Monday, December 2, 2019

முதல் ஸர்க்கம் – கதையின் சுருக்கம்


தவம், தனது (வேத) அத்தியயனம் (இவைகளில்) ஈடுபட்டிருப்பவரும், பேச்சில் வல்லவரான, சிறந்தவரான, முனிவர்களுள் மேம்பட்டவரான நாரதரை தபஸ்வியான வால்மீகி விசாரித்தார்.

இவ்வுலகில் இப்பொழுது குணவான் யார்? வீர்யவானும், தர்மமறிந்தவரும், நன்றியுள்ளவரும், சத்திய வாக்கை உடையவரும், திடமான விரதமுடையவரும் எவர்? சரியான நடத்தையுள்ளவர் எவர்? அனைத்து உயிரினங்களிடத்திலும் அன்புடையவர் எவர்? வித்துவான் எவர்? சக்திமிகுந்தவர் எவர்? பிரியமானதாகவேயுள்ள பார்வையுடைவர் எவர்? அடக்கமானவர் எவர்? குரோதத்தை வென்றவர் எவர்? பிரகாசமுடையவரும், பொறாமை அற்றவரும் எவர்? போரில் கோபங்கொண்ட எவருக்கு தேவர்கள் கூட அஞ்சுகிறார்கள்? இதை கேட்டறிய நான் இச்சை கொள்கிறேன். ஏனெனில், என்னுடைய ஆர்வமானது மிகவும் அதிகம். இவ்விதமான நரனை அறிய மகரிஷியே (அதாவது நாரதரே), தாமே தகுதி பெற்றவராய் உள்ளீர்.

வால்மீகியினுடைய இவ்வார்த்தையை கேட்டு, மூவுலகங்களையும் அறிந்த நாரதர் மிகவும் மகிழ்ந்து அப்பொழுதே கேட்கப்படட்டும் என்று சொல்லி (பின்வரும்) வாக்கியத்தை உரைத்தார்.

முனிவரே (அதாவது வால்மீகியே), உம்மால் கூறப்பட்ட குணங்கள், அவைகள் அனேகங்கள். கிடைப்பதற்கரியதும் ஆகும். நான் ஆலோசித்து பின் சொல்கிறேன். அவைகளோடு கூடின நரன் (யாரென்று) கேட்கப்படட்டும். இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்தவர், (ஸ்ரீ)ராமர் என்று ஜனங்களால் அழைக்கப்பட்டவர். சுயகட்டுப்பாடு கொண்டவர், மகாவீர்யர், பிரகாசமானவர், உறுதியானவர், கட்டுப்படுத்துபவர், புத்திமான், நீதிமான், பேச்சாற்றல் கொண்டவர், ஸ்ரீமான், எதிரிகளை அழிப்பவர், விரிந்த தோள்களுடையவர், மகத்தான கரங்களை கொண்டவர், சங்கு போன்ற கழுத்துடையவர், மகத்தான கன்னங்கள் உள்ளவர், விசாலமான மார்புடையவர், மகத்தான வில்லாளர், (தசைகளால்) மறைந்த தோளெலும்புகளை உடையவர், எதிரிகளை வெற்றிகொள்பவர், முழங்கால் வரை நீண்ட கரங்கள் பொருந்தியவர், அழகிய சிரஸும், அழகிய நெற்றியும், அழகிய நடையும் கொண்டவர், (அனைத்தையும்) சமமாய் பெற்றவர், சமமாய் பிரிக்கப்பட்ட அங்கங்களை கொண்டவர், மென்மையான நிறமுடையவர், சக்திவாய்ந்தவர், பெருத்த மார்புடையவர், விசாலமான விழிகளையுடைவர், லக்ஷ்மிவான், சுப லட்சணங்கள் உடையவர், தர்மமறிந்தவர், சத்தியசந்தர், பிரஜைகளின் நன்மையில் பற்றுள்ளவர், புகழ்வாய்ந்தவர், ஞானத்தால் நிறைந்தவர், பரிசுத்தர், (தம்மையடைந்தவர்க்கு) வசப்பட்டு நடப்பவர், கவனமுள்ளவர், பிரஜாபதிக்கு (அதாவது பிரம்மாவிற்கு) சமானர், ஸ்ரீமான், ஆதாரமாய் நிற்பவர், எதிரிகளை அழிப்பவர், ஜீவலோகத்திற்கு ரக்ஷகர், தர்மத்தின் ரக்ஷகர், தனது தர்மத்திற்கு ரக்ஷகர், தனது ஜனத்திற்கு ரக்ஷகர், வேத-வேதாங்கங்களின் தத்துவங்களை அறிந்தவர், மேலும் தனுர்வேதத்தில் தேர்ச்சிபெற்றவர், அனைத்து சாஸ்திரத்தின் தத்துவங்களை அறிந்தவர், ஞாபகமுடையவர், அறிவார்ந்தவர், அனைத்து உலகங்களுக்கும் பிரியர், நல்லவர், அச்சமற்றவர், புத்திசாலி, அவர் கெளஸல்யைக்கு ஆனந்தத்தை விருத்தி செய்பவர், மேலும் அனைத்து குணங்களும் கூடப்பெற்றவர், காம்பீர்யத்தில் சமுத்திரம் போன்றவர், உறுதியில் இமயமலையைப் போன்றவர், வீர்யத்தில் விஷ்ணுவிற்கு சமானர், சந்திரனைப்போல் பிரியமான பார்வையையுடைவர், குரோதத்தில் காலாக்னிக்கு (அதாவது பிரளய அக்னிக்கு) சமானர், மன்னிப்பதில் பூமிக்கு சமானர், கொடையில்  தனதேவனுக்கு (அதாவது குபேரனுக்கு) சமானர், சத்தியத்தில் மற்றொரு தர்மரை (அதாவது தர்மதேவரை) போன்றவர்.

இவ்வாறான குணங்களோடு அமைந்த, சத்திய பராக்கிரமமுள்ள, சிறந்த குணங்களோடு கூடின, குடிமக்களின் நன்மைகளோடு இணங்கின, பிரியமான மூத்த குமாரரான அந்த (ஸ்ரீ)ராமரை பூபதியான (அதாவது அரசரான) தசரதர், குடிமக்களுக்கு பிரியத்தை செய்யும் விருப்பத்தால், யுவராஜ்ய (அதிகாரத்தை) அளிக்க பிரீதியால் இச்சை கொண்டார். அப்போது, (யுவராஜ்ய) அபிஷேகத்திற்குரிய பொருட்களை கண்டு, முன்னமே கொடுக்கப்பட்ட வரமுடையவளான அவருடைய (அதாவது தசரதருடைய) மனையாட்டியான கைகயி தேவி, இவரை (அதாவது தசரதரை), (ஸ்ரீ)ராமருக்கு நாடுகடத்தலையும், பரதருக்கு அபிஷேகத்தையும் வரமாக யாசித்தாள்.

அந்த ராஜாவான தசரதர் சத்தியவாக்கின் காரணமாய், தர்மமெனும் கயிற்றால் கட்டுண்டவராய், பிரிய புதல்வரான (ஸ்ரீ)ராமரை நாடுகடத்தினார். அந்த வீரன் (அதாவது ஸ்ரீராமர்), தந்தையினுடைய வார்த்தையாகிற ஆணையால், கைகேயியினுடைய பிரியத்தின் காரணமாக, பிரதிக்ஞையை காப்பவராய், வனம் சென்றார். வினயத்துடன் கூடினவரான, ஸுமித்திரைக்கு ஆனந்தத்தை பெருக்குகிறவரான, பிரியரான, தமையனான, சகோதரருக்கு அன்புள்ள லக்ஷ்மணர், நாடுகடத்தும் பயணத்திற்கு செல்லவுள்ள சகோதரரான அவரை (ஸ்ரீராமரை), நல்ல சகோதரத்தன்மையை காண்பிக்கும் வகையில் சிநேகத்தால் (ஸ்ரீராமரை) பின்தொடர்ந்தார். (ஸ்ரீ)ராமருடைய பிரிய மனைவியான, பிராணனுக்கு சமமான, நன்மையே செய்பவளான, ஜனக குலத்தில் உண்டானவளான, தேவமாயைப்போன்று கட்டமைக்கப்பட்ட, அனைத்து லக்ஷ்ணங்களோடு கூடினவளான, ஸ்திரீகளுள் உத்தமமான பெண்ணான சீதையும் ஷஷியை (அதாவது சந்திரனை) ரோஹிணி போல், நித்தமும் (ஸ்ரீ)ராமரை பின்தொடர்ந்தாள்.

பட்டணத்து ஜனங்களாலும், தந்தையான தசரதராலும் (வெகு)தூரம் பின்தொடரப்பட்ட (அந்த) தர்மாத்மா (அதாவது ஸ்ரீராமர்), வேடுவர்களுக்கு அதிபதியான, பிரியமான குஹனை அடைந்து, கங்கைக்கரையில் ஸ்ருங்கிவேரபுரத்தில் (ஸ்ருங்கிவேரபுரமானது இன்றைய உத்திர பிரதேச மாநிலத்திலுள்ள அலஹாபாத் எனும் பிரயாகை எனும் ஊரிலிருந்து 45 கி.மீ. தள்ளியுள்ள ஸ்ரீங்கிவேர்பூர் எனும் கிராமமாகும்; அயோத்தியாவிலிருந்து இந்த இடம் 170 கி.மீ. தொலைவிலுள்ளது) ரதசாரதியை விடைகொடுத்தனுப்பினார். (ஸ்ரீ)ராமர் குஹன், லக்ஷ்மணன் (மற்றும்) சீதை சகிதமாய் இருந்தார். அவர்கள் வனத்தோடு வனம் சென்று, அதிகளவு நீருள்ள நதிகளை கடந்து, பரத்வாஜருடைய ஆணையால் சித்திரகூடத்தை (சித்திரகூடமானது இன்றைய மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள சத்னா மாவட்டத்திலுள்ள சித்ரகூட் எனும் நகர பஞ்சாயத்து ஆகும்; அயோத்தியாவிலிருந்து இந்த இடம் 275 கி.மீ. தொலைவிலுள்ளது) அடைந்து, ரம்மியமான இருப்பிடத்தை செய்து, அந்த தேவகந்தர்வர்களுக்கு ஒப்பான மூவர்கள் அந்த வனத்தில் ரம்மியமாய் இருந்துகொண்டு சுகமாய் வசித்தார்கள்.

“(ஸ்ரீ)ராமர் சித்திரகூடத்திற்கு சென்றவளவில் புத்திரசோகத்தால் காயப்பட்டவரான ராஜா தசரதர், குமாரனைக்குறித்து புலம்பிக்கொண்டு அப்படியே ஸ்வர்கத்தை அடைந்தார். அவர் மரித்தபொழுது (பிரம்மரிஷி) வசிஷ்டரை முதன்மையாய் உடைய த்விஜர்களால் (த்விஜர்கள் என்றால் இரு பிறப்பாளர்கள் என்று பொருள். முதல் பிறப்பு இயற்கையாகவும், இரண்டாம் பிறப்பு பரமாத்மாவை உணர்கையிலும் நிகழும்) ராஜ்ய ஆளுகைக்கு நியமிக்கப்பட்டவரான போதிலும் மகாபலவானான பரதர் ராஜ்யத்தை ஒப்புக்கொள்ளவில்லை. வீரரான (ஸ்ரீ)ராமரின் பாதம் (பணிந்து அவரை) மகிழ்விக்கும் பொருட்டு அவர் (பரதர்) வனம் சென்றார். மேன்மையான நடத்தை நிறைந்த அவர் (அதாவது பரதர்), நல்மகாத்மாவான, சத்திய பராக்கிரமமுள்ள (ஸ்ரீ)ராமரிடம் சென்று சகோதரரான (ஸ்ரீ)ராமரை பணிந்தார்.

(ஸ்ரீ)ராமரிடம் தர்மமறிந்த தாமே ராஜாஎன்கிற சொல்லை சொன்னார். உயர்ந்த பெருந்தன்மைகள் கொண்டவரான, கருணை நிறைந்த, பெரும் புகழ்பெற்றவரான, மகாபலவானான, இனிமையானவரான போதிலும், (ஸ்ரீ)ராமர் தந்தையின் உத்தரவினால் ராஜ்யத்தில் இச்சை கொள்ளவில்லை. ஆனபோதிலும், பரதருக்கு முன்பிறந்தவர் (அதாவது ஸ்ரீராமர்), இவருக்கு (அதாவது பரதருக்கு) பாதுகைகளை ராஜ்யத்தை நடத்த பிணையாக கொடுத்து, மேலும் பரதரை மீண்டும் அங்கிருந்து திரும்பிப்போகச் செய்தார். அவர் (அதாவது பரதர்) விரும்பியதை முழுதும் அடையாமல், (ஸ்ரீ)ராமபாதங்களை (அதாவது பாதுகைகளை) தொட்டுக்கொண்டு, (ஸ்ரீ)ராமர் திரும்பிவருவதிலேயே ஆவல்கொண்டு, நந்திக்கிராமத்தில் (நந்திக்கிராமம் இன்றைய உத்திர பிரதேச மாநிலத்திலுள்ளது. பரத குண்டம் என்றும் அழைக்கப்படுகிறது; அயோத்தியாவிலிருந்து இந்த இடம் 21.4 கி.மீ. தொலைவிலுள்ளது) ராஜ்ஜியம் செய்தார்.

பரதர் சென்றபின் ஸ்ரீமானாய் இருந்தும், ஒரே நோக்கமுடையவரான, சத்தியசந்தரான, இந்திரியங்களை வென்றவரான (ஸ்ரீ)ராமர் அவ்விடத்தில் நகரத்து ஜனங்களின் வரவை மீண்டும் எதிர்பார்த்து தண்டகாரண்யத்திற்குள் பிரவேசித்தார். இப்பொழுது தாமரைப்போன்ற விழிகளுடைய (ஸ்ரீ)ராமர் மகாவனத்தினுள் பிரவேசித்து, விராதன் என்கிற ராக்ஷஸனை வதைத்து, ஷரபங்கரையும், ஸுதீக்ஷ்ணரையும், அகத்தியரையும் அப்படியே அகத்தியரின் சகோதரரையும் கண்டார். அகத்தியரின் சொற்படியே இந்திரசம்பந்தமான வில்லையும், வாளையும், அட்சயமான பாணங்களையுடைய இரண்டு அம்புறாத்தூணிகளையும் மிகுந்த பிரீதியுடன் பெற்றுக்கொண்டார். வனவாசிகளுடன் ரிஷிகள் எல்லோரும், அசுரர்கள்-ராக்ஷஸர்கள் இவர்களுடைய வதத்தின்பொருட்டு வனத்தில் வசித்துக்கொண்டிருக்கும் அந்த (ஸ்ரீ)ராமருக்கு அருகே வந்தார்கள். அவர் (அதாவது ஸ்ரீராமர்) வனத்தில் அவர்களுக்கு ராக்ஷஸர்களைப்பற்றி அவ்விதமே செய்வதாக வாக்களித்தார். மேலும், யுத்தத்தில் ராக்ஷஸர்களுடைய வதமானது, அக்னிக்கு ஒப்பாயிருக்கின்ற தண்டகாரண்யவாசிகளான ரிஷிகளுக்கு (ஸ்ரீ)ராமரால் பிரதிக்ஞை பண்ணப்பட்டது.

அங்கு வசிக்கும் அவராலே ஜனஸ்தானத்தில் (அதாவது ஜனஸ்தானம் எனும் காட்டில்) வசிப்பவளான, விரும்பிய உருவம் கொள்ளவல்லவளான சூர்ப்பணகை என்கிற ராக்ஷஸி அங்கபங்கம் செய்யப்பட்டாள். அப்பொழுது சூர்ப்பணகையின் வாக்கியத்தால் உந்தப்பட்டவர்களான அனைத்து ராக்ஷஸர்களையும், கரன் என்பவனையும், த்ரிஷிரஸ் என்பவனையும், தூஷணன் என்கிற ராக்ஷஸனையும், அவர்களுடைய கூட்டாளிகளையும், (ஸ்ரீ)ராமரே ரணகளத்தில் கொன்றார். அந்த வனத்தில் வசித்துவந்தவராலே (அதாவது ஸ்ரீராமராலே) ஜனஸ்தானத்தில் வசித்துவந்த பதினான்காயிர ராக்ஷஸர்கள் அழிக்கப்பட்டவர்களாக ஆனார்கள். ராவணன் உறவினர்களின் அழிவை கேள்வியுற்று, அதனால் குரோதத்தால் உணர்விழந்து, மாரீசன் என்ற பெயர் கொண்ட ராக்ஷஸனை சகாயனாக வேண்டினான். ராவணா, அந்த பலவானோடு உனக்கு விரோதம் பொறுக்கக்கூடியது இல்லை,’ (என்று) மாரீசனாலே அந்த ராவணன் பற்பலவிதமாய் தடுக்கப்பட்டான். ஆனபோதிலும், காலத்தால் உந்தப்பட்டவனான ராவணன் அந்த வாக்கியத்தை மதியாமல் மாரீசனோடு அப்பொழுது அவருடைய (அதாவது ஸ்ரீராமருடைய) ஆஸ்ரமபதத்தை வந்தடைந்தான்.

மாயாவியான அவனைக்கொண்டு (அதாவது மாரீசனைக்கொண்டு) ராஜகுமாரர்கள் இருவரையும் தூரம் போகச்செய்து, ஜடாயு என்கிற கழுகை கொன்று, (ஸ்ரீ)ராமருடைய மனையாட்டியை தூக்கிச்சென்றான். (ஸ்ரீ)ராகவர் மைதிலியை (அதாவது சீதையை) கடத்தப்பட்டவளாய் அறிந்து, அதுவும் தவிர, அடிபட்ட கழுகையும் பார்த்து, சோகத்தால் துன்புறுத்தப்பட்டவராய், கலவரமடைந்த இந்திரியங்களை உடையவராக புலம்பினார். அப்பொழுது, அந்த சோகத்தாலேயே ஜடாயுவென்கிற கழுகை தகனம் செய்து, வனத்தில் சீதையை தேடுகிறவராய், சிதைக்கப்பட்ட உருவங்கொண்ட, காண்பதற்கு கோரமாய் இருந்த கபந்தன் என்ற பெயர் கொண்ட ராக்ஷஸனைக் கண்டார். பெருங்கரம் கொண்ட அவர் (அதாவது ஸ்ரீராமர்) அவனை கொன்று தகனம் செய்தார். அவன் உடனே ஸ்வர்க்கம் சென்றான். மேலும், அவன் அவரிடம், ‘தர்மத்தில் நிபுணத்துவம் பெற்றவளான, தர்மத்தை அனுஷ்டிப்பவளான, பிக்ஷை எடுத்து வாழ்பவளான ஷபரியை சென்று பாருங்கள்.என்று (ஸ்ரீ)ராகவருக்கு சொல்லினான். மகாதேஜஸ் பொருந்தியவரான, எதிரிகளை அழிப்பவரான அவர் ஷபரியிடம் வந்தார். தசரதபுத்திரரான (ஸ்ரீ)ராமர் ஷபரியினால் முறையாய் பூஜிக்கப்பட்டார்.

பம்பை ஆற்றங்கரையில் (பம்பை ஆறு இன்று கேரள மாநிலத்தில் ஓடுகிறது; கேரளாவில் உள்ள மூன்றாவது பெரிய நதியாக விளங்குகிறது; அயோத்தியாவிலிருந்து இந்த இடம் கிட்டத்தட்ட 2,700 கி.மீ. தொலைவிலுள்ளது) ஹனுமான் என்கிற வானரத்துடன் சேர்ந்தார். ஹனுமாருடைய வார்த்தையால் சுக்ரீவரோடும் சேர்ந்தார். மகாபலவானான (ஸ்ரீ)ராமர் ஆதிமுதலாய் நடந்த அந்த விஷயங்கள் எல்லாவற்றையும், விசேஷமாய் சீதையினுடையதும் சுக்ரீவருக்கு சொன்னார். சுக்ரீவர் என்கிற வானரரும், அந்த அனைத்தையும் கேட்டு, (ஸ்ரீ)ராமரிடம் பிரீதியடைந்து உடனே அக்னிசாட்சியாய் நட்புடன்படிக்கை செய்தார். துக்கித்திருக்கிற வானர ராஜனாலே (அதாவது சுக்ரீவராலே) அதன்மேல் (வாலியுடன் கொண்ட) பகைமைக் கதையைக் குறித்து, அனைத்தையும் (ஸ்ரீ)ராமருக்கு நட்பினால் சொல்லப்பட்டது. அங்கே வானரர் (அதாவது சுக்ரீவர்), வாலியினுடைய பலத்தை உரைத்தார். அப்போது (ஸ்ரீ)ராமரால் வாலியின் வதத்தை பற்றியும் பிரதிக்ஞை செய்யப்பட்டது.

சுக்ரீவர் (ஸ்ரீ)ராகவரின் வீர்யத்தில் நித்தம் சந்தேகமுடையவராக இருந்தார். இந்நிலையில், சுக்ரீவர் (ஸ்ரீ)ராகவரிடம் நம்பிக்கையுண்டாகும் பொருட்டு, மாமலைக்கு நிகரான (அசுரன்) துந்துபியின் உத்தம சரீரத்தை காட்டினார். மகாபலவானான, பெருங்கரம் படைத்தவர் (அதாவது ஸ்ரீராமர்) அதன் எலும்புக்கூட்டை பார்த்து, நகைத்து, காலின் கட்டைவிரலினால் முழுவதுமான பத்து யோஜனைக்கு (அதாவது கிட்டத்தட்ட 130 கி.மீ.க்கு) தூக்கிக் கடாசினார். மீண்டும், ஏழு சால மரங்களையும் (சால மரத்தின் விஞ்ஞான பெயர் Shorea robusta ஆகும்), மலைகளையும், ரஸாதலத்தையும் (ஹிந்து நம்பிக்கைப்படி ஏழு கீழுலகங்கள் உள்ளது அதலம், விதலம், சுதலம், தலாதலம், மஹாதலம், ரஸாதலம், பாதாளம்) நம்பிக்கையை உண்டுசெய்கிறவராய் ஒரே பெரும் பாணத்தால் அப்பொழுது பிளந்தார். அதுமுதல், அதனாலே நம்பிக்கையடைந்த, பிரீதிமனமுடையவரான மகாவானரரான அவர் (அதாவது சுக்ரீவர்) (ஸ்ரீ)ராமசகிதராக அப்பொழுது கிஷ்கிந்தை (என்கிற) குகைக்கு திரும்பவும் சென்றார்.

அங்கிருந்து வானரர்களுள் சிறந்தவரான, தங்கம்போன்ற மஞ்சள் நிறத்தவரான சுக்ரீவர் கர்ஜித்தார். அந்த பெரும் நாதத்தால் வானரேஷ்வரன் (அதாவது வாலி) வெளிக்கிளம்பினான். அப்பொழுது தாரையை சம்மதிக்கச் செய்து, சுக்ரீவர் அருகே வந்தான். (ஸ்ரீ)ராகவர் அவ்விடத்தில் இவனை ஓர் பாணத்தாலேயே கொன்றார். (ஸ்ரீ)ராகவர் சுக்ரீவர் வார்த்தையால் வாலியை யுத்தத்தில் கொன்று, அப்பால் அந்த ராஜ்யத்தில் சுக்ரீவரையே ஸ்தாபித்தார். வானரர்களுள் காளையரான அவரும் (அதாவது சுக்ரீவரும்), ஜனகரின் புதல்வியை காண விரும்பியவராய் அனைத்து வானரர்களை அழைத்து திசைகளை (குறித்து) அனுப்பினார்.

அதன்மேல் பலவானான ஹனுமான், ஸம்பாதி எனும் கழுகின் வார்த்தையால் நூறு யோஜனைகள் விரிந்த சமுத்திரத்தை தாண்டினார். ராவணனால் பரிபாலிக்கப்பட்ட இலங்கை எனும் பட்டணத்தை அடைந்து, அங்கு அசோகவனத்திற்கு சென்று, தியானித்துக்கொண்டிருக்கிற சீதையை கண்டார். அடையாளத்தை தெரியப்படுத்தியும், முயற்சியை தெரிவித்தும், வைதேகியை (அதாவது சீதையை) ஆசுவாசப்படுத்தியும். வாயிற் தோரணத்தை சிதைத்தார். ஐந்து சேனாதிபதிகளையும், ஏழு மந்திரி புத்திரர்களையும் வதைத்து, சூரனான அக்ஷனையும் பொடிபடுத்தி பிடிபட்டார். வீரரான (அந்த) மகாவானரர் பிதாமஹரின் (அதாவது பிரம்மதேவரின்) வரத்தால், தன்னை முயற்சியேதுமின்றி அஸ்திரத்தினின்று விடுபட்டதாக அறிந்து, கயிற்றை கட்டியவர்களான அந்த ராக்ஷஸர்களை பொறுத்துக்கொண்டு, மைதிலியான சீதையை தவிர, இலங்கை பட்டணத்தை தகித்து உடனே அவ்விடத்திலிருந்து பிரியத்தை சொல்வதற்காக திரும்பி வந்தார்.

அளவில்லா புத்தியை உடையவரான அவர் மகாத்மாவான (ஸ்ரீ)ராமரை அடைந்து, பிரதக்ஷிணம் செய்து கண்டேன் சீதையைஎன்று நடந்தவாறு தெரிவித்தார். அதன்மேல் சுக்ரீவ சகிதராய் சமுத்திரத்தினுடைய கரைக்கு சென்று, ஆதித்தியனுக்கு (அதாவது சூர்யனுக்கு) நிகரான பாணங்களால் சமுத்திரத்தை கலக்கினார். நதிகளின் பதியான சமுத்திரமும், உண்மையுருவை காட்டினார். சமுத்திரத்தின் வார்த்தையாலேயே நளனைக்கொண்டு ஸேதுவையும் (அதாவது அணையையும்) அமையச்செய்தார். (ஸ்ரீ)ராமர் அதன்வழியே இலங்கை பட்டணத்தை அடைந்து, யுத்தத்தில் ராவணனை வதைத்து, சீதையை அடைந்து, பின் பெரும் அவமானத்தை அடைந்தார். அதனால் அவளைப் பார்த்து (அதாவது சீதையைப் பார்த்து) ஜனசபையில் கொடும் வார்த்தையை (ஸ்ரீ)ராமர் சொன்னார். பத்தினியான அந்த சீதை (அதனை) பொறுக்காதவளாய் அக்னியில் பிரவேசித்தாள்.அதிலிருந்து அக்னியின் வார்த்தையால் சீதையை களங்கமற்றவள் என அறிந்து, (ஸ்ரீ)ராமர் மிகக் களிப்புற்றவராய் விளங்கினார். அனைத்து தெய்வங்களாலும் பூஜிக்கப்பட்டார்.

மகாத்மாவான (ஸ்ரீ)ராகவருடைய அந்த மகத்தான காரியத்தால், அசைவன மற்றும் அசையாதனவைகளோடு கூடின, தேவரிஷிகணங்களோடு கூடின மூவுலகும் மகிழ்வடைந்தது. அப்பொழுது (ஸ்ரீ)ராமர், விபீஷணரையே இலங்கையில் ராக்ஷஸேந்திரராக பட்டாபிஷேகம் செய்து, எடுத்த காரியத்தை முற்றும் முடித்தவராய், கவலை நீங்கியவராய் மிகவும் மகிழ்ந்தார். (ஸ்ரீ)ராமர் தேவர்களிடமிருந்து வரத்தை பெற்று, முழு வானரர்களை எழுப்பி, நண்பர்களால் சூழப்பட்டவராய், புஷ்பகவிமானத்தில் அயோத்யாவிற்கு புறப்பட்டார். சத்திய பராக்கிரமரான (ஸ்ரீ)ராமர் பரத்வாஜரின் ஆஸ்ரமத்திற்கு சென்று, பரதரின் சமீபத்திற்கு ஹனுமாரை (ஸ்ரீ)ராமர் அனுப்பினார். பிறகு, சுக்ரீவ சகிதராய் அந்த புஷ்பகத்தில் ஏறி, அப்பொழுது (தனது பூர்வ) கதையை மீண்டும் சொல்லிக்கொண்டு நந்திகிராமத்தை அடைந்தார். பாவமற்றவரான (ஸ்ரீ)ராமர் சகோதர சகிதராய், நந்திகிராமத்தில் ஜடையை களைந்து, சீதையை கூடவைத்துக்கொண்டு ராஜ்யத்தை மறுபடி கைக்கொண்டார்.

ஜனங்கள் பெருமகிழ்ச்சி அடைந்தாக ஆனது. சந்தோஷித்ததாக ஆனது. போஷிக்கப்பட்டதாக  ஆனது. நல் தர்மங்களையுடையதாக  ஆனது. ஆரோக்கியமாக  ஆனது. வியாதியற்றதாக  ஆனது. பஞ்சத்தினால் உண்டாகும் பயம் இல்லாததாக ஆனது. புருஷர்கள் ஓரிடத்திலும், கொஞ்சமும் புத்திரமரணத்தை காணமாட்டார்கள். பெண்கள் விதவைகள் ஆகாதவர்களாக எப்பொழுதும் பதிவிரதைகளாக இருப்பார்கள். அக்னியாலுண்டாகிற பயம் கொஞ்சமும் இல்லை. மேலும், மிருகங்கள் நீரில் மூழ்கி மரணமடைகிறதில்லை. வாயுவினால் உண்டாகிற பயம் கொஞ்சமும் இல்லை. அப்படியே, ஜ்வரத்தால் உண்டாவதுமில்லை. அங்கு பசியால் உண்டாகிற பயமும் இல்லை. அப்படியே திருடர்களுடைய பயமும் இல்லை. நகரங்களும், தேசங்களும் தன-தானியங்களோடு கூடினவைகளாக ஆயின. கிருதயுகத்தில் எப்படியோ அப்படியே அனைவரும் மகிழ்ந்திருந்தார்கள். நூற்றுக்கணக்கான அஷ்வமேத யாகங்களாலே, அப்படியே, ஏராளமான தங்கத்தைக்கொண்டு யாகங்களைச் செய்து, கோடிக்கணக்கான பசுக்களை கொடுத்து, கணக்கில்லாத தனத்தை அந்தணர்களுக்கு கொடுத்து, பெரும் புகழ் உடையவராய் பிரம்மலோகத்தை அடையப்போகிறார். (ஸ்ரீ)ராகவர் ராஜவம்சங்களை நூறுமடங்கு ஸ்தாபிக்கப்போகிறார். இந்த உலகத்தில் நான்கு வர்ணத்தையும் அவரவர் தர்மத்தில் நடப்பிக்கப்போகிறார். (ஸ்ரீ)ராமர் பதினோறாயிர வருடங்கள் ராஜ்யத்தை ஆண்டு பிரம்மலோகத்தை அடையப்போகிறார்.

பவித்திரமான, பாவமற்ற, புண்ணியத்தை அளிப்பதான, மேலும், வேதங்களோடு ஒப்பான இந்த (ஸ்ரீ)ராமருடைய சரித்திரத்தை யார் படிக்கிறாரோ (அவர்) அனைத்து பாவங்களிலிருந்து விடுபெறுகிறார். ஆயுளைக்கொடுக்கவல்ல இந்த ராமாயண கதையை படிக்கிற நரன் நற்பிள்ளை (மற்றும்) பேரன்களோடும், சுற்றத்தாரோடும் கூடினவனாய் சரீரத்தைவிட்டு ஸ்வர்கத்திற்கு உயர்கிறான். படிப்பவன் த்விஜனாக இருந்தால் வாக்குவன்மையை அடைவான். க்ஷத்ரியன் பூமிபதித்தன்மையை அடைவான். வணிகம் செய்யும் ஜனம் வியாபாரத்தில் லாபத்தை பெறுவான். மேலும், சூத்திரன் மகத்துவத்தை அடைவான்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் முதலாம் ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment