், அப்பொழுது உத்தரவு கேட்டு விடைபெற்றவராகவும் வான் சென்றார். அவர் தேவலோகத்திற்கு சென்ற முகூர்த்தத்திற்கெல்லாம் அந்த முனிவரும் அப்பொழுது ஜாஹ்னவியினுடைய (அதாவது கங்கையினுடைய) அருகே (இருக்கும்) தமஸா (நதியின்) கரைக்கு சென்றார் (தமஸா நதியானது இன்றைய மத்திய பிரதேச மற்றும் உத்திர பிரதேச மாநிலத்தில் ஓடிடும் இன்றைய தம்ஸா நதியாகும்; இது கங்கையின் கிளைநதியாகும்; அயோத்தியாவிலிருந்து இந்த இடம் செல்வதற்குண்டான தொலைவு குறைந்தது 190 கி.மீ. ஆகும்). அந்த முனிவரும் தமஸாவின் கரையை அடைந்து, அப்பொழுது, களங்கமற்ற தீர்த்தத்தை கண்டு, அருகே நின்றிருந்த சிஷ்யரிடம் கூறினார், ‘பரத்வாஜா, நன் மனிதர்களுடைய மனம் போன்று, களங்கமற்ற, அமைதியான நீருடையதான, ராமணீயமான இந்த தீர்த்தத்தை காண்பாயாக. குழந்தாய், கலசம் கீழே வைக்கப்படட்டும். எமது மரவுரி கொடுக்கப்படட்டும். உத்தமமான இந்த தமஸா தீர்த்தத்தில் ஸ்நானம் செய்யப்போகிறேன்.

மகாத்மாவான வால்மீகியால் இவ்விதம் சொல்லப்பட்ட குருவிற்கு கீழ்படிந்த பரத்வாஜர், அந்த முனிவருக்கு மரவுரியை கொடுத்தார். இந்திரியங்களை கட்டுப்படுத்திய அவர் சிஷ்யர் கரத்திலிருந்து மரவுரியை வாங்கிக்கொண்டு, பரந்த அந்த வனத்தை அனைத்து புறங்களிலும் பார்த்துக்கொண்டு நகர்ந்தார். பகவான் (அதாவது வால்மீகி) அங்கு அதன் அருகில் சஞ்சரிக்கிற இணைபிரியா, அழகிய குரலுடைய இரண்டு கிரெளஞ்ச பறவையின் (கிரெளஞ்ச பறவை என்பதன் விஞ்ஞான பெயர் Burhinus indicus இருக்கக்கூடும்) ஜோடியைப் பார்த்தார். பாவத்தில் உறுதிகொண்ட, விரோதத்தின் இருப்பிடமான வேடன் அந்த ஜோடியிருந்து புலப்பட்ட ஆணான ஒன்றினை கொன்றான். மனைவியானது (அதாவது பெண் கிரெளஞ்ச பறவை) அடிபட்டு பூமியில் புரளுகிற, ரத்தத்தால் பூசப்பட்ட அங்கமுடைய அதனைக்கண்டு உடனே கருணையை உண்டுசெய்யும் குரலால் அழுதது. தாமிர (நிறம்கொண்ட) தலையையுடைய, இறக்கையுடைய, மகிழ்வாய் கூட சஞ்சரிக்கிற அந்த பதியானது பறவையைவிட்டு பிரிக்கப்பட்டது.

அவ்வாறு வேடனால் அடிக்கப்பட்ட அந்த பட்சியைக்கண்டு தர்மாத்மாவான அந்த ரிஷிக்கு காருண்யம் உண்டாயிற்று. அப்போது த்விஜர் அழுதுகொண்டிருந்த பெண் கிரௌஞ்ச பட்சியை கண்டு, கருணை நிலையில் இது அதர்மம்என்று இவ்வாறான வாக்கியத்தை கூறினார்.
வேடா, காமத்தால் மோகித்திருந்த கிரௌஞ்ச ஜோடியில் ஒன்றை கொன்றாய். அதனால் நீ நீடித்த காலம் இருப்பை அடையமாட்டாய்.

मा निषाद प्रतिष्ठां त्वमगम: शाश्वतीः समाः | यत्क्रौञ्चमिथुनादेकमवधीः काममोहितम् ||
மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம: ஷாஷ்வதீ: சமா: |
யத்க்ரெளஞ்சமிதுனாதேகமவதீ: காமமோஹிதம் ||


பார்த்தவராய் இவ்வாறு சொன்னவரான அவருடைய இதயத்தில் இந்த பறவைநிமித்தமாக சோகத்தால் பீடிக்கப்பட்ட என்னால் சொல்லப்பட்ட இதென்ன?’ என்ற சிந்தை உண்டானது. மகா அறிவாளியான, மதியுடையவரான அவர் சிந்தித்து முடிவிற்கு வந்தார். முனிவர்களில் சிறந்த அவரும் சிஷ்யரிடம் இந்த வாக்கியத்தை சொன்னார். சோகத்தால் என்னிடமிருந்து உண்டானதும் (செய்யுள்) பதங்களை கொண்டதும், சமமான அட்சரங்களாய் அமையப்பெற்றதும், (வீணைத்)தந்தியில் லயத்தோடு கூடியது ஸ்லோகம் (எனும் பெயர் உடையதாக) இருக்கட்டும், வேறுவிதமாய் இல்லை. சிஷ்யரும் அந்த முனிவர் கூறிய அதி உத்தமமான வாக்கியத்தை மிகவும் மகிழ்வுடன் பெற்றுக்கொண்டார். குருவும் அவரிடத்தில் சந்தோஷமாய் ஆனார். அதன்பின், அந்த முனிவர் அந்த தீர்த்தத்தில் விதிப்படி அபிஷேகத்தை (அதாவது குளியலை) செய்து, அந்த (ஸ்லோக) விஷயத்தை சிந்தித்துக்கொண்டே திரும்பினார். நன்னடத்தையுள்ள, ஸ்ருதிகளை (அதாவது வேதங்களை) அறிந்த, முனியான சிஷ்யர் பரத்வாஜர், பூர்ணமான கலசத்தை எடுத்துக்கொண்டு அப்பொழுது பின்தொடர்ந்தார். தர்மமறிந்த அவர் (அதாவது வால்மீகி) சிஷ்ய சகிதராய் ஆஸ்ரமபதத்தில் புகுந்து, அமர்ந்தவராய், தியானம் அடைந்தவராய், பிற (புராண) கதைகளை (பாராயணம்) செய்தார்.

அப்போது உலகங்களை படைத்தவரான, பிரபுவான, நான்முகரான, மகாதேஜஸ்பொருந்திய பிரம்மா, முனிபுங்கவரான அவரை (அதாவது வால்மீகியை) காண தாமே வந்தார். அங்கே வால்மீகிஅவரை கண்டு, உடனடியாக எழுந்திருந்து, மிகவும் வியப்புற்றவராய், பேச்சை அடக்கினவராய், தண்டனிட்டு வணங்கி, கரங்களை குவித்தவராகி நின்றார். அந்த (பிரம்ம) தேவரை பாத்தியம், அர்க்கியம், ஆசனம், வந்தனம் இவைகளால் பூஜித்தார். இவரை விதிப்படி வணங்கி, சரிவற்ற நலத்தை விசாரித்தார்.

இப்பொழுது பகவான் (அதாவது பிரம்ம தேவர்) மிகவும் அர்ச்சிக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து, அப்பால் மகரிஷி வால்மீகிக்கு நியமித்தார். அவரும் பிரம்மாவினால் ஆணையிடப்பெற்றவராய் ஆசனத்தில் அமர்ந்தார். சாட்சாத் உலகின் பிதாமகரான அவர் (அதாவது பிரம்ம தேவர்) அமர்ந்திருந்த பொழுது, அதிலேயே லயித்த மனதோடிருந்த வால்மீகி அப்பொழுது தியானத்தை அடைந்திருந்தார். பகையால் பீடிக்கப்பட வேண்டுமென்கிற புத்தியுடையவனான பாபாத்மாவால் கஷ்டம் செய்யப்பட்டது. எவன் அப்படி மதுரமாய் கூவிக்கொண்டிருந்த கிரௌஞ்சத்தை காரணமின்றிக் கொல்வான்?’

சோகத்தில் மூழ்கிய அவர், மீண்டும் பெண் கிரௌஞ்சத்தையே சிந்திக்கின்றவராய், துக்கிக்கின்றவராய் ஆகி, சற்றுநேரம் இந்த ஸ்லோகத்தையே உள்ளுக்குள் உச்சரித்தார். அதனால் பிரம்மா முனிபுங்கவரான அவரிடம் சிரித்துக்கொண்டு சொன்னார், ‘உம்மால் உருவாக்கப்பட்டது ஸ்லோகமே. இது விசாரணைக்குண்டான காரியமன்று. பிராமணரே (அதாவது வால்மீகியே), உம்முடைய இந்த வாக்கானது என்னுடைய இச்சையாலேயே உண்டானது. உத்தம ரிஷியே, தாம் (ஸ்ரீ)ராமருடைய சரித்திரம் முழுவதையும் செய்யும். தர்மாத்மாவான, உலகில் குணவானான, தீமானான, தீரனான (ஸ்ரீ)ராமருடைய விருத்தத்தை நாரதரிடமிருந்து உம்மால் கேட்கப்பட்டது எப்படியோ அப்படியே கூறும். ராக்ஷஸர்களுடையவும், செளமித்திரரோடு (அதாவது லக்ஷ்மணரோடு) கூடின தீமானான அந்த (ஸ்ரீ)ராமருடைய ரகசியமானதும், வெளிப்படையானதும் எந்த விருத்தமோ, அப்படியே வைதேஹியினுடைய (அதாவது சீதையினுடைய) வெளிப்படையானதும் அல்லது ரகசியமானதும் யாதொரு விருத்தமோ, அது அனைத்தும் அறியப்படாததாக ஆயினும், உமக்கு முற்றிலும் தெரிந்ததாக ஆகப்போகிறது. இந்த காவியத்தில் உமது வாக்கானது கொஞ்சமும் நிஜமற்றதாக ஆகப்போகிறதில்லை. புண்ணியமான (ஸ்ரீ)ராமகதையை மனோரமமான ஸ்லோகங்களால் அமைந்ததாக செய்யக்கடவீர். பூமியில் மலைகளும், நதிகளும் எதுவரைக்கும் இருக்குமோ அதுவரைக்கும் ராமாயணகதை உலகில் விளங்கப்போகின்றது. மேலும், உம்மால் செய்யப்பட்ட (ஸ்ரீ)ராமருடைய கதை எதுவரையில் விளங்குகிறதோ, அதுவரையில் என்னுடைய உலகங்களில் கீழும், மேலும் எங்கும் நீர் ஸ்திரமாக இருக்கப்போகிறீர்.

यावत् स्थास्यन्ति गिरयः सरितश्च महीतले |
तावद्रामायणकथा लोकेषु प्रचरिष्यति ||

यावद्रामस्य च कथा त्वत्कृता प्रचरिष्यति |
तावदूर्ध्वमधश्च त्वं मल्लोकेषु निवत्स्यसि ||
யாவத் ஸ்தாஸ்யந்தி கிரய: சரிதஷ்ச மஹீதலே |
தாவத்ராமாயணகதா லோகேஷு ப்ரசரிஷ்யதி ||

யாவத்ராமஸ்ய ச கதா த்வத்க்ருதா ப்ரசரிஷ்யதி |
தாவத்தூர்வமதஷ்ச த்வம் மல்லோகேஷு நிவத்ஸ்யதி ||


இவ்விதம் சொல்லி பகவானான பிரம்மா அங்கேயே அப்பொழுதே மறைந்தார். அப்பொழுது பகவானான முனிவர் (அதாவது வால்மீகி) சிஷ்ய சகிதமாய் ஆச்சர்யத்தை அடைந்தார். அன்றியும் அவருடைய சிஷ்யர்கள் அனைவரும் வெகு ஆச்சர்யமடைந்தவர்களாய் இந்த ஸ்லோகத்தை அடிக்கடி சொன்னார்கள். இன்னுமதிகமாய் பிரியமடைந்தவர்களாய் பாடவும் பாடினார்கள். எது சமமான அட்சரங்களையுடைய நான்கு பாதங்களால் மகாத்மாவால் பாடப்பட்டதோ, அந்த சோகமானது, அடிக்கடி சொல்லுவதால் மறுபடி ஸ்லோகத்துவத்தை அடைந்தது. பரமாத்மாவை தியானிப்பவரான அந்த வால்மீகிக்கு முழுமையான ராமாயண காவியத்தை இவ்வாறாய் நான் செய்யக்கடவேன்(என்ற) இந்த நிச்சயம் உண்டாயிற்று. கீர்த்திமானான, புத்திகூர்மையுடைய முனிவர் (அதாவது வால்மீகி) புகழுடைய இந்த (ஸ்ரீ)ராமருடைய புகழை உண்டு பண்ணுகிற அந்த காவியத்தை சிறந்த விருத்தங்கள், அர்த்தங்கள், பதங்கள் நிரம்பின மனோரமமான சமமான அட்சரங்களையுடைய நூற்றுக்கணக்கான ஸ்லோகங்களால் இயற்றினார். அமைந்த ஸமாஸங்கள், சந்திகள் இவைகளையுடைய சமமாயும், மதுரமாயும், சேர்ந்திருக்கிற அர்த்தங்களையுடைய வாக்யங்களால் கோர்க்கப்பட்ட, முனிவரால் இயற்றப்பட்ட ரகுவரருடைய (அதாவது ஸ்ரீராமருடைய) சரித்திரத்தையும், பத்து சிரமுடையோனுடைய (அதாவது ராவணனுடைய) அந்த வதத்தையும் கேட்கச்செய்யுங்கள்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் இரண்டாம் ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment